முகப்புவிமர்சனம்

வேலைக்காரன் திரைப்பட விமர்சனம் - Velaikkaran Movie Review

  | Friday, December 22, 2017

Rating:

வேலைக்காரன் திரைப்பட விமர்சனம் - Velaikkaran Movie Review
 • பிரிவுவகை:
  சோஷியல் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாஸில், சினேகா, பிரகாஷ் ராஜ்
 • இயக்குனர்:
  மோகன் ராஜா
 • தயாரிப்பாளர்:
  24 AM ஸ்டுடியோஸ்
 • எழுதியவர்:
  மோகன் ராஜா
 • பாடல்கள்:
  அனிருத்

ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் திரைப்படம் எடுப்பதற்கு, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுப்பதற்கு எந்தவித இரட்டை அர்த்த காமெடியோ, ஆபாச பாடல்களோ அல்லது ஹீரோவை துதி பாடுதலோ அவசியமே இல்லை, ஒரு நல்ல கதையும் வலுவான திரைக்கதையும் மட்டும் இருந்தாலே போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் 'தனி ஒருவன்' திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் ராஜா. தனது ஆரம்ப கால படங்கள் மூலமாகவே ஃபேமிலி ஆடியன்ஸிடையே 'மோகன் ராஜா படங்கள் என்றால் நன்றாக இருக்கும்' என்கிற நம்பிக்கையை வென்ற இவர், 'தனி ஒருவன்' திரைப்படத்திற்கு பின் 'ராஜாவின் படங்களில் சமூக அக்கறையும், கோபமும் இருக்கும்' என்கிற நம்பிக்கையையும் உருவாக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா திரைப்படம் இயக்குகிறார் என்றதுமே, படம் மீதான எதிர்பார்ப்பும் இரட்டிப்பாகிவிட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களைப் போல சிவாவிற்கும் காலை 5 மணிக்கே முதல் காட்சி போடுவது மட்டுமின்றி, அந்த காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டமும், ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டத்தை பார்க்க முடிந்ததும் மிகப்பெரிய ஆச்சர்யம்தான். பெரும் பொருட்செலவில் உருவாகி, எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் 'வேலைக்காரன்' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்.
 
சென்னை மாநகரத்தில் உள்ள ஒரு குப்பத்தை சேர்ந்த இளைஞனான அறிவு (சிவகார்த்திகேயன்), தன் குப்பத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என நினைக்கின்றான். இளைஞர்களும் சிறுவர்களும் தவறான வழியில் தடம் மாறி செல்வதை விரும்பாத அவன், அவர்களுக்காக தனது குப்பத்தில் உள்ள காசி (பிரகாஷ் ராஜ்) என்கிற ரவுடியை எதிர்க்கிறான். இந்நிலையில், தனது குடும்பத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் 'விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்' பிரிவில் வேலைக்கு சேர்கிறான். அங்கே சேர்ந்த பின், அறிவு தன் வாழ்க்கையில் பல மாற்றங்களை பார்க்கிறான், தன்னை சுற்றியுள்ள பல உண்மைகளையும் பிரச்சினைகளையும் உணர்கிறான். ஒரு சாதாரண வேலைக்காரனாக அந்த பிரச்சினைகளை தீர்க்க அறிவு என்ன செய்கிறான், என்னென்ன போராட்டங்களை மேற்கொள்கிறான் என்பதே 'வேலைக்காரன்' திரைப்படத்தின் கதை.
 
தொடர்ந்து சமூக பொறுப்புள்ள கமர்ஷியல் திரைப்படங்களையும், சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளை நாம் கவனிக்கத் தவறும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் திரைப்படங்களையும் கொடுக்க நினைக்கும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு ஒரு சல்யூட்! எவ்வளவு சம்பாதித்தாலும் மிடில் கிளாஸ் மக்களை  கடனாளியாகவே இருக்க செய்திடும் வகையில், அவர்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை பிடுங்கி அவர்கள் வீட்டை தேவையற்ற பொருட்களால் நிரப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் யுக்தியையும், நாம் தினமும் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் குழந்தைகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்களிலும் இருக்கும் கலப்படம் பற்றியும், அப்பொருட்களின் உற்பத்தி முறை, பேக்கிங், காலாவதி தேதி, சந்தைப்படுத்தும் முறை, விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் இருக்கும் நெறிமுறையற்ற விஷயங்களை எல்லாம் விரிவாக பேசுகிறது 'வேலைக்காரன்' திரைப்படம்.
 
கதையாக கேட்கும்பொழுது சுவாரஸ்யமாக இருக்கும் 'வேலைக்காரன்', ஒரு திரைப்படமாக பார்க்கையில் முழுமையான திருப்தியை தராமல் போகிறது. அதற்கு முக்கிய காரணம், வலுவில்லாத நீளமான இரண்டாம் பாதி. 'குப்பம் எப்.எம்' என்கிற அழகான ஐடியாவோடு 'கொலைகார குப்பம்' என்கிற பெயரின் முரணை பேசும் வசனங்களோடு தொடங்கும் திரைப்படம், அதற்கு பின் காசி மற்றும் தாஸின் அடியாட்கள் மோதிக்கொள்ளும் காட்சி முடியும் வரை முதல் 20 நிமிடங்களில் சற்றே சுவாரஸ்யக் குறைவோடே நகர்கிறது. அதன் பின், இடைவேளை வரை நூல் பிடித்தாற்போல் படு சுவாரஸ்யமாக நகர்கிறது. அறிவு எனும் சிவகார்த்திகேயன், அறிவு உடன் பணிபுரியும் ஆதி என்கிற ஃபஹத் பாசில், ரவுடி காசி என்கிற பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது எதிரி தாஸ் என்கிற சரத் லோஹிதஸ்வா, தொழில் எதிரிகளான கார்ப்பரேட் முதலாளிகள் அனிஷ் குருவில்லா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேகர், அறிவின் நண்பர்களான ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சதீஷ் என கிட்டத்தட்ட முதல் பாதியின் பெரும் பகுதி முழுக்க இந்த படத்தின் நட்சத்திர பட்டாளத்தின் கதாபாத்திர அறிமுகங்களிலேயே செலவாகிறது.
 
முதல் பாதி முழுக்கவே ஒவ்வொரு காட்சியிலுமே கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார தந்திரம், சந்தைப்படுத்தும் யுக்திகள், போட்டி நிறுவனங்களை வீழ்த்தும் முறை என பல விவரிப்புகளில் அசர வைக்கிறார்கள். அக்காட்சிகளில் வரும் ஒவ்வொரு தகவலுக்காகவும், படக்குழு எவ்வளவு ஆராய்ந்திருப்பார்களோ என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை. சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் நுழையும் நம் கைகளில் கூடைகள் கொடுக்கப்படுவதற்கான காரணம், ஜன்னல்கள் இல்லாததன் காரணம், குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் எல்லாம் கீழ்வரிசையில் அடுக்கப்படும் காரணம், பில் கவுண்டரில் காத்திருக்கும் நேரத்தில் குழந்தைகளுக்காக வாங்கும் பொருட்கள் என நாம் ஏற்கனவே படித்திருக்கக்கூடிய அல்லது தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை எல்லாம் அழகாக சொல்லியிருக்கிறார்கள். தன் வீட்டில் stabilizer விற்க வந்த விற்பனை பிரதிநிதியை உட்கார வைத்து பேசும் காட்சி, மக்களின் மனநிலை பற்றி ஃபஹத் பாசில் சிவகார்த்தியேகயனிடம் பேசும் காட்சி, கார்ப்பரேட் ஊழியர்களின் மாத டார்கெட்டையும் கூலிப்படை அடியாளின் கொலைகளையும் ஒப்பிட்டு காட்டும் காட்சிகளில் எல்லாம் விசில் பறக்கிறது.
 
'காசி' உட்பட ஒரு சில கதாபாத்திரங்கள் கையாண்டப்பட்ட விதம் சினிமாத்தனமாக இருந்தாலும், பாத்திரப் படைப்புகள் சற்றே வித்தியாசமாகவும் இயல்பாகவும் இருந்தது. ஹீரோ என்கிற ஒரே காரணத்துக்காக, சிவகார்த்திகேயனை வல்லவனாகவோ மிகப்பெரிய வீரனகாவோ காட்டாமல் சாதாரண மிடில் கிளாஸ் வீட்டு பையனாக, தெளிவான சமூகப் பார்வையுள்ள அதே சமயம் சற்றே வெகுளியான ஒரு ஆளாகாவே காட்டியிருந்தது புதிதாக இருந்தது. ஹீரோவுக்கு மாஸாக சண்டைக்காட்சி வைக்கிறேன் என அந்த கதாபாத்திரத்தின் நிலைத்தன்மையை கெடுக்காமல், கடைசி வரை ஒரேயொரு கண்டைக்காட்சி கூட வைக்காதது அந்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் ராஜா கொடுத்த மரியாதை.
 
படம் முழுக்கவே வசனங்கள் மிகப்பெரிய பலமாகவும், படத்தை நகர்த்தி செல்லும் விஷயமாகவும் இருக்கிறது. ​'போன தலைமுறையில பயம், வறுமையினால தப்பு பண்ணது முடிஞ்சு போய்.. இப்போ, என்ஜாய் பண்ணி தப்பு பண்ண ஆரம்பிச்சாச்சு', 'இனிமே கூலிப்படைங்கிற அடையாளம் வேணாம்... சூழ்நிலைக்காக நாம மாறுனதெல்லாம் போதும், இனிமே நமக்கு ஏத்த மாதிரி இந்த சூழ்நிலையை மாத்துவோம்', 'மிடில் கிளாஸ்காரன் கிட்ட 30ஆம் தேதி போனா, தேவையான பொருளை கூட வாங்கமாட்டான்.. 1ஆம் தேதி போனா, தேவையில்லாத பொருளைக் கூட வாங்கி வெச்சுப்பான்', 'இன்ஸ்டால்மென்ட்ல வீடு முழுக்க ஏதேதோ வாங்கிப் போட்டுட்டு, தேவையான சாக்ஸ் கூட வாங்க முடியல', 'ஒருத்தன் 8 மணி நேரம்தான் worker, மீதி 16 மணி நேரம் consumer', 'அரசாங்கம் சொல்றபடி பொருட்களை தயார் பண்ணீங்கன்னா, உங்களுக்கு லாபத்துலதான் நஷ்டம் வரும்.. எங்களுக்கு உயிரே லாபம்', 'கலாம் வந்தா மாறிடும், கெஜ்ரிவால் வந்தா மாறிடும்ன்னு நம்பிட்டே உட்காந்திருக்க கூடாது...', 'உலகின் தல சிறந்த சொல் - செயல்' என ஒவ்வொரு காட்சியிலுமே கூர்மையான வசனங்கள் கவனம் ஈர்த்தது. 'தமிழனாய் இருந்தால் பகிருங்கள்ன்னு போடு... எதை வேணா ஷேர் பண்ணுவானுங்க' போன்ற கிண்டல் வரிகளும் ரசிக்கும்படியே இருந்தன.
 
இத்தனை பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் கூட, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வும் பெரிதாக எந்த திருப்புமுனைகளும் இல்லாமல் எளிதில் கணிக்கக்கூடியபடி நகரும் வலுவில்லாத இரண்டாம் பாதியின் திரைக்கதை மிகப்பெரிய மைனஸ். முதல் பாதி வரை படு புத்திசாலியாக, தந்திரக்காரனாக காட்டப்படும் ஆதி கதாபாத்திரம், இரண்டாம் பாதி முழுக்க அறிவு செய்யும் எல்லா காரியத்தையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்ப்பது ஒட்டு மொத்தமாக ஹீரோ வில்லனிடையேயான ஆடுபுலி ஆட்டத்தையே சுவாரஸ்யமற்று போக செய்கிறது. ஒரு சாதாரண வேலைக்காரனாக இருக்கும் அறிவு கதாபாத்திரம், யார் துணையும் இல்லாமல் சர்வ வல்லமை படைத்த கார்ப்பரேட் முதலாளிகள் கண்ணில் விரல்விட்டு ஆட்டும் காட்சிகளிலும் நம்பகத்தன்மை இல்லை. இடைவேளைக்கு பின்னர், நிறைய இடங்களில் convenient writing மட்டுமே இருந்தது. ஹீரோவாக இருந்தாலும், வில்லனாக இருந்தாலும் அவர்கள் நினைப்பது ஒரே நொடியில் நடந்துவிடுகிறது; அவர்களுக்கென எந்த சவாலோ பெரிய பிரச்சினைகளோ இல்லாததால் அந்த கதாபாத்திரங்களின் மீது பரிதாமாபோ அவர்கள் வெற்றியின் பொழுது சந்தோஷமோ ஏற்படவில்லை. இந்த படம் குறித்த பேட்டியில் 'தனி ஒருவன் படத்தில் நல்லவன் மித்ரனை விட, கெட்டவன் சித்தார்த் அபிமன்யுவே அதிகம் கொண்டாடப்பட்டான். அது தவறு, அப்படி நல்லவனை விட கெட்டவன் கொண்டாடப்படக்கூடாது. அந்த தவறு வேலைக்காரன் படத்தில் நடக்காது' என சொல்லியிருந்தார். ஒரு வேளை, அதனால் தானோ என்னவோ இரண்டாம் பாதியில் ஆதி கதாபாத்திரம் வலுவில்லாமல் போய்விட்டதோ என்கிற கேள்வி எழுகிறது. படத்தின் க்ளைமாக்ஸும் திடீரென முடிந்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வையே தந்தது.
 
டெக்னிக்கல் அம்சங்களில் அனைவரையும் கவர்ந்தது, மலைப்பை ஏற்படுத்தியது கலை இயக்குனர் முத்துராஜின் படைப்பில் உருவான குப்பம் செட். 2 லட்சம் சதுரடியில் ஒரு குப்பத்தையே நம் கண்முன் நிறுத்தியிருந்தார்கள்; இது உண்மை அல்ல செட் என்பதே பலர் கவனித்திருக்கமாட்டார்கள் என்பதே அவர்களின் உழைப்பின் வெற்றி. ராம்ஜி அவர்களின் ஒளிப்பதிவும், ரூபன் மற்றும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் இயக்குனரின் கதை சொல்லும் பார்வைக்கு பெரிதும் உதவியிருக்கிறது. அனிருத்தின் இசையில் எல்லா பாடல்களுமே அருமை; இரண்டாம் பாதியின் பின்னணி இசையில் மட்டும் சற்றே சறுக்கிவிட்டார்.
 
தனது கேரியரில் முதல்முறையாக ஒரு முழுநீள சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன் பங்கினை செவ்வனே செய்திருக்கிறார். ஜாலியான காட்சிகளிலும், நடனத்திலும் எப்பொழுதும் போல பட்டையை கிளப்பும் சிவா, எமோஷனல் காட்சிகளின் நடிப்பில் மட்டும் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாத்திரப் படைப்பில் ஒரு சில குறைகள் இருந்தாலும் கூட, நடிப்பில் அட்டகாசப்படுத்திவிட்டார் ஃபஹத் பாசில். வசனங்களே இல்லாத / குறைவாக இருந்த பல காட்சிகளில் கூட, பார்வையாலேயே மிரட்டியிருந்தார். இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சறுக்கலால் இத்திரைப்படம் யானைப் பசிக்கு சோளப்பொறியாக போய்விட்டாலும் கூட, ஃபஹத்துக்கு 'வேலைக்காரன்' ஒரு அற்புதமான அறிமுகமே! தமிழ் சினிமாவில் அவர் இன்னும் பல படங்களில் தொடர்ந்து நடித்திட வாழ்த்துக்கள். நயன்தாராவுக்கு படத்தில் பெரிதாக நடிக்கவோ அல்லது அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமோ இல்லை; அவர் வரும் காட்சிகளும் பாடல்களும் படத்துடன் கொஞ்சமும் ஒட்டாமல் கதைக்கு தேவையும் படமால் வேகத்தடையாகவே இருந்தது. படம் முழுக்க மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும், மனதில் நின்றவர்கள் சார்லி, ரோகிணி, சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, மன்சூர் அலிகான் போன்ற ஒரு சிலர் மட்டுமே; 'மைம்' கோபி, ஆர்.ஜே.பாலாஜி, அருள்தாஸ் உள்ளிட்ட பலருக்கு பெரும்பாலான காட்சிகளில் வசனம் கூட இல்லை.
 
மொத்தத்தில், ஒரு மிக முக்கியமான பிரச்சினையை ஒரு நல்ல கருத்தை முன்னிறுத்தி பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் 'வேலைக்காரன்'. ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமாகி போய்விட்ட உபதேச நெடியிலும், தொய்வான இரண்டாம் பாதியிலும் வலுவில்லாத வில்லன் கதாபாத்திரத்திலும் உள்ள குறைகளை கலைந்திருந்தால், 'வேலைக்காரன்' இன்னும் அழுத்தமாக மனதில் நின்றிருப்பான்.     
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்