விளம்பரம்
முகப்புவிமர்சனம்

"ஒரே படம்... ஔவையார் முதல் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வரை க்ளோஸ்" - தமிழ்ப்படம் 2 விமர்சனம் - Tamizh Padam 2 Movie Review

  | Friday, July 13, 2018

Rating:

  • பிரிவுவகை:
    ஸ்பூஃப்
  • நடிகர்கள்:
    சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன்
  • இயக்குனர்:
    சி.எஸ்.அமுதன்
  • தயாரிப்பாளர்:
    சசிகாந்த்
  • எழுதியவர்:
    சி.எஸ்.அமுதன்
  • பாடல்கள்:
    என். கண்ணன்

மிரட்டல் வில்லனை துரத்தும் போலீஸ் கதைதான், அதை இதுவரை வந்த தமிழ்சினிமாவை திரைக்கதையாக வைத்து வெளுத்திருக்கிறது `தமிழ்ப்படம் 2' டீம்.

ஸ்பூஃப் சினிமா என்கிற பிராண்ட் பதித்த படம் எட்டு வருடங்களுக்குப் பிறகு களம் இறங்கியிருக்கிறது. ஆனால் எங்கும் தொய்வில்லாமல், சளைக்காமல் அத்தனை ஹீரோக்களையும், சினிமாக்களையும், அரசியல் நிகழ்வுகளையும் எடுத்து படத்தில் கோர்த்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தைப் போல் வில்லனின் சதிகளை முறியடிக்கும் கதைதான் இதிலும். போலீஸ் வேலையில் இருந்து விலகி கிராமத்தில் தானுண்டு, தன் பஞ்சாயத்துகள் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறார் சிவா. மீண்டும் போலீஸ் வேலையில் சேரச் சொல்லி அவரை வற்புறுத்துகிறது காவல்துறை. சிவா அதை மறுக்க அவர் மனைவியைக் கொன்றுவிடுகிறான் `பி'. எதற்காக சிவா மீண்டும் போலீஸில் சேர வேண்டும்? யார் இந்த `பி'? மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என திணறத் திணற காமெடி வெடி வைத்துச் சொல்லி சிதறவிட்டிருக்கிறார்கள்.

ஸ்பூஃப் படம் என்பதன் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி ஔவையார் - அதியமான் கதை ஆரம்பித்து கடைசி நிமிஷம் வரை பரிட்சை எழுதுவது போல் எதை எல்லாம் சேர்க்க முடியுமோ அத்தனையும் சேர்த்து படமாக்கியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். ஒப்பனிங் சீனில் ஆரம்பித்து எண்ட் கிரெடிட் வரை கலாய் கலாய் என கலாய்த்துக் காயப்போட்டிருக்கிறார் மனிதர். சிவாவுக்கே உரிய நக்கல் முகபாவனைகள், கலாய்ப்பான வசனங்கள் எல்லாம் பக்காவாக பொருந்திப் போவதால் படத்தை இன்னும் எலிவேட் செய்கிறது அவரது பெர்ஃபாமென்ஸ். இட்லியை வைத்து கலவரத்தை நிறுத்துவது துவங்கி ட்ரான்ஸ்பர்மேஷன் சீன், பிரப்போசல் சீன், பரதநாட்டியம் சீன் என ஒவ்வொன்றிலும் ஸ்கோர் செய்கிறார். இவருக்கு சரிசமமாக விளையாட சதீஷுக்கும் மிரட்டலான வேடம். தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன்களுடன் சேர்த்து ஹாலிவுட் வில்லன் வரை நிறைய கெட்டப் போட்டு வந்து கலக்கியிருக்கிறார். உயர் அதிகாரியாக சேத்தன், நண்பர்களாக மனோபாலா, சுந்தர்ராஜன், சந்தானபாரதி, ஹீரோயினாக ஐஸ்வர்யா மேனன் என எல்லோருமே கலாய்ப்புக்கு பக்காவாக உதவியிருக்கிறார்கள்.

சினிமாவில் எடுத்தால் டைம் ட்ராவல், போதிதர்மன் ஆரம்பித்து ஒரு லிஸ்ட், அரசியல் ஆரம்பித்தால் டீமானிடைசேஷன், சமாதியில் தியானம், ரெசார்ட் வரை ஒரு லிஸ்ட், சீரியல், மொபைல் போன் என சகலத்தையும் ஸ்கெட்ச் போட்டு செய்திருக்கிறார். படத்தில் காட்சிகளில் வைத்திருக்கும் காமெடிகள் தவிர, திருட்டு வி.சி.டி தடுப்புபிரிவு அதிகாரி என்ற போர்டு, பன்னீர்செல்வம், விஜயகுமார், ஏழுச்சாமி என முன்னாள் அதிகாரிகளின் போர்டைப் பின்னணியில் வைப்பது என கேப் கிடைக்கும் இடத்தில் எல்லாம் கிரியேட்டிவ் ஐடியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறது படக்குழு. சூப் பாய் பாடலுக்கு பதில் சூப் கேர்ள் பாடல், விபத்தான நண்பனை ரோட்டிலேயே விட்டுவிட்டு ட்ரீம் சாங் போவது, சார் இப்போ ஐட்டம் சாங்குக்கு வர சொல்லியிருந்தாங்க என பாடலை ஆரம்பிப்பது, பாட்டுக்கு இடையில் "இந்தப் பாட்டு படத்தோட கதைக்கு லேகா இருக்கும்... இந்தப் படத்துல கதையா" என கட் செய்து மீண்டும் படத்துக்கு வருவது என நிறைய ஐடியாக்கள் குபீர் சிரிக்குப்புக்கு கேரண்டி. மேக்சிமம் சினிமா, அரசியல், ஆங்கில சீரியல், ரெட் மீ போன் என எல்லாவற்றையும் வைத்து கதையின் நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருந்ததும் சுவாரஸ்யமான ஒன்று. ஏற்கனவே எடுக்கப்பட்ட சினிமாக்களை ரீக்கிரியேட் செய்து, வசனங்கள் மூலம் காமெடி செய்வதைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். ஆனாலும் இடையிடையில் வரும் சில வசனக்கள் கவனிக்க வைக்கிறார் அமுதன். உதாரணமாக,"ஜாதிக்காய்னு ஒரு காய் இருக்கு, அது நான் இந்த ஜாதினு என்னைக்காவது சண்டை போட்டுருக்கா?". இதுமாதிரி இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்.

இசையமைப்பாளர் கண்ணன் படத்தின் நகைச்சுவைத் தன்மை கெடாமல் இருக்க நன்றாக மெனக்கேட்டிருகிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு பல காட்சிகளை கச்சிதமாக மறு உருவாக்கம் செய்திருகிறார். குறிப்பாக வேட்டையாடு விளையாடு சீன் ஒன்று இருக்கிறது, அதைப் பார்த்தால் புரியும். படத்தின் பிரச்சனையும் அதுதான் எனத் தோன்றுகிறது. சில படங்களின் பிரதிபலிப்பு புரியாமல் போனால், நகைச்சுவை பிடிபடாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது.

எந்தக் கவலையும் இல்லாமல், ஆரம்பம் முதல் முடிவு வரை ரசித்து சிரித்து வருவதற்கான கேரண்டியுடன் அழைக்கிறது படம். எனவே கண்டிப்பாக உங்கள் பொழுது போக்கிற்கு எந்த குறைவும் இல்லாமல் ஒரு முழுமையான ஜாலி ரெய்ட் வழங்கும் இந்த தமிழ்ப்படம் 2.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்