முகப்புவிமர்சனம்

போதை ஹீரோவை துரத்தும் பிரச்சனை! - செம போத ஆகாதே விமர்சனம் - Semma Botha Aagathey movie review

  | Saturday, June 30, 2018

Rating:

போதை ஹீரோவை துரத்தும் பிரச்சனை! - செம போத ஆகாதே விமர்சனம் - Semma Botha Aagathey movie review
 • பிரிவுவகை:
  காமெடி
 • நடிகர்கள்:
  அதர்வா, கருணாகரன், அனைகா, மிஷ்டி
 • இயக்குனர்:
  பத்ரி வெங்கடேசன், ராதாகிருஷ்ணன்
 • தயாரிப்பாளர்:
  அதர்வா
 • எழுதியவர்:
  பத்ரி வெங்கடேசன்
 • பாடல்கள்:
  யுவன் ஷங்கர் ராஜா

போதையில் எடுக்கும் ஒரு முடிவால், பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ எப்படி மீள்கிறார் என சொல்கிறது `செம போத ஆகாதே'

ரமேஷ் (அதர்வா) தன் காதலியுடன் ஏற்பட்ட சண்டையால் திருமணம் நின்று போனதை நினைத்து, தாடி வளர்த்து, குடித்து, நண்பன் நந்துவிடம் (கருணாகரன்) புலம்பித் தவிக்கிறார். நண்பனின் சோகத்தை மறக்கச்செய்ய ஒரு கிளுகிளுப்பான யோசனை சொல்கிறார் கருணாகரன். அதைக் கேட்டு வீட்டுக்கு ஒரு விலைமாதுவை அழைத்து வருகிறார் அதர்வா. சில சரசங்கள், ஒரு பாடலுக்குப் பிறகு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. என்ன நடந்தது? அந்த பிரச்சனையில் இருந்து அதர்வா எப்படி தப்பிக்கிறார்? என்பதை காமெடி சேர்த்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

காதலியை சமாளிக்க முடியாமல் திணறுவது, திடீரென நடக்கும் அசம்பாவிதத்தை எப்படிக் கையாள்வது எனக் குழம்புவது, எல்லோருக்கும் பயந்து பதறுவது என அதர்வா தனது கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார். படத்தின் காமெடிக்கு பெரிய துணை கருணாகரனின் சுவாரஸ்ய ஒன்லைனர்கள். அதர்வாவின் வீட்டுக்குள், பின்பு அதர்வாவிடமும் சிக்கிக் கொண்டு கருணாகரன் படும் பாடு எல்லாமே ரகளை ரகம். தேவதர்ஷினி வந்து சிரிப்பூட்டும் காட்சிகளும் சிறப்பு. பாடல்கள் தவிர படத்தில் வரும் காட்சிகளின் அடிப்படையில் ஹீரோயின் மிஷ்டிக்கு சிறிய வேடம்தான். அதிலும் ஒட்டாதா லிப் சிங், சுமாரான நடிப்பு என வந்து போகிறார். படத்தின் திருப்பத்திற்கு காரணமாக இருக்கும் அனைகா சோட்டி நடிப்பு நன்று. ஜான் விஜய், அர்ஜய் ஆகியோர் அடியாட்கள் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். ஆடுகளம் நரேன், எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, சேத்தன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள்.

சீரியசான பிரச்சனையில் சிக்கும் ஹீரோ, அதை சரி செய்யும் பயணத்தில் நடக்கும் காமெடிகள் என எடுத்துக் கொண்ட களத்துக்கு ஏற்ப கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அவை மட்டும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திவிடுமா? தமிழில் பஞ்சதந்திரம், தாம் தூம், வாமனன், பிரியாணி எனப் பலமுறை பார்த்த அதே டைப் கதைதான். ஒரு மர்மமான சம்பவத்தில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ, அதை சரி செய்வதில் நடக்கும் சிக்கல்கள், காமெடிகள், சில திருப்பங்கள் என இதே டைப்பில் வெளிவந்த படங்கள் போலவே நகர்வதால் புதிதாக ஒன்றும் இல்லை என்ற குறை இருக்கிறது.

வசனகர்த்தா ராதாகிருஷ்ணனின் பல ஒன்லைனர்கள் சிரிப்பு வெடி கொளுத்துகிறது. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் படத்தை மிக கலர்ஃபுல்லாக காட்சிபடுத்தியிருக்கிறார். பளபள ஃப்ளாட், பரண் இடுக்கு, மலை மேடு என அத்தனையும் அதன் அழகோடு கொடுத்திருக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு படத்தை ஓரளவு விறுவிறுப்பாக செலுத்த முயற்சிக்கிறது. ஆனால் திரைக்கதை அந்த முயற்சியை தேங்க வைக்கிறது. யுவனின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கும்படி இல்லை என்றாலும், பின்னணி இசையால் படத்தை சுறுசுறுப்பாக்குகிறார்.

அதர்வா - மிஷ்டி இடையேயான காதல், அவர்களுக்குள் ஏற்படும் சண்டை என எதிலும் அழுத்தம் இல்லை என்பதால் அது வெறுமனே காட்சிகளாக மட்டும் கடந்து போகின்றன. படத்தில் தற்செயலாக நடக்கும் பல விஷயங்களில் செயற்கைத் தனம் மிகுந்து இருப்பதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. காமெடி படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? இளையராஜா ரசிகர் என்றதும் அதர்வாவை விடுதலை செய்வது எல்லாம் ரொம்ப டூமச். அவ்வளவு பயந்து நடுங்கும் அதர்வா திடீரென ஆக்ஷன் ஹீரோவாகி அடித்து நொறுக்குவது அவ்வளவு நம்பும்படியாக இல்லை. டெக்னாலஜி வளர்ந்துவிட்டதுதான், டிஜிட்டல் இந்தியா ஜொலிக்கிறதுதான். ஆனால், இப்போதைய சினிமாக்களில், ஹீரோவுக்கு ஒரு சிம் கம்பெனி நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் தேவைப்படும் நபரை ட்ராக் செய்கிறார். ஆனால், பார்க்கும் நமக்குதான் பகீர் என இருக்கிறது. மறுபடியும் அதே சொல்லிக் கொள்கிறேன். காமெடிப் படம் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா?

இன்னும் சிறப்பான திரைக்கதையை அமைத்து ஹேங் ஓவர் ஏற்றியிருக்க வேண்டிய படம். ஆனால், லேசான மிதப்பை மட்டுமே தருகிறது. புதிதாக எதுவும் தேவை இல்லை, ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்றால் `செம போத ஆகாதே' நல்ல தேர்வுதான்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்