விளம்பரம்
முகப்புவிமர்சனம்

தரமணி திரை விமர்சனம் - Taramani movie review

  | Friday, August 18, 2017

Rating:

தரமணி திரை விமர்சனம் - Taramani movie review
 • பிரிவுவகை:
  ரொமான்ஸ் டிராமா
 • நடிகர்கள்:
  ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி
 • இயக்குனர்:
  ராம்
 • தயாரிப்பாளர்:
  எல். கோபிநாத், ஜே. சதீஷ் குமார்
 • எழுதியவர்:
  ராம்
 • பாடல்கள்:
  யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் உள்ள வெகு சில இயக்குனர்களே தெளிவான சமுதாய பார்வை கொண்ட கருத்துக்களையும், சமூக அக்கறையுள்ள படங்களையும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அவர்களுள் மிக முக்கியமான ஒருவர், இயக்குனர் ராம். தாய்மொழியை பாடமாய் கற்ற ஒருவன் படும் கஷ்டங்களையும், ஐடி துறை கண்டிருக்கும் பெரும் வீக்கத்தையும் பற்றி தன் முதல் திரைப்படத்திலும், குழந்தை வளர்ப்பைப் பற்றியும் இன்றைய பள்ளிகள் எப்படிப்பட்ட கல்விமுறையை பின்பற்றுகிறது என்பது பற்றியும் தன் இரண்டாவது திரைப்படத்திலும் விரிவாக பேசியவர் ராம். ஆகஸ்ட் 2013இல் ‘தங்கமீன்கள்’ படத்தின் ரிலீஸிற்கு முன்பே அறிமுக நாயகன் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் தனது அடுத்த படமான ‘தரமணி’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார் ராம். பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ‘தரமணி’ திரைப்படம், இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஒரு போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே ‘இப்படம் இரண்டு பெண்களிடம் மாட்டிக்கொண்ட ஒரு ஆணின் கதையல்ல, பல ஆண்களிடையே மாட்டிக்கொண்டிருக்கும் பெண்ணின் கதை’. திரைப்படம் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு காட்சியிலும் சிக்ஸர் அடிக்கத் துவங்குகிறார் இயக்குனர் ராம். காட்சிகளுக்கு இடையே வாய்ஸ் ஓவர் மூலம் தன் கருத்துக்களைச் சொல்லி ‘முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவதைப் போல், நான் காட்சிகளுக்கிடையே ஸ்டேட்டஸ் போடுகிறேன்’ என சமீபத்திய செய்திகளை காட்சிகளோடு தொடர்புபடுத்தி சொன்னது ரொம்பவே புத்திசாலித்தனமான யோசனை. அந்த யோசனையும் அதையொட்டி வரும் காட்சிகளும் பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் கலங்கவும் வைக்கிறது. சென்னையில் மழை பெய்து இந்தியா கிரிக்கெட் மேட்ச்சில் தோற்க பிரார்த்தனை செய்யும் ராமேஸ்வர மீனவ குடும்பம், சென்னையில் ரோட்டோரத்தில் அடிபட்டு கிடக்கும் வட இந்திய வேலையாள், வாட்சப் எச்சரிக்கை, பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கையில் டிமானட்டைசேஷன் அறிவிப்பை பற்றி சொல்வது என பல விஷயங்களைப் பற்றி பேசியிருந்தாலும் எதுவுமே கதையின் தீவிரத்தை கெடுக்காமல் படத்தின் சுவாரஸ்யத்தையும் எந்த வகையிலும் குறைக்காத வண்ணம் உறுதி செய்தது இயக்குனரின் சாமர்த்தியம்! படம் முழுக்கவே ராமின் வாய்ஸ் ஓவர் உறுத்தலாக தெரியாத வண்ணம் அமைத்ததும் குறிப்பிடத்தக்கது. மெதுவாக நகர்வதை தாண்டி, இயக்குனர் ராமின் முந்தைய படங்களைக் காட்டிலும் ‘தரமணி’ திரைப்படத்தில் பொழுதுப்போக்கு அம்சங்கள் அதிகமாக இருந்ததாகவே தோன்றியது.

மைய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது ஸ்டேஷனில் காவலுக்கு இருக்கும் பர்ணபாஸ் முதல் போட்டோக்களை டெலீட் செய்ய தேவையில்லை என சொல்லும் சௌம்யா, போலீஸ் கமிஷனரின் மனைவி என ஒவ்வொரு சின்ன கதாபாத்திரத்தின் குண நலன்களையும் விரிவாக நிறுவிய பாத்திரப் படைப்புகளும், எல்லா கதாபாத்திரங்களும் பேசும் வசனங்களும் மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.

‘நீ ஸ்கர்ட் போட்டுருக்க, தம் அடிக்குற... அதனால, நீ என் கூட படுக்க ஓகே சொல்லுவன்னு நெனச்சேன். மத்தபடி, I am harmless flirt’ என மொத்தமாக பெண்களை stereotype செய்யும் மேலதிகாரி கதாபாத்திரம், ‘பர்ணபாஸ் வாக்கு, பைபிள் வாக்கு லே’ என பெருமையாக படம் முழுக்க தன் வீனஸைப் பற்றி பேசும் பர்ணபாஸ் இறுதியில் பிரபு செய்த காரியத்திற்காக அவனை திட்டாமல் நன்றி சொல்வது, ‘நாய்ல என்னடி நல்ல நாய், கெட்ட நாய்? நாம எப்படி பிஸ்கட் போடுறோம்ங்கிறதுல தான் இருக்கு’ என தத்துவம் பேசும் அல்தேயாவின் தோழி, ‘ஆம்பளைங்கள்ல நான் பார்த்த ஒரே நல்லவன் நீ தான், நீ எந்த தப்பும் பண்ணமாட்டே’ என சொல்லும் சௌம்யா, எப்படியோ கிடைத்த ஒரு நம்பரை அழைத்து பிரபுவிடம் பேசும் கமிஷனரின் மனைவியும் அவரது முடிவும் என படம் முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு காட்சியுமே ஆயிரம் கதை சொல்கிறது. சிறுவன் எழுதும் bitch storyயும், மது பாட்டில்களை தூக்கியெறிய அவன் சாலையைக் கடந்து செல்லும் அந்த சில நொடிகளும் நம்முள் கலவரத்தை ஏற்படுத்துகிறது.

மழைக்கு ஒதுங்கியவர்களாக அறிமுகமாகி தங்கள் கதைகளை பகிர்ந்துகொள்ளும் பிரபுவும் அல்தேயாவும், மெது மெதுவாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலில் விழுவதை காட்டுகிறது முதல் பாதி. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் இன்னும் நன்றாக புரிந்துகொள்வதன் விளைவாக, பிரிந்து செல்கின்றனர். இரண்டாம் பாதி முழுக்க வரும் பல திருப்பங்களும் அதிசுவாரஸ்யமான காட்சிகளும் பிரபுவும் அல்தேயாவும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் காதலின் உண்மை தேவையையும் எப்படி உணர்கிறார்கள் என காட்டுகிறது. காதலில் விழும் முதல் சில நாட்கள், காதலிக்க ஆரம்பித்த பின் காதலன் காதலியை சந்தேகிக்கும் நாட்கள், மீண்டும் சேர எடுக்கும் முயற்சிகள் என ஒவ்வொரு காலகட்டங்களையும் நமக்கு எபிசோட்களாக காட்டுகிறார் இயக்குனர்.

‘ப்ரோ.. என்னோட எக்ஸ்-கேர்ள்ஃப்ரெண்ட் நம்பர் நோட் பண்ணிக்கோங்க. எவ்வளவு முடியுமோ கலாய்ங்க’ என ஒருவன் சொல்லும்பொழுது, ‘காதல் தோல்வியைக் கொண்டாட இப்பொழுது புது வழிகள் வந்துவிட்டன’ என்கிற வரிகள், ‘நீங்க டிராப் பண்ணட்டுமான்னு ஃபார்மலிட்டிக்கு கேட்ட மாதிரி, நான் தள்ளட்டுமான்னு ஃபார்மலிட்டிக்கு தான் கேட்டேன்’, ‘என் அம்மாக்கு நான் ஒரே பொண்ணுன்னா, நீயும் உன் அப்பாவுக்கு ஒரே பையன் தானே’, ‘உன்னோட 2478 ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ்ல, 30 பேரு நான் தான்’, ‘பெண் பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, அடிப்படை உரிமை கோருதல், சங்கம் அமைத்து போராடுதல் என எதுவுமே இல்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கப்படக்கூடிய கார்ப்பரேட் ஊழியர்கள், மழைக்காலத்து சென்னையைப் போல தத்தளிப்பவர்கள்’ என வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்!

அல்தேயா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும், ரொம்பவே கஷ்டமான காட்சிகளில் கூட சிரமமே இன்றி அற்புதமாக நடித்துள்ளார். இது வரை தமிழ் சினிமாவில் சரியாக பயன்படுத்தப்படாத நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியாவின் கேரியரில் ‘தரமணி’ மிக முக்கியமான படமாகவும், அவருக்கு பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தரக்கூடிய படமாக இருக்கும். அறிமுக நாயகன் வசந்த் ரவி, பிரபு கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். அல்தேயாவை சந்தேகப்படும் காட்சிகளில் நன்றாக நடித்திருப்பினும் கூட, ஒரு சில முக்கிய காட்சிகளில் ரொம்பவே செயற்கைத்தனமாக தோன்றுகிறார். அஞ்சலி, அழகம்பெருமாள், தயாரிப்பாளர் சதீஷ் குமார், லிஸி என மற்ற எல்லா நடிகர்களுமே தங்கள் பாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் படத்தின் திரைமொழி சீராக அமைய சிறப்பாக பங்களித்துள்ளது. நா.முத்துக்குமாரின் வரிகளும், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின்‌ உயிர்துடிப்பைப் போல அமைந்துள்ளது.

காதலும் காதல் சார்ந்த பிரச்சினைகள், ஒவ்வொரு நாளும் பல நூறு கண்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் பற்றி மட்டுமில்லாமல் காமம், சந்தேக புத்தி, பேராசை, பாசாங்குத்தனம் என வெவ்வேறு சூழ்நிலைகளில் மனிதனின் பல முகங்களை காட்டிடும் ‘தரமணி’, 2017ஆம் ஆண்டின் மற்றுமொரு சிறந்த திரைப்படம்!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்