முகப்புவிமர்சனம்

போதை கேங்க்ஸ்டராக மிரட்டுகிறாரா குருசோமசுந்தரம்? - 'வஞ்சகர் உலகம்' விமர்சனம்' - Vanjagar Ulagam Movie Review

  | Friday, September 07, 2018

Rating:

போதை கேங்க்ஸ்டராக மிரட்டுகிறாரா குருசோமசுந்தரம்? - 'வஞ்சகர் உலகம்' விமர்சனம்' - Vanjagar Ulagam Movie Review
 • பிரிவுவகை:
  க்ரைம் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  குருசோமசுந்தரம், சிபி, விசாகன், சாந்தினி, அனீஷா ஆம்ப்ரோஸ், அழகம்பெருமாள், ஜான் விஜய்
 • இயக்குனர்:
  மனோஜ் பீதா
 • தயாரிப்பாளர்:
  மஞ்சுளா பீதா
 • எழுதியவர்:
  வினாயக் - மனோஜ் பீதா
 • பாடல்கள்:
  சாம் சி.எஸ்

வஞ்சகர்கள் உலகில் நடக்கும் தந்திர ஆட்டத்தின் கதையை சொல்கிறது படம்.

மைதிலி (சாந்தினி) அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்துகிடக்கிறார். சந்தேகத்தின் பேரில் எதிர்வீட்டில் இருக்கும் சண்முகத்தை (சிபிபுவனசந்திரன்) காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். இன்னொரு பக்கம் துரைராஜ் எனும் கேங்க்ஸ்டரைப் பிடிக்க பத்திரிக்கையாளரான விசாகன் - சம்யுக்தா (அனீஷா) ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மகாலிங்கம் (அழகம்பெருமாள்) ஆகியோர் முயற்சி செய்கின்றனர். துரைராஜ் கேங்கில் வேலை செய்த மாறனை (ஜான் விஜய்) கைது செய்து விசாரிக்கிறது போலீஸ். கூடவே மைதிலி கொலை வழக்கும் நடக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் போலீஸ் என்கவுண்டரில் இறந்ததாக கருதப்பட்ட சம்பத் (குரு சோமசுந்தரம்) உயிருடன் வருகிறான். யார் அந்த துரைராஜ்? மைதிலியைக் கொன்றது யார்? சம்பத் எப்படி உயிருடன் வந்தான்? என பல கேள்விகளுக்கு நான் லீனியராக பதில் சொல்கிறது `வஞ்சகர் உலகம்'

துவக்கத்தில் இருந்து இது வழக்கமான சினிமா இல்லை என்பதையும் வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என்பதையும் பளிச் எனச் சொல்லியபடியே கதைக்குள் நுழைகிறது படம். நான் லீனியராய் கதை நகர்த்தி சுவாரஸ்யமான படத்தைத் கொடுக்க நினைத்திருக்கும் இயக்குநர் மனோஜ் பீதா மற்றும் கதாசிரியர் வினாயக் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் ஒரு மோட்டிவ் அழுத்தமானதாக இருந்தது. போதைப் பொருளால் சகோதரனை இழந்த விசாகன் போதை கும்பலின் தலைவனை அழிக்க நினைக்கிறான். தன்னை கேலி செய்தவர்களை எல்லாம் துவம்சம் செய்யும் சம்பத், காதலனை விட்டு விருப்பமில்லாத திருமணம் செய்து கொள்ளும் மைதிலி, மைதிலியின் மேல் காதல் கொள்ளும் சண்முகம் என ஒரு சங்கிலி போன்ற தொடர்புள்ள கதாபாத்திரங்கள். இவர்களின் இணைப்பை குலைத்துப் போடும் படி கதைக்குள் நடக்கும் சம்பவம் கூட சுவாரஸ்யம்தான். ஆனால், ஒரு தெளிவில்லாத தன்மையுடனேயே நகரும் கதை ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வைத் தாண்டி வேறு எந்த பாதிப்பையும் வழங்கவில்லை. நான் லீனியர் சுவாரஸ்யம்தான் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அயர்ச்சியை உண்டு பண்ணுகிறது.

படத்தின் முக்கியப் பாத்திரம் சம்பத்தாக நடித்திருக்கும் குருசோமசுந்தரம். ஒரு கேங்க்ஸ்டர் தோரணை இருந்தாலும், பல காட்சிகளில் அவரது நடிப்பு மூலம் அதற்கு வலு சேர்க்கவும் முயற்சிக்கிறார். அது சில இடங்களில் மட்டும் வேலைக்காகிறது. சாந்தினியின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பலம். சின்ன கதாபாத்திரம் என்றாலும் கவனிக்க வைக்கும் நடிப்பை வழங்கிவிடுகிறார். குருசோமசுந்தரத்தின் நண்பராக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ் நடிப்பு மிகக் கச்சிதம். புதுமுகங்களாக சிபி, விசாகன். சிபிக்கு பதற்றமான, தடுமாற்றமான நடிப்பு வழங்கும் படியான பாத்திரம். நினைத்ததை ஓரளவு வெளிக்காட்டியிருக்கிறார். விசாகன் நிதானமான, ஆராய்ந்து பேசும் கதாபாத்திரம். ஆனால் ஒட்டாத பின்னணி குரல், சுமாரான நடிப்பால் தடுமாறுகிறார். அனிஷா அம்புரோஸ் சொதப்பலான லிப் சிங்குடன் வசனம் பேசி ஏனோ தானோ என்று ஒன்றை செய்திருக்கிறார். கூடவே படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை.

படத்தில் சில காட்சிகள் மிகவே ரசிக்கும் படியாக இருந்தது. சம்பத் - அழகம்பெருமாள் இடையே நடக்கும் உரையாடல், டப் ஸ்டெப் பின்னணி ஒலிக்க துப்பாக்கியுடன் வரும் சோமசுந்தரம், குருசோமசுந்தரத்தின் நிலை இல்லாத மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகள் என பல இடங்கள் வழக்கமான படங்களில் இருந்து விலகி வேறு ஒன்றாக தெரிந்தது. ஆனால், ட்ரீட்மென்ட் மட்டும் வித்தியாசம் காட்ட நினைத்து, வழக்கமான ஒரு கதையை கலைத்து போட்டு சொல்வது மட்டும் போதும் என நினைத்திருப்பதுதான் சறுக்கல். தான் உண்மையை மறைத்ததுக்காக சிபி சொல்லும் காரணம் அத்தனை நம்பும் படியாக இல்லை, ஸ்கூல் முடிந்து குழந்தையை அழைத்து வருவதைப் போல் வில்லன்களால் கடத்தி செல்லப்பட்ட அனிஷாவை அசால்டாக அழைத்து செல்ல சிபி வரும் காட்சி, காவலர்களால வரும் வாசு விக்ரம் - மூர்த்தி ஆகியோரை அத்தனை முட்டாளாகக் காட்டிவிட்டு விசாகன் பாத்திரம் மட்டுமே புத்திசாலி என்பது போல் சித்தரித்திருப்பதும் நம்பும்படி இல்லை. கூடவே படத்தின் முக்கிய சஸ்பென்சாக மறைக்கப்பட்டு க்ளைமாக்ஸில் சொல்லப்படும் இரண்டு திருப்பங்களும் மிக எளிமையாக யூகிக்கும் படியே இருக்கிறது. டெக்னிகலாக படம் மிகவும் மிரட்டலான ஒன்று. ரோட்ரிகோ டெல்ரியோஹெரெரா - சரவணன் ராமசாமி ஆகியோரின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பான காட்சிகளைத் தந்திருக்கிறது. கூடவே படத்தின் ஓட்டத்தை சரியாக உணர்த்தும் படி சாம் சி.எஸ் இசைத்திருக்கும் பின்னணி இசையும் மிகப் பெரிய பலம்.

படத்தை சுவாரஸ்யமாக தர நினைத்தது போல், தெளிவான ஒன்றாகவும் தர நினைத்திருந்தால் ஆடியன்ஸை வீழ்த்தியிருக்கும் இந்த 'வஞ்சகர் உலகம்'

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்