விளம்பரம்
முகப்புவிமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 திரை விமர்சனம் - VelaiIlla Pattadhaari 2 movie review

  | Saturday, August 12, 2017

Rating:

வேலையில்லா பட்டதாரி 2 திரை விமர்சனம் - VelaiIlla Pattadhaari 2 movie review
  • பிரிவுவகை:
    ஆக்ஷன்- காமெடி டிராமா
  • நடிகர்கள்:
    தனுஷ், அமலா பால், சமுத்திரகனி, கஜோல்
  • இயக்குனர்:
    சௌந்தர்யா ரஜினிகாந்த்
  • தயாரிப்பாளர்:
    கலைபுலி எஸ்.தாணு
  • எழுதியவர்:
    தனுஷ்
  • பாடல்கள்:
    ஷான் ரோல்டன்

2014ஆம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தின் மூலம், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களை இயக்குனராக அறிமுகப்படுத்தினார் நடிகர் / தயாரிப்பாளர் தனுஷ். தனுஷின் 25வது படமான 'வி.ஐ.பி', மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வெற்றிப்படங்களின் sequelகளை எடுக்கும் டிரெண்டில் இணைந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகமும் அறிவிக்கப்பட்டது. கலைப்புலி S.தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற காதல் திரைப்படம் கைவிடப்பட்ட பின்பு, அதே கூட்டணியோடு இணைந்து தனுஷின் கதை-வசனத்தில் 'வி.ஐ.பி-2' திரைப்படத்தை எடுப்பதென முடிவானது. முதல் பாகத்தை விட பல மடங்கு பெரிய பொருட்செலவில் படமாக்குவது என முடிவான பின், படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தமிழ் சினிமாவில் 'சிங்கம்', 'முனி', 'பில்லா', 'சென்னை 600028', 'பசங்க', 'அரண்மனை', 'பீட்சா', 'கோ', 'ஜித்தன்', 'ஜெய் ஹிந்த்', 'நான் அவன் இல்லை' என எத்தனையோ படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் பாதி படங்களே வெற்றி பெற்றிருக்கின்றன. அதிலும் 'சென்னை 600028', 'சிங்கம்' போன்ற ஒரு சில படங்களில்தான் கதாபாத்திரங்களும், கதையின் தொடர்ச்சியும் சீராக இருந்திருக்கின்றது. 'முனி', 'அரண்மனை' போன்ற பெரும்பாலான திரைப்படங்களில் கதை என எதுவுமே இன்றி, முந்தைய பாகத்தில் வந்த காட்சிகளையே எடுத்து வைத்து 'பொழுதுபோக்கு' என்கிற பெயரில் லாபம் பார்த்தனர்.


​'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தின் முதல் பாகத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை செய்ய வேண்டும் என ஆசைப்படும் ரகுவரன் என்கிற இளைஞன் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவதையும், ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்கு சேரும் அவர் எப்படி பல தடைகளைத் தாண்டி ஒரு குடிசை மாற்று குடியிருப்பு கட்டிடத்தைக் கட்டி முடித்தார் என்பதையும் காட்டி இருந்தார்கள். இரண்டாம் பாகத்தில் தனக்கு வேண்டியதை அடித்துப் பிடுங்கும், ஒரு சாமானியனை வளரவிடாமல் காலில் போட்டு மிதிக்கும் கார்ப்பரேட் உலகின் அரசியல் பற்றி காட்டியிருக்கிறார்கள். கேட்பதற்கு சுவாரஸ்யமான கதையாக தெரிந்தாலும், இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிகிறார்கள்.

முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே தொடங்கும் இந்த பாகம், வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கஜோலின் அறிமுகத்தோடும் அவருக்கு தனுஷுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதலுடனும் தொடங்குகிறது. அதை தொடர்ந்து வரும், தனுஷ்-அமலா பால் குடும்ப காட்சிகள் இயல்பாக ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
காதல் காட்சிகளும், ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை காட்சிகள் 'வி.ஐ.பி' என்கிற பிராண்ட்டின் மிக முக்கிய ப்ளஸ் பாய்ண்ட்களில் ஒன்று என்பதை நன்கு அறிந்த தனுஷ் அதை இரண்டாம் பாகத்திலும் சரியாக பயன்படுத்தியுள்ளார் (ஒரு சில காட்சிகள் போரடித்தாலும் கூட). அந்த வகையில், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான தொடர்பு பலப்படுகிறது. சுரபி நடித்திருந்த கதாபாத்திரத்தில், ரித்து வர்மா வருவது மட்டும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் 'இவருக்கு பதில் இவர்' அறிவிப்பை நினைவுபடுத்துகிறது.​

சில சில குறைகளும் போரடிக்கும் பாடல்களும் இருந்தாலும் கூட ரசிகர்களின் ஆர்வம் குறையாத வண்ணம் வேகமாக நகரும் முதல் பாதி, இடைவேளையில் இன்னும் வேகமெடுக்கிறது. இரண்டாம் பாதி இன்னும் பரபரப்பாக, சுவாரஸ்யமாக இருக்கும் என நாம் எதிர்பார்த்து காத்திருக்கையில் ரொம்பவே நாடகத்தனமாக நகரத் தொடங்குகிறது இரண்டாம் பாதி. எந்த திருப்பங்களும் இல்லாமல், ரகுவரன்-வசுந்தரா இடையே எந்த வித புத்திசாலித்தனமான மைண்ட் கேம்களும் இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் யூகிக்கக்கூடிய விதத்திலேயே நகர்கிறது. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படும் ஒரு தீம் பார்க்கின் கட்டிட வேலையை தடுக்க தனுஷும் அவரது வி.ஐ.பி பாய்ஸும் போராடும் காட்சிகளும், அவர்கள் அதை மக்களுக்கு கொண்டு செல்லும் காட்சிகளும் எந்த வித புதுமையும் இன்றி சலிப்பையே ஏற்படுத்துகிறது.


ஒரு ஆணும் பெண்ணும் மோதிக் கொள்ளும் படங்களாக தமிழ் சினிமாவில் 'மன்னன்', 'மாப்பிள்ளை', 'படையப்பா' என பல திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் அவற்றை நினைவுபடுத்தாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது சாமர்த்தியம் தான் என்றாலும் கூட, இப்படிப்பட்ட கதைகளுக்கே உண்டான கிளி ஷேக்கள் படமெங்கும் நிரம்பி கிடக்கிறது. 'வி.ஐ.பி' திரைப்படத்தின் முக்கிய குறைகளில் ஒன்று - வலுவில்லாத வில்லன் கதாபாத்திரம்; அது இந்த பாகத்திலும் தொடர்ந்துள்ளது. கஜோலின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் நியாயப்படுத்தப்பட்ட பின், அந்த பாத்திரத்தின் வீரியமே சரிந்து விடுகிறது. தனுஷ் மற்றும் கஜோலை மோத வைக்கும் சரவண சுப்பையா கதாபாத்திரத்தின் வில்லத்தனமும் பார்வையாளர்களை மிரட்டவில்லை. இப்படியாக மொத்த இரண்டாம் பாதியுமே 'ஏனோ தானோ' என்றே நகர்கிறது. இது போன்ற படங்களின் க்ளைமாக்ஸில் எதிர்மறை கதாபாத்திரத்தில் தோன்றுபவர் ஏதாவது ஒரு பிரச்சினையிலிருந்து ஹீரோவால் காப்பாற்றப்பட்டு திருந்திவிடுவார் அல்லது இறந்துவிடுவார் என்பதே தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இதைத் தாண்டி வேறு ஏதாவது வகையில் எழுத்தாளர் தனுஷும் இயக்குனர் சௌந்தர்யாவும் நம்மை ஆச்சர்யப்படுத்துவார்களா என எதிர்பார்க்கையில் அயர்ச்சியைத் தரக்கூடிய ஒரு க்ளைமாக்ஸுடன் முடிகிறது திரைப்படம்.

நடிகராக தனுஷ் தன் பங்கினை சிறப்பாக செய்துள்ளார்; நடனம், காமெடி, சண்டைக்காட்சிகள் என எல்லாவற்றிலும் தன் டிரேட்மார்க் பாணியில் அசத்துகிறார். வசுந்திரா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ள கஜோல் தன் பாத்திரத்தின் தேவையறிந்து நன்றாக நடித்திருந்தாலும் கூட, ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்குமளவிற்கு அவரது கதாபாத்திரம் சரியாக படைக்கப்படவில்லை என்பது வருத்தமே! அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் என மற்ற அனைவருமே குறைகளின்றி நடித்துள்ளனர். இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் இத்திரைப்படத்தில் ஒரேயொரு பாடலைத் தவிர மற்ற எல்லா பாடல்களுமே காரணமின்றியே வருகின்றன, அவற்றில் ஒரேயொரு பாடல் மட்டுமே கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையில் ஷான் ரோல்டன் கைத்தட்டல்கள் அள்ளினாலும், அனிருத் இல்லாத 'வி.ஐ.பி' பாடல்கள் கொஞ்சமும் ஈர்க்கவில்லை. அதே போல, சண்டைக் காட்சிகளில் 'மாரி' திரைப்படத்தைப் போல அளவிற்கதிகமாக ஸ்லோ மோஷன் ஷாட்களை வைத்தது ரசிக்கும்படி இல்லை. மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் சமீரின் ஒளிப்பதிவு, படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று.

மொத்தத்தில், ஒரு நல்ல சீக்குவலாகவும் மிகச்சிறந்த எண்டர்டெயினராகவும் எடுத்திட எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தும் கூட அவை சரிவரப் பயன்படுத்தப்படாததாலும் மந்தமான இரண்டாம் பாதியாலும், சுமாரான திரைப்படமாக ஆகியுள்ளது 'வேலையில்லா பட்டதாரி பார்ட் 2'

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்