விளம்பரம்
முகப்புவிமர்சனம்

ஸ்பைடர் திரைப்பட விமர்சனம் - Spyder Movie Review

  | Wednesday, September 27, 2017

Rating:

ஸ்பைடர் திரைப்பட விமர்சனம் - Spyder Movie Review
  • பிரிவுவகை:
    ஸ்பை த்ரில்லர்
  • நடிகர்கள்:
    மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங், எஸ். ஜே. சூர்யா, ஆர். ஜே. பாலாஜி, பரத்
  • இயக்குனர்:
    ஏ.ஆர். முருகதாஸ்
  • தயாரிப்பாளர்:
    NVR சினிமா
  • எழுதியவர்:
    ஏ.ஆர். முருகதாஸ்
  • பாடல்கள்:
    ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். ஏறக்குறைய இவர் இயக்கிய எல்லா படங்களுமே பெரும் வெற்றியடைந்திருக்கின்றன; தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், வங்காளம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இயக்குனர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. படத்தின் டிரைலர் இப்படம் 'துப்பாக்கி' போன்றதொரு ஸ்டைலிஷ் த்ரில்லராக இருக்குமென்கிற நம்பிக்கையை தந்தது. இப்படம் குறித்த நேர்காணல்களில் 'விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ரொம்ப வேகமான திரைப்படம் ஆக ஸ்பைடர் இருக்கும்' என கூறியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் கூறியபடி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா 'ஸ்பைடர்'? தொடர்ந்து படியுங்கள்.

புலனாய்வுத் துறையில் வேலை செய்யும் சிவா (மகேஷ் பாபு), பிரச்சினைக்குரிய தொலைபேசி அழைப்புகளை கேட்டு தகவல் தரும் வேலையில் இருக்கிறார். தன் துறையினருக்கே தெரியாமல், அவர் ஒரு சாப்ட்வேரை உருவாக்குகிறார். பொதுமக்கள் பிரச்சினையில் இருக்கும்பொழுதோ, அலறும்பொழுதோ, அவர்களுக்கு உதவி தேவைப்படும்பொழுதோ எச்சரிக்கை செய்யும் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி, யாருக்குமே தெரியாமல் குற்றங்களைத் தடுத்து நிறுத்தி சட்டத்திற்கு புறம்பாக பலருக்கு உதவி செய்து வருகிறார். அந்த சமயத்தில், தான் இருக்கும் நகரத்தையே உலுக்கக்கூடிய ஒரு பிரச்சினையைப் பற்றியும், நாச வேலைகளில் ஈடுபடும் ஒரு சைக்கோ பற்றியும் சிவாவுக்கு தெரிய வருகிறது. அந்த சைக்கோ கொலைகாரனை சிவா எப்படி தடுக்கிறார்? என்னென்ன சவால்களை சந்திக்கிறார்? என்பதே 'ஸ்பைடர்' திரைப்படத்தின் கதை.

ரொம்பவே சுமாரான ஹீரோ அறிமுகக் காட்சியுடன் தொடங்கும் 'ஸ்பைடர்' திரைப்படம், முதல் 20 நிமிடங்களில் ரசிகர்களுக்கு பெரிதளவில் ஏமாற்றமளிக்கிறது. கொஞ்சமும் ஒட்டாத ஹீரோவின் அறிமுகப்பாடல், ரொம்பவே அப்பாவியாக கியூட்டாக காட்ட முயற்சிக்கும் வழக்கமான 'லூசு ஹீரோயின்' கதாபாத்திர அறிமுகம், உடனே வரும் இன்னொரு பாடல் என தொய்வுடனே தொடர்கிறது அடுத்தடுத்த காட்சிகள். படத்தின் ஆரம்பத்திலிருந்தே வரும் சில பெரிய பெரிய லாஜிக் பொத்தல்களும், நம்மை படத்தை முழுமையாக ரசிக்கவிடாமல் செய்கிறது என்றே சொல்லவேண்டும். எனினும், இரட்டைக் கொலையை செய்தது யார் என கண்டுபிடிக்க முயற்சிக்கும் காட்சியிலிருந்து இடைவேளை வரை நூல் பிடித்தாற்போல் படு சுவாரஸ்யமாகவே நகர்கிறது திரைப்படம். கொலையாளியை சாதுர்யமாக ஹீரோ கண்டுபிடிக்கும் காட்சிகளும், வில்லனின் அறிமுகக் காட்சியும் சிறு வயது ஃபிளாஷ்பேக்கும் முதல் பாதியை விறுவிறுவென நகர்த்தி செல்கிறது. இடைவேளைக்கு பின்னரே, படம் மொத்தமாக தடுமாற தொடங்குகிறது.

'நல்லவன் vs கெட்டவன்' வகை த்ரில்லர்களில், கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்க வேண்டிய பரபரப்பான மைண்ட் கேம் ரொம்பவே குறைவாக இருப்பதே 'ஸ்பைடர்' படத்தின் மிகப்பெரிய மைனஸ். மகேஷ் பாபு தன் குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் காட்சி, போலியான வாட்ஸப் வீடியோ மூலம் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஐடியா என 4, 5 காட்சிகளில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல் இருந்தாலும், பல காட்சிகள் மந்தமாகவே நகர்கிறது. ஒரு முழுமையான டிரேட்மார்க் ஏ.ஆர்.முருகதாஸ் படம் பார்த்த திருப்தி கிடைக்காத காரணமும் அதுவே. தனது எல்லா படங்களையும் போலவே இந்த படத்திலும், கூர்மையான வசனங்கள் மூலம் கைத்தட்டல்கள் பெறுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - 'வீக்கானவங்க எல்லாம் சேர்ந்து தங்களைக் காப்பாத்திக்க உருவாக்கின விஷயம் தான் சட்டம்.. ஆட்டைக் கொன்னா தப்பில்ல, மானைக் கொன்னா தப்பா?' என கேட்கும் சைக்கோ வில்லன், 'நம்ம எல்லாருக்குள்ளயுமே சாடிசம் இருக்கு... முதலாளி வேலைக்காரன்கிட்ட காட்டுற சாடிசம், புருஷன் பொண்டாட்டிக்கிட்ட காட்டுற சாடிசம், அதிகாரிங்க பொதுமக்கள்கிட்ட காட்டுற சாடிசம்' போன்ற வசனங்கள் சில உதாரணம். படத்தின் திரைக்கதை முழுக்கவே ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் பாணியிலேயே இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த படைப்பு குறைகளே அற்றதாக இல்லை. தெலுங்கு சினிமாவுக்கேற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள சில விஷயங்களும், படத்தின் மேக்கிங்கும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். 'அழிக்க நினைக்கும் வில்லன், மக்களை காக்க முயற்சிக்கும் ஹீரோ' என கிட்டத்தட்ட இதே பாணியில் இதற்கு முன் தான் இயக்கிய 'துப்பாக்கி' என்கிற அட்டகாசமான த்ரில்லரில் பாதியளவு கூட, இந்த படத்தில் திரைக்கதையும் காட்சியமைப்பும் சோபிக்கவில்லை.

தனியாளாக எல்லா இடத்திலும் நடக்கும் குற்றங்களையும் ஹீரோ தடுக்க முயற்சிப்பது, பொது இடத்தில் மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடத்தில் அத்தனை மக்கள் முன்னால் துப்பாக்கியால் சுடுவது, வில்லன் சர்வசாதாரணமாக கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தப்பிப்பது, ஒரு வீட்டினுள்ளே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக் கைதிகளை காப்பாற்றும் காட்சி என பல இடங்களில் லாஜிக் குறைகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. திடீர் திடீரென காரணமே இல்லாமல் வரும் 4 பாடல்கள் (ஒவ்வொரு பாடலுமே படத்தை மெதுவாக்குகிறது), யூகிக்கக்கூடிய வகையில் அமைந்த ஹீரோ-வில்லனின் கண்ணாமூச்சி ஆட்டம், பெரிதாக ஈர்க்காத சண்டைக்காட்சிகள் (ரோலர் கோஸ்டர் சண்டைக்காட்சி மற்றும் மருத்துவமனையில் வரும் சண்டைக்காட்சி), ரொம்பவே க்ளிஷேவான கிளைமாக்ஸ் என மற்ற மைனஸ்களும் ஸ்பைடரை ஒரு சுமார் படம் ஆக்குகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு, தமிழில் இது முதல் படம். ஒரே மாதிரியான சின்ன சின்ன நடன அசைவுகள் மற்றும் ரோபோ போன்ற உடல்மொழியைத் தவிர்த்து பார்த்தால், இந்த படத்துக்கு எது தேவையோ அதை சரியாகவே செய்துள்ளார் மகேஷ். ஆனால், தமிழ் ரசிகர்கள் அவரை தங்களுடைய ஸ்டார் ஆக ஏற்றுக்கொள்வார்களா என கேட்டால், அது மிகப்பெரும் சந்தேகமே. பாமர ரசிகர்களையோ அல்லது பிரத்யேமாக தமிழ் ரசிகர்களையோ குறிப்பாக ஈர்க்கும் வகையில் காட்சிகள் இல்லாததும், 'ஸ்பை த்ரில்லர்' என்கிற ரொம்பவே அன்னியமான ஒரு ஜானரை தன் முதல் படத்தில் தேர்ந்தெடுத்ததையும் கூட ஒரு காரணமாக சொல்லலாம். முதன்முறையாக முழு நீள வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஒவ்வொரு காட்சியிலுமே பட்டையைக் கிளப்புகிறார். டிவியில் தோன்றி மக்களிடம் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வது, மகேஷ் பாபுவிடம் தன் தப்புக்களை எல்லாம் நியாயப்படுத்தி வாதிடுவது, 'ஓ.. அப்போ நீ 1 மணிக்கு வரலையா?' என நக்கலாக சிரிப்பது என பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். மிகச்சிறிய வேடத்தில் தோன்றினாலும், பரத் சிறப்பாக நடித்துள்ளார். கதைக்கு சிறிதளவும் கூட உதவிடாத ராகுல் ப்ரீத்தி சிங், ஒரு அழகு பதுமையாக மட்டுமே வந்து போகிறார். ஆர்.ஜே.பாலாஜி ஒரு காமெடியனாக அல்லாமல் ஹீரோவுக்கு உதவும் நண்பனாக படம் முழுக்க வந்தாலுமே, அதிக வசனங்களோ அல்லது பெரிய முக்கியத்துவமோ இல்லாததால் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போலவே தோன்றுகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் கூட, ஒரு சில காட்சிகள் தவிர பல இடங்களில் ஒரு சாதாரண தெலுங்கு ஆக்ஷன் படத்தைப் பார்க்கும் உணர்வே வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'சிசிலியா சிசிலியா' தவிர வேறு எந்தவொரு பாடலுமே நினைவில் நிற்கவில்லை; சில முக்கிய காட்சிகளில் பின்னணி இசை படத்தையே தூக்கிப் நிறுத்தினாலும் கூட, பல காட்சிகளில் பின்னணி இசை ஹாரிஸ் ஜெயராஜின் முந்தைய படங்களையே நினைவுபடுத்துகிறது.

மொத்தத்தில், பெரிதாக எங்குமே போரடிக்கவில்லை எனினும் கூட, ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் சிறந்த படங்களில் ஒன்றாக 'ஸ்பைடர்' இடம்பிடிக்கத் தவறுகிறது! திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் சறுக்கிய இத்திரைப்படம், ஒரு முறை பார்க்கக்கூடிய சாதாரண பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமே.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்