முகப்புவிமர்சனம்

ஸ்கெட்ச் திரைப்பட விமர்சனம் - Sketch Movie Review

  | Friday, January 12, 2018

Rating:

ஸ்கெட்ச் திரைப்பட விமர்சனம் - Sketch Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  விக்ரம், தமன்னா, ஸ்ரீ பிரியங்கா
 • இயக்குனர்:
  விஜய் சந்தர்
 • தயாரிப்பாளர்:
  மூவிங் பிரேம்
 • எழுதியவர்:
  விஜய் சந்தர்
 • பாடல்கள்:
  தமன்

கடந்த 10 ஆண்டுகளில், 'தாண்டவம்' 'ராஜபாட்டை' 'கந்தசாமி' '10 எண்றதுக்குள்ள' உட்பட விக்ரம் நடித்த பெரும்பாலான ஹீரோயிச படங்கள் தொடர்ச்சியாக படுதோல்வியடைந்து வருகின்றன. 'இருமுகன்' திரைப்படத்திற்கு பின், 'வாலு' திரைப்படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்கிற அறிவிப்பு வந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதமே படப்பிடிப்பு முடிந்த இத்திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரவேண்டியிருந்தது. பின்னர், சில தாமதங்களுக்கு பின் பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகியிருக்கிறது 'ஸ்கெட்ச்'.

லோன் எடுத்து கார், பைக் வாங்கிவிட்டு வட்டி கட்டத்தவறியவர்களின் வண்டிகளை பறிமுதல் செய்யும் வேலை செய்பவன் ஜீவா (விக்ரம்). எந்த கஷ்டமான வேலையையும் பக்காவாக திட்டம் போட்டு முடிக்கும் அவனை, அவனது நண்பர்களும் முதலாளியும் 'ஸ்கெட்ச்' என்றே அழைக்கின்றனர். அப்படியொரு ஸ்கெட்ச் சம்பவத்தில், குமார் என்கிற ஒரு பெரிய தாதாவுடன் ஸ்கெட்ச் மோத நேரிடுகிறது. ஸ்கெட்சையும் அவனது நண்பர்களையும் கொல்ல குமார் திட்டமிட, ஸ்கெட்ச் எப்படி அதை எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் கதை.

படம் முடிந்து வெளியே வந்ததும், 2 கேள்விகள் மட்டுமே என் மனதில் எழுந்தது:
1. எந்த நம்பிக்கையில் அல்லது எதற்காக இப்படியொரு படத்தில் விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்டார்?
2. இந்த கதையை விக்ரமிடம் சொல்லி எப்படி இயக்குனர் சம்மதிக்க வைத்திருப்பார்?

விக்ரம் போன்ற முன்னணி நடிகர் நடிப்பதற்கு எந்தவித ஸ்கோப்போ, தேவையோ இல்லாத இந்த கதையில் எது அவரை அதிகம் ஈர்த்தது என்றுதான் புரியவில்லை. வாகனங்களை பறிமுதல் செய்துகொண்டு, சின்ன சின்ன சண்டைகளும் அடாவடியும் செய்து சீன் போட்டு திரியும் ஹீரோ கதாபாத்திரத்திற்கு ராகவா லாரன்ஸோ அல்லது சுந்தர்.சி போன்ற ஒருவர் நடித்திருந்தாலே போதுமே. விக்ரம் ரசிகர்களையோ அல்லது மாஸ் மசாலா கமர்ஷியல் படங்களை விரும்புபவர்களையோ கூட எந்த விதத்திலும் திருப்திப்படுத்தாது இத்திரைப்படம்.

'ஸ்கெட்ச்' படத்தில் காதல் காட்சிகள், ஆக்ஷ்ன், செண்டிமெண்ட் என எல்லாமே 20 ஆண்டுகள் பழமையானதாகேவ இருந்தது. படம் முழுக்க ஒரு சண்டைக்காட்சி, ஒரு காதல் காட்சி, ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி, ஒரு காதல் காட்சி, ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி, ஒரு காதல் காட்சி, ஒரு பாடல் என்கிற டெம்ப்ளேட்டிலேயே ஓடிக்கொண்டிருந்தது. முதல் பாதி முழுக்க கதை என எதுவுமே இல்லாமல், மாஸ் சீன் என்கிற பெயரில் ஹீரோ ஸ்லோ-மோஷனில் நடந்துகொண்டே சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், ஹீரோயின் பின்னால் ஹீரோ சுத்தும் காட்சிகள் மட்டுமே இருந்தது. இப்படத்தின் ரொமான்ஸ் காட்சிகளை இயக்குனர் விவரிக்கும் பொழுது விக்ரமிற்கு போரடித்ததோ இல்லையோ தெரியவில்லை; ஆனால், சத்தியமாக ரசிகர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. விக்ரமே இதே போன்ற காதல் காட்சிகளை ஏற்கனவே 'பீமா' 'ராஜபாட்டை' 'ஜெமினி' போன்ற படங்களில் ஒரு ரவுடி அல்லது அடியாளை ஒரு கல்லூரி மாணவி காதலிப்பதை போன்ற ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துவிட்டார். ஒரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தாலே போதும், stalk செய்தாலே போதும், அவளை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும், அவள் கண் முன்னால் ஹீரோ அடிவாங்கினாலே போதும் - அவளுக்கு தன் மேல் காதல் வந்துவிடும் என பாடம் எடுக்கும் படங்கள் இன்னமும் கூட வந்துகொண்டிருக்கின்றன என்பதே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அது போக, தமன்னா வரும் காட்சிகளிலெல்லாம் ஒரு பாடல் வந்துவிடுகிறது அல்லது பாடல்களில் மட்டும் தான் தமன்னா வந்து போகிறார் என்று கூட சொல்லலாம் (2 மணி நேரம் ஓடும் படத்தில், கிட்டத்தட்ட 6 பாடல்கள் - அதில், ஒன்று கூட கதைக்கு வலு சேர்க்கவும் இல்லை, ரசிக்கும்படியும் இல்லை)

முதல் பாதி முழுக்க ரசிகர்களை சோர்வடைய செய்யும் வகையிலேயே இருக்க, இடைவேளைக்கு முந்தைய 10 நிமிடங்கள் மட்டும் கொஞ்சம் சுமாராக நகர்கிறது. ஆனால், அதுவும் கூட அதிக நேரம் நீடிக்கவில்லை. இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றிவிடுமா என எண்ணிக்கொண்டிருக்கையில், முதல் பாதியே தேவலாம் என சொல்லுமளவிற்கு படு திராபையாக நகர்கிறது. கிளைமாக்ஸில் ஒரு சின்ன சஸ்பென்ஸ் இருந்தாலும் கூட, இரண்டு மணிநேரம் வீணடிக்கப்பட்ட திரைக்கதையால் அதையும் ரசிக்க முடியவில்லை. கிளைமாக்ஸில் இயக்குனர் சொல்லும் கருத்தும், படத்தோடு ஒட்டவில்லை; கதை சொல்லிய விதத்தில் நேர்மையோ தெளிவோ இல்லாததால், அந்த கருத்தும் pseudo சமூக அக்கறையாகவே தெரிகிறது.

'படத்தில் ஸ்கெட்ச் என்கிற வார்த்தையை எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள் என கண்டுபிடித்து சொல்லுங்கள்' என்று ஒரு போட்டி வைத்தால், எவரும் ஜெயிப்பது கடினமே. 'ஸ்கெட்ச் போட்டு, காரை தூக்கிடலாம்..' 'ஸ்கெட்ச் போட்டு, அவனை கொல்லுங்கடா' என ஹீரோ, வில்லன், அடியாட்கள் என எல்லோருமே 2 நிமிடத்திற்கு ஒரு முறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆங்காங்கே, ஒரு சில மாஸ் காட்சிகளும் S.S.தமனின் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருந்தாலும் கூட, கதையே இல்லாமல் விக்ரம் ஸ்லோ-மோஷனில் நடந்து வருவதையும், காலரை தூக்கி விடுவதையும், 'ஸ்கெட்ச் ஸ்கெட்ச் பண்ணா, ஸ்கெட்ச் மிஸ்ஸே ஆகாது' 'யாரு வேணா ஸ்கெட்ச் போடலாம், ஆனா யாராச்சும் ஸ்கெட்சுக்கு ஸ்கெட்ச் போடா முடியுமா?' போன்ற மொக்கை பஞ்ச் வசனங்களையும் எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? சொல்லப்போனால், இந்த படத்தில் விக்ரமின் நடிப்பே படு மொக்கையாகத்தான் இருந்தது. பல காட்சிகளில், ரொம்பவே முதிர்ச்சியாகவும் தெரிகிறார். விக்ரமின் நண்பனாக வரும் 'கல்லூரி' வினோத்தும், முதலாளியாக வரும் ஹரீஷ் பெரடியும் சற்றே இயல்பாக நடித்திருக்கிறார்கள்; போலீஸ் கமிஷனராக வரும் நடிகரும் கவனிக்க வைக்கிறார். படத்தில் வேறெந்த நடிகருமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தமனின் இசையில் இரண்டு பாடல்கள் மட்டும் கேட்கும்படி உள்ளது.

படம் முழுக்கவே வசனங்கள் தான் மிகப்பெரிய மைனஸாக இருந்தது. 'வண்டியில புக் (டாகுமெண்ட்ஸ்) இருக்கா?' என தமன்னா கேட்க 'குமுதமா, விகடனா?' என விக்ரம் கேட்பது, தமன்னாவின் தந்தை 'நாங்க எங்க ஆளுங்களுக்குத்தான், எங்க பொண்ணை குடுப்போம்' என சொல்ல 'என்ன வேணா பண்ணுங்க, ஆனா இவ என் ஆளு..' என விக்ரம் சொல்வது, 'கியர் வெச்ச வண்டிங்க எல்லாம் பொண்டாட்டி மாதிரி, அது சொல்றதை நாம கேட்கணும்.. கியர் இல்லாத வண்டிங்க எல்லாம் வப்பாட்டி மாதிரி, நாம சொல்றபடி எல்லாம் அது கேட்கும்..' 'மின்சாரத்துக்கும் சம்சாரத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? தொட்டா ஷாக் அடிக்குறது, மின்சாரம்.. தொட்டதுக்கெல்லாம் ஷாக் அடிக்கிறது, சம்சாரம்' என படு மோசமான ஜோக்குகள் அடிப்பது என 1990களில் வந்த படங்களைப் போல அரதப் பழைய வசனங்களே எல்லா காட்சிகளிலும் நிரம்பி கிடக்கிறது.

விக்ரம் அவர்களுக்கு 'ஜெமினி' போன்ற லோக்கலான மாஸ் கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆசை இருந்திருக்கலாம், ஆனால் அதற்காக அதே போல 20 வருடங்களுக்கு முன்னால் வந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது சரிவருமா? இதே போல, தொடர்ந்து மோசமான கமர்ஷியல் படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்தால் 'அற்புதமான நடிகர் விக்ரம்' என்கிற அடையாளம் மறைந்தே போய்விடும்; அவரது கேரியர் முழுக்க படு சுமாரான படங்களே நிரம்பி கிடக்கும்!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்