முகப்புவிமர்சனம்

செம திரைப்பட விமர்சனம் - Sema Movie Review

  | Friday, May 25, 2018

Rating:

செம திரைப்பட விமர்சனம் - Sema Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  ஜி வி பிரகாஷ், அர்த்தனா விஜயகுமார், யோகி பாபு, மன்சூர் அலி கான்
 • இயக்குனர்:
  வல்லிகாந்த்
 • தயாரிப்பாளர்:
  பாண்டிராஜ்
 • எழுதியவர்:
  வல்லிகாந்த்
 • பாடல்கள்:
  ஜி வி பிரகாஷ்

2013ஆம் ஆண்டில் வெளியான வெற்றிப்படமான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவதாக இருந்தது. சத்யராஜ், ராஜ்கிரணுடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக இருந்த இத்திரைப்படம் திடீரென கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக, இயக்குனர் பாண்டியராஜின் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கத்தில் 'செம' என்கிற திரைப்படத்தில் நடிப்பார் என்கிற அறிவிப்பு வெளியானது. கிராமத்து காமெடி கதையை கொண்ட இத்திரைப்படம், இயக்குனரின் நண்பர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என சொல்லப்பட்டது.

தன் மகன் குழந்தைவேலுவிற்கு (ஜி.வி.பிரகாஷ்) இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் செய்யவில்லை எனில், ஆறு வருடங்கள் காத்திருக்க நேரிடும் என ஜோசியர் சொன்னதை கேட்டு பதறிப்போகும் அவனது தாய் ஊர் முழுக்க அவனுக்கு பெண் தேடி அலைகிறார்கள். காய்கறி வியாபாரம் செய்யும் குழந்தைவேலுவை எல்லா பெண்களும் நிராகரிப்பதால், மனமுடைந்து போகிறான். இந்நிலையில் வெளியூருக்கு பெண் பார்க்க செல்கையில் மகிழினி (அர்த்தனா பினு) குடும்பத்தினருக்கு குழந்தைவேலுவை பிடித்துப் போகவே, மகிழினியும் அவனும் ஒருவரையொருவர் விரும்ப தொடங்குகின்றனர். ஆனால், நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் வேளையில் எம்.எல்.ஏ மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்க ஒரு வாய்ப்பு வருவதால், குழந்தையின் குடும்பத்தினரை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் மகிழினியின் தந்தை. அதன் பின், என்ன நடக்கிறது? குழந்தைவேலுவும் மகிழினியும் திருமணம் செய்துகொண்டார்களா இல்லையா? என்கிற கேள்விகளுக்கான பதிலை இரண்டாம் பாதி சொல்கிறது.

மொத்தம் இரண்டு மணிநேரம் மட்டுமே ஓடக்கூடிய இத்திரைப்படத்தை முழுக்க முழுக்க வசனங்களை நம்பியே எடுத்திருக்கிறார்கள் என சொல்லலாம். திரைக்கதைக்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் வசனங்களாலேயே சிரிக்க வைத்துவிடலாம் என எண்ணி களத்தில் இறங்கியிருப்பார்கள் போலும், ஆங்காங்கே சிரிக்க வைக்கவும் செய்கிறார்கள். முதல் பாதி முழுக்க பெண் பார்க்கும் படலம், ஜி.வி.பிரகாஷ் நிராகரிக்கப்படுவது, அவரது அம்மா அழுது புலம்புவது என ஒரே மாதிரியாகவே நகர்வது ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்படிக்கவே செய்கிறது. அதிலும், காய்கறி விற்பதை மறைக்கிறேன் பேர்வழி என ஷேர் மார்க்கெட் என்றெல்லாம் சொல்வது, நாயகி தனக்கு ஓகே சொன்னதும் தன்னை நிராகரித்த பெண் ஒவ்வொருவராக பார்த்து கலாய்ப்பதெல்லாம் ரசிக்கும்படியாகவே இல்லை. 'பூமி சுத்துறதை விட, பசங்கள்லாம் பொண்ணுங்களை அதிகம் சுத்துறோம்டி' என்கிற ரீதியில் பெண்களின் விருப்பமில்லாமல் அவர்களை பின்தொடர்ந்து தொல்லை செய்வதையெல்லாம் புகழும் கண்றாவியான .வசனங்களும் படத்தில் உண்டு. முதல் பாதியை விட இரண்டாம் பாதி, ஓரளவுக்கு ரசிக்கும்படியே இருந்தது. கதையில் பெரிதாக பிரச்சினை திருப்பங்கள் என எதுவுமே இல்லாததால் சலிப்படைய செய்தாலும் கூட, கலகலவென நகரும் காட்சிகளால் இரண்டாம் பாதி காப்பாற்றப்படுகிறது.

முதல் பாதியை தனியாளாக சுமப்பது யோகி பாபு எனில், இரண்டாம் பாதியை காப்பாற்றுவது மன்சூர் அலிகான் மற்றும் கோவை சரளாவின் அட்டகாசமான காமெடி கூட்டணி. பல இடங்களில் தொடர்ச்சியாக ஸ்கோர் செய்கிறார் மன்சூர் அலிகான். யோகி பாபு வரும் காட்சிகளில் எல்லாமே விசில் பறக்கிறது, அவர்தான் படத்தின் ஹீரோ என்றே கூட சொல்லலாம். பெண் பார்க்கும் காட்சிகளில் வரும் அத்துமீறிய வசனங்களை மட்டும் குறைத்திருக்கலாம். 'தினமும் ஜிம்முக்கு போறீங்களா?' என கேட்பதில் தொடங்கி, கருப்பாக இருக்கும் பெண்ணை பார்த்து அழகாக இல்லை என கிண்டல் செய்வது வரை நிறைய உண்டு. நாயகி அர்த்தனா பின்னு துறுதுறுவென அழகாக சுற்றி திரிகிறார்; தன் நடிப்புத்திறனை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லாவிடினும் கூட, கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் மிளிர்கிறார். படத்தின் மிகப்பெரிய மைனஸ் என குறிப்பிட வேண்டுமெனில், அது நாயகன் ஜி.வி.பிரகாஷ் அவர்களே. காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், நடனம், முகபாவனைகள், உடல்மொழி என அனைத்திலுமே இன்னமும் முதல் பட நாயகனைப் போல திணறவே செய்கிறார். ஏழெட்டு படங்களில் நாயகனாக நடித்த பின்பும் கூட கொஞ்சமும் கூட நடிக்க முயற்சிக்காமல் இருப்பது, மொத்த படக்குழுவினரின் உழைப்பையுமே பாழாக்குவதற்கு சமம் என்பதை ஜி.வி.பிரகாஷ் உணர்ந்தால் நலம். வில்லனாக ஒரு புதுமுக நடிகர் வந்து போகிறார், அந்த கதாபாத்திரத்தையும் அவர் நடிப்பையும் என்னவென்று சொல்வதென்றே விளங்கவில்லை.

'செம' - கண்டிப்பாக, மோசமான படமில்லை. ஆங்காங்கே சிரிக்க வைக்கக்கூடிய ரொம்பவே சுமாரான ஒரு காமெடி திரைப்படம். திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும், பாத்திரப்படைப்புகளிலும் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல பொழுபோக்கு படமாக அமைந்திருக்கக்கூடும்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்