விளம்பரம்
முகப்புவிமர்சனம்

சோலோ திரைப்பட விமர்சனம் - Solo Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

சோலோ திரைப்பட விமர்சனம் - Solo Movie Review
 • பிரிவுவகை:
  ஆன்த்தாலஜி
 • நடிகர்கள்:
  துல்கர் சல்மான், நேஹா ஷர்மா, சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ்
 • இயக்குனர்:
  பிஜோய் நம்பியார்
 • தயாரிப்பாளர்:
  ஆபிரகாம் மேதிவ், அணில் ஜெயின், பிஜோய் நம்பியார்
 • எழுதியவர்:
  பிஜோய் நம்பியார்
 • பாடல்கள்:
  மசாலா கபே, தைக்குடம் பிரிட்ஜ், கோவிந்த் மேனன், பிரஷாந்த் பிள்ளை, பில்ட்டர் காபி, சூரஜ் எஸ் குருப்ப், செஸ் ஆன் தி பீட், அபினவ் பன்சால், அகம்

‘வசீர்’, ‘டேவிட்’, ‘ஷைத்தான்’ (இந்தி) என தான் இயக்கிய ஒவ்வொரு படங்களிலுமே வித்தியாசமான கதைக்களங்கள், புதுமையாக கதை சொல்லும் யுக்தி, அசர வைக்கும் டெக்னிக்கல் அம்சங்கள் என கவனம் ஈர்த்திடும் இயக்குனர் பிஜாய் நம்பியாரின் நான்காவது திரைப்படமான ‘சோலோ’, ஒரு ஆன்த்தாலஜிக்கல் திரைப்படம். ஒரு குறிப்பிட்ட தீம் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதை சார்ந்த வெவ்வேறு குறும்படங்களின் கதம்பமாக உருவாக்கப்படும் ஆன்த்தாலஜிக்கல் திரைப்படங்கள் தமிழுக்கு கொஞ்சம் புதிதே. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு 3 ஒளிப்பதிவாளர்கள், 6 இசையமைப்பாளர்கள். சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சோலோ’ ஒரு நல்ல பொழுதுப்போக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறதா? தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்.

பஞ்ச பூதங்களில் நீர், காற்று, நெருப்பு, நிலம் ஆகிய நான்கு சக்திகளை மையமாக வைத்து நான்கு வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். நான்கு கதைகளிலும் துல்கர் நடித்திருக்கிறார், அந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் (சேகர், த்ரிலோக், சிவா, ருத்ரா) சிவபெருமானை குறிக்கிறது என்பதை தவிர இந்த கதைகளுக்குள் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த நான்கு கதைகளில் வரும் கதாபாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று எங்கும் சந்திப்பதில்லை, கிளைமாக்ஸில் இந்த 4 கதைகளும் ஒரே இடத்தில் வந்து முடிவதுமில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மற்றபடி, இந்த கதைகளுக்குள் உள்ள மற்றுமொரு ஒற்றுமை – நான்கு கதைகளிலுமே மைய கதாபாத்திரங்கள் தொலைத்த காதல், அது சார்ந்த வலி, குழந்தை, கருத்தரித்தல் ஆகிய விஷயங்கள் பிராதனமாக இருக்கும். அதே போல், நான்கு கதைகளுமே நான்கு வருட காலத்தில் நடந்து முடிகிறது.

முதல் கதை – சேகர் (நீர்)
தன்னுடன் கல்லூரியில் படிக்கும் கண் பார்வைற்ற மாணவி ராதிகாவை (சாய் தன்ஷிகா) காதலிக்கும் சேகர் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றிய இந்த பகுதிதான், நான்கு கதைகளில் மிகவும் வலுவற்ற கதை. சாதாரணமான ஒரு கதை, ரொம்பவே சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. தன்ஷிகாவின் நடிப்பு, துல்கர்-தன்ஷிகாவின் கெமிஸ்ட்ரி மற்றும் ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கும் சதீஷால் மட்டுமே இந்த பகுதியை சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக மாற்ற முடியவில்லை.

இரண்டாம் கதை – த்ரிலோக் (காற்று)
தான் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த வேற்று மதத்தை சேர்ந்த ஆயிஷாவுக்கு (ஆர்த்தி வெங்கடேஷ்) ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க கிளம்பும் த்ரிலோக்கின் தேடலே இரண்டாம் கதை. நாம் பல முறை பார்த்திருக்கக்கூடிய ஒரு பழிவாங்கல் கதையை, முன்னும் பின்னும் மாற்றி non-linear முறையில் சொல்லி திருப்பங்களை சுவாரஸ்யமாக அளித்திருக்கிறார் பிஜாய். தனக்கே உரிய கதை சொல்லும் பாணியில் ‘என்ன கதை என்பதை விட, அதை எப்படி சொல்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதை நிரூபித்திருக்கிறார்.

மூன்றாம் கதை – சிவா (நெருப்பு):
சின்ன வயதிலேயே தன் தாயை பிரிய நேரிடும் அண்ணன்-தம்பி இருவரில், அண்ணன் ஒரு பெரிய கேங்ஸ்டர் ஆகிறான். திடீரென ஒரு நாள் தங்கள் தந்தை கொல்லப்பட, கொலையாளியின் பின்னால் ஓடும் அண்ணன்-தம்பியின் க்ரைம் த்ரில்லர் கதை இது. கொஞ்சம் கூட ஒட்டவே ஒட்டாத சிவா-ருக்கு காட்சிகள், எம்.ஜி.ஆர் பாட்டு பாட சொல்லும் கேங் லீடர் என நான்கு கதைகளில் ரொம்பவே அன்னியமாக தெரியும் எபிசோட் இது. துல்கர் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் பகுதி இதுதான் என்றாலும் கூட, இறுதியில் வரும் துப்பாக்கிச்சூடு காட்சி, சிவாவின் தம்பி மீது பரிதாபப்படும் மும்பைவாசி பெண் கதாபாத்திரம் தவிர மற்ற விஷயங்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த எபிசோடையே அழகாக்குவது கடைசியில் வரும் அந்த ‘துப்பாக்கி – மத்தாப்பு’ ஃபிரேம் தான். கதையில் அந்த காட்சியின் முக்கியத்துவமும், அதை ஒரு கவிதை போல் திரையில் கொண்டுவந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமையும் பாராட்டுக்குரியது.

நான்காம் கதை – ருத்ரா (நிலம்):
தான் உயிருக்கு உயிராய் நேசித்த பாமா (நேஹா சர்மா), தன்னை விட்டு போவதை ஏற்கவும் முடியாமல் அதை அவளிடம் கேட்கவும் முடியாமல் தவிக்கும் ருத்ராவின் கதை. ‘இவ எனக்கு மட்டும்தான் சொந்தம்’ என பெருமிதமாக சொல்வது, ‘உன்னை பாத்துக்குறேன்’ என பாமாவின் தந்தை மிரட்டும்பொழுது ‘பத்திரமா பார்த்துப்பீங்களா, சார்? வீட்டோட மாப்பிள்ளையா வந்திடுறேன்’ என கிண்டலடிப்பது என உற்சாகமாகமான தருணங்களுடன் அதிரி புதிரி ஹிட் ‘ரோஷோமான்’ பாடலுடன் தொடங்கும் இந்த கடைசி கதை, சட்டென சீரியஸாக மாறி ஒரு பெரிய திருப்பத்துடன் முடிகிறது. கடைசியில் வரும் அந்த திருப்பத்தை இதற்கு முன் நீங்கள் கே.பாலச்சந்தர் போன்ற இயக்குனர்களின் படங்களில் பார்த்திருந்தாலும் கூட, ‘உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா?’ என்கிற கேள்விக்கு ‘அதே கேள்வியை நான் திரும்ப கேட்டா?’ என்கிற எதிர்பாராத பதில் போன்ற விஷயங்கள் சுவாரஸ்யம் சேர்க்கிறது.

‘சோலோ’ படத்தின் மிகப்பெரிய பலம் – படம் முழுக்க நிரம்பி கிடக்கும் சின்ன சின்ன புதுமைகளும், சில பரிசோதனை முயற்சிகளும். இந்த படம் உங்களுக்கு பிடிக்காவிடினும் கூட, ஆங்காங்கே ரசிக்க வைத்திட நிறைய விஷயங்கள் உண்டு. டெக்னிக்கலாக, இவ்வளவு அட்டகாசமான ஒரு திரைப்படத்தை சமீபத்தில் பார்த்திடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஒரு ஒளிப்பதிவாளர் ஒரு தனி டோன், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு இசையமைப்பாளர் என பார்த்து பார்த்து சின்ன சின்ன விஷயங்களையும் மெருகேற்றியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என மூன்று துறையை சேர்ந்தவர்களும் ஒன்றாக கைகோர்த்து படத்திற்கு தேவையான விஷயங்களை சிறப்பாக அளித்துள்ளனர். வணிக ரீதியான எதிர்பார்ப்புகள், கமர்ஷியல் சமரசங்கள் என எதை பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த தயாரிப்பில் இப்படியொரு திரைப்படத்தை எடுக்க முயற்சித்ததற்கே இயக்குனர் பிஜாய் நம்பியாருக்கு ஒரு பூங்கொத்தை அளிக்கலாம்!

‘சோலோ’ படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் – துல்கர் சல்மானின் நடிப்பு. திக்குவாயாக இருந்தாலும் தான் சொல்லவந்ததை எப்படியாவது சொல்லிவிட போராடும் சேகர், விலங்குகள் மருத்துவரான த்ரிலோக், ஒரு வார்த்தை கூட பேசாமல் கண்களாலேயே மிரட்டும் சிவா (இந்த வேடத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார் மனிதர்), துறுதுறு பரபர இளைஞனான ராணுவ வீரனான ருத்ரா என நான்கு கதைகளையுமே தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

‘சோலோ’ படத்தின் முக்கிய மைனஸ் – எல்லாமே சீரியஸான கதைகள் என்பதாலும், அடுத்தடுத்து நான்கு கதைகள் வருவதாலும் எந்த கதையுமே நம்முள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, கதாபாத்திரங்களும் நம்முடன் அதிக நேரம் பயணிப்பதில்லை. அந்த வகையில், எல்லா கதைகளிலுமே ஒரே நடிகரை நடிக்கவைத்தது ஒரு குறையாகிப் போகிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை ரசிப்பதற்கு, அதிக பொறுமையும் அதீத கவனமும் அவசியம் தேவை. படத்தின் எல்லா கதைகளிலுமே காதலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், ருத்ரா-பாமா த்ரிலோக்-ஆயிஷா தவிர மற்ற இரண்டு காதலையுமே நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை; சிவா-ருக்கு, சேகர்-ராதிகா ஆகியோரின் உறவின் முக்கியத்துவத்தையோ காதலையோ நம்மால் எங்குமே முழுதாக உணர முடியவே இல்லை. வழக்கத்திற்கு மாறாக பிஜய் நம்பியாரின் படத்தில் அவரது குருவான மணிரத்னம் அவர்களின் சாயல் ரொம்பவே தெரிந்தது (மிக முக்கியமாக, ஒற்றை இரட்டை வார்த்தையில் பேசப்படும் வசனங்களில்). சிவா கதாபாத்திரத்தைப் பார்க்கும்பொழுது, அப்படியே ‘தளபதி’ சூர்யாவை பார்த்ததைப் போல இருந்தது (நடை, பாவனை, உடல் மொழி, எப்பொழுதுமே ஒருவிதமான மேன்சோகத்துடன் காணப்படுவது என எல்லாமே). அதே போல, என்னதான் ‘மாங்குயிலே பூங்குயிலே’ ‘நான் ஆணையிட்டால்’ பாடல்கள் எல்லாம் போட்டாலும், லிப் சிங்க் பல இடங்களில் சரியாக இருந்தாலும் கூட, முழுக்க முழுக்க கேரளாவில் எடுக்கப்பட்டதாலும் துணை நடிகர்கள் எல்லாம் மலையாள முகங்களாகவே இருப்பதாலும், ஒரு bilingual படம் பார்க்கும் உணர்வு வராமல் டப்பிங் பட உணர்வே ஏற்படுகிறது.

படம் முழுக்க எக்கச்சக்க பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியை ‘சோலோ’ தரவில்லை என்பது உண்மையே. இருப்பினும், படம் நெடுக இருக்கும் பல புதுமையான விஷயங்களுக்காகவே கண்டிப்பாக தவறவிடாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்