முகப்புவிமர்சனம்

"முதல் பாகத்தில் விட்டதை.. இரண்டாம் பாகத்தில் முடித்தாரா கமல்? " - `விஸ்வரூபம் 2' விமர்சனம்

  | Friday, August 10, 2018

Rating:

 • பிரிவுவகை:
  ஸ்பை த்ரில்லர்
 • நடிகர்கள்:
  கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர்
 • இயக்குனர்:
  கமல்ஹாசன்
 • தயாரிப்பாளர்:
  ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்
 • எழுதியவர்:
  கமல்ஹாசன்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

"ஒன்னு ஓமர் சாகணும்... இல்ல நான் சாகணும். இது ரெண்டுல ஒண்ணு நடக்காம இது முடியாது" என விட்ட இடத்திலிருந்து துவங்கி விஸாம் எதிரிகளை அழித்தானா எனச் சொல்கிறது 'விஸ்வரூபம் 2'

பரதக் கலைஞரான விஸ்வநாதன், அவரது மனைவி நிரூபமா அமெரிக்காவில் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் விஸ்வநாத், ஒரு முஸ்லீம் என்றும் அவரின் உண்மையான பெயர் விஸாம் அகமத் காஷ்மீரி என்றும் தெரிகிறது. அவரை உடனடியாக கொல்ல சொல்லி ஓமர் கட்டளையிடுகிறார். காரணம், ஓமர் கும்பலில் உளவாளியாக நுழைந்தார். ஆனால், அங்கிருந்து தப்பி அமெரிக்காவில் நிகழ இருக்கும் குண்டு வெடிப்பை தடுத்து நிறுத்துகிறார் விஸாம். இதோடு முடிந்தது விஸ்வரூபம் முதல் பாகம். அதை ஒட்டி உருவாகியிருக்கும் இரண்டாம் பாகம் சீக்குவல் படமும் கிடையாது, ப்ரீக்குவலும் கிடையாது. இராணுவ அதிகாரியான விஸாம் அல் குவைதாவில் ஏன் சேர்ந்தார், விஸாம் அமெரிக்கா வரும் முன்பு, அல் குவைதாவில் சேரும் முன்பு என்ன நடந்தது... அங்கு சேர்ந்த பின்பு என்ன நடந்தது... விஸாமின் அம்மா... லண்டனில் ஆபத்து... டெல்லியில் ஆபத்து... ஓமரை நோக்கிய துரத்தல்கள் எல்லாவற்றையும் நான் லீனியராகவும், ஓரளவு சுவாரஸ்யமாகவும் தொகுத்திருக்கிறார் இயக்குநர் கமல்.

நடிப்பு பற்றி சொல்ல என்ன இருக்கிறது. கமல் நன்றாக நடிக்கிறார் என்று சொல்வதே கூட ஒரு க்ளேஷே ஆகிவிட்டது. ஆனாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை. பல இடங்களில் கமல் தனது மிரட்டல் நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். தனது அம்மாவை சந்திக்க செல்லும் காட்சியில், ஓரமாக நின்று தன்னை அட்டையாளப்படுத்திக் கொள்ளாமல் நிற்கதியாகும் காட்சியாகட்டும், ஓமரின் குடும்பத்தைப் பற்றி சொல்லும் போது தவிக்கும் காட்சியாகட்டும், சண்டைக் காட்சியில் கூட முகத்தில் காட்டும் ஆவேசம் என `விஸாம்'மாக விஸ்வரூபம் காட்டுகிறார் கமல். பூஜா குமாரை எரிச்சலாக்குவது, பின்பு ஒரு சண்டைக்காட்சி என ஆண்ட்ரியாவுக்கு ஒரு இடம் இந்த பாகத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால், பூஜாவுக்கு முதல் பாகத்து அளவுக்கு வேலை இல்லை. கமலை எப்போதும் ஆச்சர்யமாகப் பார்ப்பது மட்டும் இந்த பாகத்திலும் தொடர்கிறது. ராகுல் போஸ், சேகர் கபூர், வஹீதா ரஹ்மான் என எல்லோருமே கதாபாத்திரத்தினைப் பூர்த்தியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

"எந்த மதத்தையும் சார்ந்து இருக்கறது பாவம் இல்ல பிரதர். ஆனா, தேச விரோதியாகறதுதான் தப்பு. இதை நீங்க ஒரு முஸ்லீமா இருந்தாக் கூட சொல்லியிருப்பேன்", "பயமா இருந்தா, பர்தா உள்ள ஒளிஞ்சுக்க வேண்டியதானே", "இப்பிடி ஒருத்தர ஒருத்தர் கொல்றத நிறுத்திட்டு நேர்மையா சமரசம் பேசினாலே சரியாகிடும்" எனப் பல வசனங்களில் கவனிக்க வைக்கும் வசனகர்த்தா கமல், "ஸ்லீப்பர் (Sleeper Agent) இல்லையா தூங்காம இருப்பேனா?", "இவர் வழிமொழியிறார், அவர் கழிமொழியிறார்" என சில இடங்களில் கடுப்பாக்கவும் செய்கிறார். முதல் பாகத்தில் இருந்த திருப்பங்களும், பரபரப்பும் இந்த பாகத்தில் கிடையாது. அது படத்தின் மிகப் பெரிய பலவீனம். கிட்டத்தட்ட எப்படியும் இதை எல்லாம் கமல் சரி செய்துவிடுவார் என்கிற மெத்தனம் வந்துவிடுவதால், ஒரு சோர்வு உண்டாகத்தான் செய்கிறது. முதல் பாகத்தின் கோடிட்ட இடங்களை நிரப்புவதில் தீவிரமாக படம் நகர்வதால், இந்த பாகத்தில் வரும் சண்டைகளோ, காட்சிகளோ பெரிய சுவாரஸ்யத்தைக் கொடுக்கவில்லை. குறிப்பாக படத்தின் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், க்ரீன் மேட் போன்றவற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பது பெரிய மைனஸ். ஜிப்ரான் இசையில் நானாகிய நதிமூலமே பாடல் அழகு. ஆனால் பின்னணி இசை அத்தனை அழுத்தமாக இல்லை.

மகேஷ் நாராயன், விஜய் ஷங்கர் படத்தொகுப்பு மிகவும் நேர்த்தியான ஒன்று. முதல் பாகத்தை கொஞ்சம் நினைவு படித்தியபடியே விட்டுப் போன கதைகளை சொல்லியிருந்த விதம், எந்த பெரிய திருப்பமும் இல்லாத கதையை ஓரளவு பரபப்பை ஏற்படுத்துவது எல்லாம் இவர்களில் வேலைதான். ஷானு வர்கீஸ், சாம்டாட் இருவரின் ஒளிப்பதிவு கச்சிதம். மிகவும் பாராட்ட வேண்டியது படத்தின் ஒப்பனைக் கலைஞரை. சண்டைகள், தெறிக்கும் ரத்தம், துண்டாகும் உடல் என அந்த ரணகளத்தை அப்படியே தத்ரூபமாகக் கொடுத்திருக்கிறார். "விஸ்வரூபத்தின் இரண்டு பாகமும் தனித் தனி கிடையாது. ரெண்டும் ஒன்றுதான்... நேரத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது" என கமல் கூறியிருந்தார். அதன்படி எடுத்துக் கொண்டால், விஸ்வரூபம் 2 பார்த்தே ஆகவேண்டும் என்பதைவிட, பார்த்தால் முதல் பாகத்தின் முழுமையை உணர முடியும்... அவ்வளவுதான். மற்றபடி தனிப் படமாக முழுமையான அனுபவம் தருமா என்றால் பெரிய கேள்விக்குறிதான் தோன்றுகிறது.

முதல் பாகம் அளவுக்கு எதிர்பார்த்துப் போனால் சின்ன ஏமாற்றம் இருக்கும்தான். ஆனால், ஒரு தரமான ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு லிமிட்டட் மீல்ஸ் இந்த 'விஸ்வரூபம் 2'

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்