விளம்பரம்
முகப்புவிமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட விமர்சனம் - Thaanaa Serndha Koottam Movie Review

  | Friday, January 12, 2018

Rating:

தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட விமர்சனம் - Thaanaa Serndha Koottam Movie Review
  • பிரிவுவகை:
    Heist காமெடி
  • நடிகர்கள்:
    சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன்
  • இயக்குனர்:
    விக்னேஷ் சிவன்
  • தயாரிப்பாளர்:
    ஞானவேல் ராஜா
  • எழுதியவர்:
    விக்னேஷ் சிவன்
  • பாடல்கள்:
    அனிருத் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் எண்டர்டெயினர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே எந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை; '24' போன்ற அட்டகாசமான திரைப்படம் கூட சுமாராகவே ஓடியது வருத்தம், தொடர் ரிலீஸ் தேதி மாற்றத்தாலும் முந்தைய பாகங்கள் அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லாததாலும் 'சிங்கம் 3' திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், எப்படியாவது ஒரு பெரிய ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூர்யாவும், 'நானும் ரவுடிதான்' திரைப்படம் கொடுத்த வெற்றி அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கைகோர்த்திருக்கும் திரைப்படமே 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தி சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளியான 'ஸ்பெஷல் 26' திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

1980களில் வட இந்தியாவில் சிபிஐ ஆபிசர்கள் போல நடித்து போலி வருமான வரி ரெய்டுகள் நடத்தி பல இடங்களில் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்த ஒரு கும்பலைப் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் 'ஸ்பெஷல் 26'. காமெடி த்ரில்லர் திரைப்படமாக இருப்பினும் கூட பல இடங்களில் ரொம்பவே சீரியஸாக நகரக்கூடிய 'ஸ்பெஷல் 26' திரைப்படத்தை அப்படியே எடுக்காமல், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு ஃபிளேவரில் கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

ஒரிஜினல் படத்திலிருந்து வேறுபட்டு, ஒரு சாதாரண heist படமாகவோ robin-hood டைப் படமாகவோ மட்டுமில்லாமல் 1980களிலும் சரி இன்றும் சரி ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சினையை பற்றி கொஞ்சம் விரிவாகவும் பேசியுள்ளார் விக்னேஷ் சிவன். படத்தின் தொடக்கத்தில் வரும் ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் கலையரசனின் அறிமுகக் காட்சிகளிலேயே படம் பார்க்கும் ரசிகர்களின் மனநிலையை மிகச்சரியாக செட் செய்துவிடுகிறார். தமிழுக்கு ஏற்றவாறு ஒரு சில உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளையும், ஹீரோயிச காட்சிகளையும் கதையை உறுத்தாதபடி அழகாக வைத்துள்ளார். அந்த adaptionம், இந்த கதையில் ஸ்டார் ஃபேக்டருக்கு இருக்கும் எல்லைகளையும் வரையறைகளையும் புரிந்துகொண்டு மிகச்சரியான ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். ஆனால், ஒரிஜினல் திரைப்படத்தோடு ஒப்பிடுகையில் லாஜிக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது மட்டும் ஒரு பெரிய குறை. அதனாலேயே, கிளைமாக்ஸ் காட்சியில் சஸ்பென்ஸ் டென்ஷன் ரொம்பவே குறைவாக இருந்தது. அதே போல, கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகளும் ஒரு கட்டத்திற்கு மேல் கதைக்கு பெரிய திசைதிருப்பலாக இருந்தது; கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தோடு ஒட்டாமல் விலகியிருந்தது.

நீண்ட நாட்களாக சீரியஸாகவே நடித்துக்கொண்டிருந்த சூர்யாவை, இத்தனை அழகாக துள்ளலான எனர்ஜியுடன் காட்டியதற்கே விக்னேஷ் சிவனுக்கு ஒரு பூங்கொத்து அளிக்கலாம். காட்சிக்கு காட்சி, பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சூர்யா. போலீஸ் ஆஃபிசரை அறையும் அறிமுகக் காட்சி மற்றும் 'சொடக்கு மேல சொடக்கு' பாடலில் தொடங்கி, 'என்னால தனியா ஏதும் புடுங்க முடியாது... நாம எல்லோரும் சேர்ந்தா, கண்டிப்பா பெருசா ஏதாச்சும் புடுங்கலாம்' என நேர்முகத் தேர்வில் சொல்வது, கிளைமாக்ஸில் சுரேஷ் மேனனிடமும் கார்த்திக்கிடமும் நக்கலடிப்பது வரை 10 வருடங்களுக்கு முன்னால் பார்த்த சூர்யாவை பார்க்க முடிகிறது. சீரியஸ் காட்சிகளில் மட்டும், அளவுக்கு மீறி இறுக்கம் காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். கீர்த்தி சுரேஷுக்கு வழக்கமான ஹீரோயின் ரோல் தான்; அழகாக இருக்கிறார் பாடல்களில் ஆடி செல்கிறார், அவ்வளவே! படத்தின் துணை நடிகர்கள் பாத்திரங்களும், அந்த நடிகர் தேர்வும் அவர்களது பங்களிப்பும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தனித்துவத்துடன் காட்ட பெரிதும் உதவியிருக்கிறது. செந்தில் முதல் 'நவரச நாயகன்' கார்த்திக் வரை எல்லோருமே, தங்கள் பாத்திரங்களை ரொம்பவே ரசித்து செய்திருக்கிறார்கள். வளர்மதி, வட்டமதி, வண்ணமதி என தனது குழந்தைகளது பெயர் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்து பாதியில் மறந்துவிட, 'அய்யோ.. இவளுக்கு என்னமோ பேரு வெச்சேனே' என யோசிப்பது 'அழகுமீனான்னு சொல்றதுக்கும், ஜான்சி ராணி CBIன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல' என சொல்லும் ரம்யாகிருஷ்ணன், 'பணம் இல்லாததால தான் சார், இந்த வேலைக்கு வந்தேன். நீங்க வேணா வேலை குடுங்க, அதுல வர்ற காசை உங்களுக்கு தர்றேன்' என சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி, சக அதிகாரியின் மகனை சுட்டுவிட்டு 'மானம் போய்டும்ன்னு சொன்னீங்கள்ல.. இப்போ, அதெல்லாம் ஒண்ணும் போகாது' என சொல்லும் கார்த்திக், 'உன் அப்பனை வேணா சாக சொல்லு, அவன் வேலை உனக்கு வரும்' என சொல்லும் சுரேஷ் சந்திர மேனன் என எல்லோருமே மனதில் நிற்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். சிறிய வேடங்களிலேயே தோன்றினாலும் தம்பி ராமையா, சத்யன், நந்தா, கலையரசன் ஆகியோரும் தங்களது பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வந்து போனாலும், ஆனந்தராஜும் யோகி பாபுவும் பிரம்மானந்தமும் அரங்கு முழுக்க சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறார்கள். மூத்த நகைச்சுவை நடிகரான செந்தில் அவர்களை இந்த வயதிலும் திரையில் பார்ப்பதே மகழ்ச்சியளித்தது, 'கீழே இருக்குறதால, நாங்க எந்தவிதத்திலும் குறைஞ்சு போனவங்க இல்ல' என ஆங்கிலத்தில் அவர் பேசும்பொழுது விசில் பறக்கிறது.

படத்தின் மிக முக்கிய பலம் - அட்டகாசமாக அமைந்திருக்கும் டெக்னிக்கல் அம்சங்கள். அனிருத்தின் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகிவிட்ட நிலையில், பின்னணி இசையும் சிறப்பாகவே இருந்தது. படத்தின் கலை இயக்கமும், படம் முழுக்க வரும் செட்களும் மக்களிடையே பரவலாக பேசப்படும். 1980களுக்கான வீடுகள், ஆடைகள், ரூபாய் நோட்டுகள், கோல்ட் ஸ்பாட் குளிர்பானம், பல்லவன் பேருந்து என ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள் கலை இயக்குனர் D.R.K.கிரணும் அவரது குழுவும். கிளைமாக்ஸிற்கு முன் வரும் அந்த மவுண்ட் ரோட் செட்டில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். பார்க்க சாதாரணமாக இருந்தாலும் வெலிங்டன் தியேட்டர், ஹிக்கின்பாதம்ஸ், தாராபூர் டவர்ஸ் என அந்த சாலையின் அடையாளங்களுடன் ஒட்டுமொத்தமாக அண்ணா சாலையையே உருவாக்கியிருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, படத்தை மேலும் கலர்ஃபுல் ஆக ஆக்கியிருக்கிறது; ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் எடிட்டிங், படம் தொய்வின்றி நகர உதவியிருக்கிறது.

'தானா சேர்ந்த கூட்டம்' படம் முழுக்கவே, வசனங்கள் நம் கவனத்தை ஈர்க்கிறது. ஊழல், அரசு வேலைகளுக்கு ஆள் எடுப்பதில் உள்ள அதிகார துஷ்பிரயோகங்கள் என பல விஷயங்கள் குறித்து கூர்மையான வசனங்கள் இடம்பெறுகின்றன. 'திறமை இல்லாமலோ, இண்டர்வியூல சரியா பண்ணாமலோ தோத்தா பரவாயில்ல... எல்லா திறமையும் இருந்தும் தோக்குறப்போ, கண்ணாடியை பார்த்தாலே அசிங்கமா இருக்கு', 'புதைக்க வேண்டியது பொணத்தை மட்டும்தான், பணத்தை இல்ல', 'லட்சம் லட்சமா கொள்ளையடிக்குற அரசியல்வாதிகளுக்கு இரண்டாவது மூணாவது நாலாவது அஞ்சாவது சான்ஸ் எல்லாம் குடுக்குறோம்.. அந்த கொள்ளையை தடுக்க நினைக்குற எனக்கு ஏன் செகண்ட் சான்ஸ் குடுக்கக்கூடாது சார்', 'எவ்ளோ உயரம்ங்கிறது முக்கியமில்ல, எவ்ளோ உயர்றோம்ங்கிறதுதான் முக்கியம்' என எல்லா வசனங்களுமே கைதட்டல்கள் பெறுகிறது. சில வசனங்கள், தற்போதைய அரசியல் சூழலை குறிக்கும்படியும் இருந்தது. 'தற்கொலை தப்புதான்.. ஆனா, படிப்பு கிடைக்காதப்பவோ சரியான வேலைக்கு போக முடியாதப்பவோ பண்றதெல்லாம் தற்கொலை இல்ல, கொலை..' என்கிற வசனம் 'நீட்' அனிதாவை ஞாபகப்படுத்தியது. 'நான் ஊழலை ஒழிக்க போராடுவேன்' என நேர்முகத்தேர்வில் சொல்லும் பெண்ணின் பெயரும் கூட, தற்செயலாக அமைந்ததாக தெரியவில்லை.

'என்னப்பா பண்றது, 15 வயசுலேயே கல்யாணம் ஆயிடுச்சு.. அப்போல்லாம், டிவி கிரிக்கெட்ன்னு எந்த பொழுபோக்கும் இல்லை' என ரம்யாகிருஷ்ணன் சொல்வது, 'ஏற்கனவே சல்பியா இருக்கு, ஃபிளாஷ்பேக் ரொம்ப நேரம் சொல்லுவியாப்பா..' என சத்யன் கேட்பது, 'உனக்கு வேலை கிடைக்கலைன்னா, நான் ஏன்டா சாகணும்?' என தம்பி ராமையா கேட்பது என சீரியஸான காட்சிகளில் வரும் நகைச்சுவையிலும், வேறு சில இயல்பான காமெடிகளிலும் விக்னேஷ் சிவனின் இயக்குனர் முத்திரை அழுத்தமாக தெரிகிறது. ஒரு படத்திற்கான பொழுதுபோக்கு அம்சங்களை அழகாக தொகுத்து ஒரு தரமான எண்டர்டெயினரை தருவதிலும், மேக்கிங்கிலும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், தமிழ் சினிமாவில் பெரிய கமர்ஷியல் இயக்குனராக வலம் வருவார் என்றே தோன்றுகிறது.

நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்