முகப்புவிமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம் - Savarakathi Movie Review

  | Friday, February 09, 2018

Rating:

சவரக்கத்தி விமர்சனம் - Savarakathi Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி ட்ராமா
 • நடிகர்கள்:
  ராம், மிஷ்கின், பூர்ணா
 • இயக்குனர்:
  ஜி.ஆர்.ஆதித்யா
 • தயாரிப்பாளர்:
  LONE WOLF புரொடக்ஷன்ஸ்
 • எழுதியவர்:
  ஜி.ஆர்.ஆதித்யா
 • பாடல்கள்:
  அரோல் கொரேலி

எதிர்பாராத காரணத்துக்காக ஒரு தாதாவுக்கும், முடிதிருத்துபவனுக்கும் இடையில் வரும் சண்டை, அதன் விளைவுகளை நிறைய காமெடி, கொஞ்சம் எமோஷன் கலந்து சொல்கிறது சவரக்கத்தி.

பொய் பேசுவது, அளந்துவிடுவது, உண்மையை மறந்தும் பேசாதது என பொய்கள் சூழ ஒரு வாழ்க்கை வாழ்பவர் பிச்சை (ராம்). மாலையில் பரோல் முடிந்து சிறை திரும்ப வேண்டியவர் மங்கா (மிஷ்கின்). இந்த இருவரும் மோத நேரும் சூழல் வர, சிறைக்குச் செல்லும் முன் ராமைக் கொலை செய்துவிட்டுதான் செல்வேன் என பூவா, தலையா போட்டு முடிவு செய்கிறார் மிஷ்கின். இதற்கு இடையில், தன் தம்பி திருமணத்துக்காக நிறைமாத கர்பத்துடன், இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கணவர் ராமுடன் செல்கிறார் பூர்ணா. அதே நேரத்தில் ராமைக் கொலை செய்ய வெறியுடன் அலைகிறார் மிஷ்கின். கொலை செய்யும் அளவுக்கு, இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை, ராமுக்கு என்ன ஆகிறது போன்ற ஓரேநாளில் நடக்கும் சம்பவங்களின் முடிவு என்ன என்பதைச் சொல்லி நிறைவடைகிறது படம்.

மிஷ்கினின் எழுத்தில் உருவான படம் என்பதால், கதாபாத்திரங்களின் நடிப்பு, காட்சியமைப்பு எனப் பலவற்றிலும் மிஷ்கினின் சாயல் அப்படியே இருக்கிறது. ஆனால், அதில் தன் தனித்துவத்தைக் காட்ட மெனக்கெட்டு நம்பிக்கையான அறிமுகம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.

மாலை திரும்பி சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பு, அளவான வசனம், முடிந்த வரை முகபாவனைகள் மூலமாகவே உணர்வுகளைக் கடத்துவது என அசத்துகிறார் மிஷ்கின். இதற்கு அப்படியே எதிரான பாத்திரம் ராமுக்கு. மாற்றுத் திறனாளியான பூர்ணாவிடம் கத்தி பேசியபடி அதை நடித்தும் காட்டுவது, பூவாங்கும் இடத்தில் நானும் பூ வியாபாரிதான்யா என சலுகை கேட்பது, "என்னோட ஒத்தக்கைய எடுக்கணும்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்டா..." எனத் திருட்டுத் திருமணம் செய்யும் மச்சானிடம் கெஞ்சுவது, க்ளைமாக்ஸ் காட்சி என ராம் நடிப்புத் தனித்துத் தெரிகிறது. வெகுளித்தனமான, சில காட்சிகளில் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய என அந்தக் காட்சியில் என்ன தெவையோ அதை கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார் நடிகை பூர்ணா. மாற்றுத் திறனாளி வேடத்தை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் ரசிக்கும் படியாகக் கொடுத்தும் அசத்துகிறார். நடிகையாக பூர்ணாவுக்கு இது மிக முக்கியமான படம் என்றே கூறலாம். குறைந்த காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். பெத்தப்பாவாக வரும் மோகன், கௌதமனாக வரும் அஷ்வத், ராமின் மகன் மற்றும் மகளாக வரும் குழந்தைகள், இங்கிலிஷ் பைத்தியமாக வரும் ஷாஜி என ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ராமுக்கான சாபத்தை தரும் சிறுவன், தன் வேண்டுதலின் பலனை உடனடியாகப் பார்த்து உறைந்து போகும் தாய், ராமை வெட்டுவதற்காக மிஷ்கின் எடுத்த கத்தி பயன்படும் இடம், பொய்யா மொழி தேநீர் கடை, பரிசுத்தம் மிதிவண்டிக் கடை எனப் படம் முழுக்க அழகழகான காட்சியமைப்புகள் கவர்கிறது. ஆனால், இயல்பை மீறிய கதாபாத்திரங்களின் நடவடிக்கை, சில போரான காமெடி வசனங்கள் சின்னக் குறைகளாகத் தெரிகிறது.

மிஷ்கின் இருக்கும் படங்கள் என்றாலே இருட்டு என்பதை உடைப்பதாய், வி.ஜ.கார்த்திக்கின் ஒளிப்பதிவு அத்தனை அழகு. படம் முழுக்க பட்டப்பகலில் நடக்கிறது, காட்சியின் உணர்வுக்கு ஏற்ற ஒளியும், கோணமும் மிகச்சிறப்பு.

படத்தின் மிகப்பெரும் பலம் அரோல் கொரேலியின் இசை. படத்தின் ஓட்டத்தில் வரும் ஒரே ஒரு பாடலான, அண்ணார்ந்து பார் வரும் இடம் கண்டிப்பாக ஆடியன்ஸுக்கான படத்தின் இணைப்பை உணரச் செய்யும். இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான படம். படத்தின் சில காட்சிகள் வேகத்தைக் குறைப்பதாய் உணரும் முன்பு, ஒரு பரபர சம்பவத்தை வைத்து கோர்த்திருந்த எடிட்டரின் உழைப்பு குறிப்பிட வேண்டியது.

மிஷ்கின் படம்தானே என்கிற சாயல் படத்திற்கு பலமாக இருக்கும் அதே வேளையில் படத்தின் பலவீனமாகவும் இருக்கிறது. இது ஒரு காமெடிப்படம் என்ற அறிமுகத்துக்குப் பின், படத்தில் எதிர்பார்த்த காமெடி விஷயங்கள் மிகக் குறைவாகவே இருந்தது. பல இடங்களில் வசனங்களில் இருக்கும் அசௌகர்யம் வரவழைக்கும் வார்த்தைகளை காமெடிக்காகப் பயன்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்தது.

பொய்யான ஒருவனுக்கும் - தீமையான ஒருவனுக்கம் இடையில் ஏற்படும் சண்டையில் என்ன நடக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொன்ன விதம் அருமை. கண்டிப்பாக இது ஒரு காமெடிப் படமாக கவர்வதைவிட, உணர்வுப் பூர்வமான அனுபவமாக உங்கள் மனதில் கூர்மையான கீரல் வரையும் இந்த சவரக்கத்தி.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்