முகப்புவிமர்சனம்

"எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்?" - டிக் டிக் டிக் விமர்சனம் - Tik Tik Tik Movie Review

  | Friday, June 22, 2018

Rating:

 • பிரிவுவகை:
  ஸ்பேஸ் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன் நந்தகுமார், ஜெயப்பிரகாஷ், ரித்திகா ஸ்ரீநிவாஸ், ஆரவ் ரவி
 • இயக்குனர்:
  சக்தி சௌந்தர் ராஜன்
 • தயாரிப்பாளர்:
  ஹிதேஷ் ஜாபக்
 • எழுதியவர்:
  சக்தி சௌந்தர் ராஜன்
 • பாடல்கள்:
  டி.இமான்

சென்னை எண்ணூரில் வந்து விழுகிறது ஒரு விண்கல். அதிர்ச்சியாகி நிற்பதற்குள், 60 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதும் அதைத் தடுக்க ஒரு வாரமே கெடு எனவும் தெரிகிறது. அந்த விண்கல் விழுந்தால் தமிழ்நாட்டின் வரைபடமே மாறும் அளவுக்கு பாதிப்பு, பல கோடி உயிரிழப்பு ஏற்படும். இதைத் தடுக்க விண்வெளியிலேயே அந்த விண்கல்லை வெடிக்க செய்ய வேண்டும். இந்த மிஷனை ரகசியமாக முடிக்க ஒரு குழுவைத் தயார் செய்கிறது இராணுவ விண்வெளி பாதுகாப்பு மையம். அதிகாரிகள் ஸ்வாதி (நிவேதா பெத்துராஜ்), வின்சென்ட் அசோகன் (ரகுராம்) மற்றும் ஹைடெக் திருட்டுக் குழு வாசு (ஜெயம் ரவி), வெங்கட் (ரமேஷ் திலக்), அப்பு (அர்ஜுனன்) ஆகியோர் விண்வெளிக்கு செல்கிறார்கள். இதில் எதற்கு திருட்டு கும்பல்? விண்கல்லைத் தடுத்தார்களா? அதில் என்ன சிக்கல் வருகிறது என்பதை சொல்கிறது படம்.

பேங்க் ராபரி, ஸோம்பி என வித விதமான ஜானர்களுடன் களம் இறங்கும் சக்தி சௌந்தர் ராஜன் இந்த முறை ஸ்பேஸ் ஃபிலிம் ஜானரை கையில் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முதன் முறையா இந்த களத்தை கொண்டு வந்ததற்கும், முடிந்த அளவு அதை சிறப்பாக செய்ய உழைத்ததற்கும் பாராட்டுகள். உழைப்பைத் தாண்டி, ஒரு படமாக எந்த அளவு நிற்கிறது என்பதுதான் கேள்விக்குறி.

படத்தில் நடிப்பு பற்றி பேச தேவை ஏற்படவில்லை. காரணம் யாருக்கும் நடிப்பதற்கான கதாபாத்திரமாய் இல்லை, கதை கொஞ்சம் பரபரபப்பாக நகர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நடிப்பவர்களின் உணர்ச்சிகளை படம்பிடிக்க அவகாசம் இல்லை. ஜெயம் ரவி மகனை நினைத்துக் கண்கலங்குவது, விறைப்பும் முறைப்புமாக நிவேதா - வின்சென்ட் டீம், அர்ஜுனனின் தொழில்நுட்ப தந்திரம், ரமேஷ் திலக் காட்டும் வித்தை என எல்லோருக்குமே நடிப்பு தேவை குறைவான வேடம்தான். சொல்லிக் கொள்ளலாம் என்றால் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கும் உயர் அதிகாரி வேடத்தை சொல்லலாம். ஆனால், அதிலும் அவரால் முழுமையைப் பொருந்திப் போக முடியாததால் எந்த ஒரு பாத்திரமும் மனதில் தங்குவதாய் இல்லை. உதவி அதிகாரியாக வரும் ரித்திகா ஸ்ரீநிவாஸ், இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாய் இருக்கும் ஆரவ், ஆராய்ச்சிக் குழுவில் இருக்கும் பாலாஜி வேணுகோபால் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடித்திருக்கிறார்கள்.

விண்கல், தந்தை - மகன் பாசம், திருட்டு, இடையில் திருப்பம் என ஸ்பேஸ் த்ரில்லருக்கான அத்தனை சாத்தியங்களுமே படத்துக்குள் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் வைத்து எந்த அழுத்தமும் இல்லாமல் கதை நகர்த்தியிருப்பது படத்தின் மிகப் பெரிய மைனஸ். கூடவே இது போன்ற படத்தில் மிகப் பெரிதாய் கவனிக்க வேண்டியது லாஜிக் விஷயங்களைத்தான். அதில் எக்கச்சக்க சொதப்பல். ஆரம்பத்தில் நிவேதா பெத்துராஜை கொல்ல வந்தது யார்? அது கதைக்கே தேவை இல்லை என்றால் எதற்கு படத்தில் இருக்கிறது? அந்த எதிரி நாட்டு ஸ்பேஸ் ஸ்டேஷன் அதிகாரி, ஜெயம் ரவி குழுவை நிலவிலேயே விட்டிருந்தால், அவர்கள் திட்டம் பலித்திருக்கும். தேவையே இல்லாமல் அவர்களுக்கு அனுமதி கொடுப்பது போல அழைத்து, பின் கைது செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? பல பயிற்சிகள் பெற்று விண்வெளி வரை வந்த வீரர்களை, ஜெயம் ரவி இவ்வளவு துக்கடா ட்ரிக் பயன்படுத்தி ஏமாற்றுகிறார் என்பதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்? போலீஸ் ஸ்டேஷன், தேர்டு அம்பையரை எல்லாம் ஹேக் செய்யும் அர்ஜுனன், அவுட் ஆஃப் தி வேர்ல்டு சிந்தித்து கடைசியில் ஸ்பேஸ் ஸ்டேஷன் வரை சகலத்தையும் ஹேக் செய்கிறார் என காதில் பூந்தொட்டியே வைத்து அதற்கு ஆடியன்ஸ் கையாலேய மினரல் வாட்டர் ஊற்ற வைப்பதெல்லாம் அடுக்குமா?

இந்த சாயலில் பல ஹாலிவுட் படங்கள் பார்த்துவிட்டதாலும், வெறும் முயற்சிக்காக மட்டும் ஒரு படத்தை பாராட்ட முடியாது என்பதும் இங்கு சிக்கலாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் படத்தின் மேக்கிங் வீடியோ பார்பதற்காக வரமாட்டார்கள் தானே இயக்குநரே? படத்தின் துல்லியமான விஷுவல் எஃபக்ட்ஸ், கச்சிதமான கதை, விறுவிறுப்பான திரைக்கதைதானே இங்கு தேவை. கிடைத்ததை வைத்து படம் செய்துவிட்டு இவ்வளவு தான் பட்ஜெட், இவ்வளவுதான் வசதி இருக்கிறது என சொல்வது எவ்வளவு தூரம் நியாயமாய் இருக்கும் எனத் தெரியவில்லை.

இரண்டே பாடல்கள், காட்சி தகுந்தாற்போல் பின்னணி இசை, கதையில் இல்லாத பதற்றத்தை இசை மூலம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இமான். அந்த இசை படத்தைக் கொஞ்சம் துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. வெங்கடேஷ் ஒளிப்பதிவு விண்வெளியின் மிதப்பை ஆடியன்ஸுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. ஏவுதள அலுவலகம், விண்களம், உடைகள், பொருட்கள் என படத்தை உயிர்ப்பிக்க உழைத்திருக்கிறது ஆடைவடிவமைப்பாளர் தனபால் மற்றும் கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி டீம். படத்தை ஓரளவு சுறுசுறுப்பாக கடத்துவது பிரதீப் ராகவின் படத்தொகுப்புதான். எது தேவை, எவ்வளவு சுருக்கமாக இருக்கவேண்டும் என கவனமாக உழைத்திருக்கிறார்.

விண்வெளி கதை என படத்தின் ஜானரில் இருந்த புதுமை படத்துக்குள்ளும் சுவராஸ்யத்தோடு இருந்திருந்தால், தமிழ்சினிமாவின் மிக முக்கியமான முயற்சியாக இருந்திருக்கும் இந்த `டிக் டிக் டிக்'
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்