முகப்புவிமர்சனம்

போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டுகிறாரா விஜய் ஆண்டனி? - `திமிரு புடிச்சவன்' விமர்சனம்

  | Friday, November 16, 2018

Rating:

போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டுகிறாரா விஜய் ஆண்டனி? - `திமிரு புடிச்சவன்' விமர்சனம்
 • பிரிவுவகை:
  ஆக்‌ஷன் ட்ராமா
 • நடிகர்கள்:
  விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், தீனா
 • இயக்குனர்:
  கணேஷா
 • தயாரிப்பாளர்:
  ஃபாத்திமா விஜய் ஆண்டனி
 • எழுதியவர்:
  கணேஷா
 • பாடல்கள்:
  விஜய் ஆண்டனி

விருதுநகரில் ஒரு சாதாரண கான்ஸ்டெபிள்லாக வாழ்க்கை நடத்தும் முருகவேலுக்கு (விஜய் ஆண்டனி), தன் தம்பி ரவியை எப்படியாவது படிப்பின் வழியாக வாழ்க்கையில் முன்னேற்ற துடிக்கிறார். அண்ணனின் ஒழுக்க போதனைகளால் கடுப்பாகும் தம்பி ஊரைவிட்டு ஓடுகிறார். சென்னையில் தவறான வழியில் சென்று கொலைக் குற்றவாளியாகிறார். எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்று சென்னை வரும் விஜய் ஆண்டனி இதை எல்லாம் அறிந்ததும், ஒரு இக்கட்டான முடிவெடுக்கிறார். அதன் பின்பு தன் தம்பி போல் பலரையும் தனது சுயலாபத்துக்காகப் பயன்படுத்தும் தலைவன் மீசை பத்மாவை (தீனா) அழிக்க நினைக்கிறார். அது எப்படி நடக்கிறது, அந்த தலைவன் யார், போலீஸ்னா பெரிய புடுங்கிதான் என்பதை எல்லாம் சொல்கிறான் இந்த `திமிரு புடிச்சவன்'

தீமையை அழித்து நன்மையைக் காக்கும் வழக்கமான போலீஸ் கதை. ஆனால், மியூசிகல் படம், ஹாரர் படம் போல் இந்தப் படத்தில் புதிய ஜானர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எஸ்... `திமிரு புடிச்சவன்' ஒரு தெய்வீக போலீஸ் படம். அது ஏன் என்று தியேட்டரில் போய் பார்த்து ரசிகர்கள் அருள் பெறவும்.

விஜய் ஆண்டனி அன்டர் ப்ளேயில் வழக்கம் போல் கலக்குகிறார். நிவேதா பெத்துராஜுடனான ரொமான்ஸ் காட்சிகளும் ஓகேதான். ஆனால், போலீஸாக ஆவேசமாய் பேசும் போது சத்தம் ஓவராக இருக்கிறதே தவிர, கதாபாத்திரத்துக்கான முழுமையான வெளிப்பாடு இல்லை. நிவேதா பெத்துராஜ் செம ஜாலி கேலி பெண்ணாக வருகிறார். பல இடங்களில் அவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்கும் படி இருக்கிறது. விஜய் ஆண்டனியின் தம்பியாக நடித்தவர், இளம் குற்றவாளிகளாக நடித்திருக்கும் மூவர் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். துணை நடிகர்களாக ஆதிரா, தேவராஜ், முத்துராமன், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள். எப்போதும் இரண்டாம் கட்ட வில்லனாக வெயிட் காட்டும் தீனாவுக்கு, இதில் மெய்ன் வில்லனாக வெறித்தனம் காட்ட இடம் கிடைத்திருக்கிறது. அதையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

சீரியஸான படம், நல்ல கருத்தை வலியுறுத்த முயன்றது எல்லாம் ஓகே. ஆனால், இடையிடையில் சீருடையிலேயே காவல் நிலையத்துக்குள் விஜய் ஆண்டனி - நிவேதா பெத்துராஜ் காதல் காட்சிகள், வில்லனை க்ளைமாக்ஸுக்கு முன் அவ்வளவு டம்மி பீஸ் ஆக்குவது, அந்த டிகுடிகுடிகு டிகுன டிகுன பாடலுடன் கூடிய தெய்வீக சண்டைக்காட்சி போன்றவை சுவாரஸ்யமாகப் போக வேண்டிய படத்தை மிகவும் பலவீனப்படுத்துகிறது.

எடிட்டர் விஜய் ஆண்டனி படத்தின் விறுவிறுப்பைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், இயக்குநர் கணேஷாவின் திரைக்கதையில் அப்படி விறுவிறுப்பு தரும் படியான வஸ்து எதுவும் இல்லை என்பதால் கொஞ்சம் பொறுமையை சோதிக்கதான் செய்கிறது. இசையமைப்பாளராக பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார் விஜய் ஆண்டனி. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு படத்தின் தேவைக்கான உழைப்பைக் கொடுத்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் ரொம்ப ஓவர் என்ற ரேஞ்சில் இருந்தாலும் விஜயஆண்டனிக்கு மாஸ் ஏற்ற உதவியிருக்கிறது.

படத்தில் நல்ல கருத்தை சொல்ல முயற்சித்திருப்பது போல, அதை சொல்லும் விதத்திலும் கவனம் செலுத்தி நல்லபடியாக கொடுத்திருந்தால், இந்த திமிரு புடிச்சவன் எல்லோருக்கும் பிடிச்சவன் ஆகியிருப்பான். மற்றபடி, சாதாரணமாக ஒரு ஜனரஞ்சகமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கான சாய்ஸ் மட்டுமே.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்