முகப்புவிமர்சனம்

அடிச்சித் தூக்கிய "தல" - 'விஸ்வாசம்' திரைப்பட விமர்சனம் - Viswasam Movie Review

  | Friday, January 11, 2019

Rating:

அடிச்சித் தூக்கிய
 • பிரிவுவகை:
  ஃபேமிலி ட்ராமா
 • நடிகர்கள்:
  அஜித், நயன்தாரா, தம்பி ராமய்யா, ஜகபதிபாபு, ரோபோ ஷங்கர், யோகி பாபு
 • இயக்குனர்:
  சிவா
 • தயாரிப்பாளர்:
  சத்ய ஜோதி ஃபிளிம்ஸ்
 • எழுதியவர்:
  சிவா
 • பாடல்கள்:
  டி. இமான்

'வீரம்', 'வேதாளம்' ஆகிய  திரைப்படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான 'விவேகம்' தோல்வியையே தழுவியது.  இந்நிலையில், அந்த படத்தின் நஷ்டத்தை  ஈடுசெய்யும் வகையில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜனுக்காக அதே கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான்  'விஸ்வாசம்'. ஒன்றரை வருடத்திற்கு பின் வெளியாகும் அஜித் படமென்பதாலும், சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படத்திற்கு போட்டியாக ஒரே நாளில் வெளியாவதாலும்,  அஜித் ரசிகர்களிடையே இப்படம் எக்கச்சக்க எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. 

ஊருக்குள் அடிதடி பஞ்சாயத்து என எந்நேரமும் சுற்றி திரியும் தூக்குதுரை, தன் மனைவியையும் குழந்தையையும் யாரோ கொல்ல முயற்சிப்பதை அறிந்து அவர்கள் யார் என கண்டுபிடிப்பதும், தன் குடும்பத்தை அவர்களிடமிருந்து காப்பதுமே 'விஸ்வாசம்' படத்தின் ஒன்லைன் டெஃபனிஷன். 

கிட்டத்தட்ட, 'வீரம்' படத்தின் கதையேதான். அடிதடியே கதி என கிடக்கும் ஹீரோ, வன்முறையால் ஹீரோவைவிட்டு விலக நினைக்கும் ஹீரோயின், அறிவாளோடு ஓடிவரும் அடியாள் கும்பலிடமிருந்து தன் குடும்பத்தை ஹீரோ காப்பாற்றிக்கொண்டே இருப்பது என அதே செட்டப்தான். ஆனால், காட்சியமைப்புகளும் கூட அதே போல இருப்பதால் 'வீரம்' படத்தை ரொம்பவே நினைவுபடுத்துகிறது. 'வீரம்' படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கோவில் திருவிழா சண்டைக்காட்சியை போலவே ஒரு கார்னிவல் சண்டைக்காட்சி, அந்த படத்தின் இரண்டாம் பாதியில் வரும் தம்பி ராமையா பாத்திரத்தை போலவே வரும் விவேக் கேரக்டர் என எல்லாமே அப்படத்தின் நகலாகவே தெரிகிறது. இரண்டாம் பாதியில் வரும் மகள் சென்டிமெண்ட் மட்டுமே, கதையை கொஞ்சம் வேறுபடுத்தி காட்டுகிறது.

மேலும் படிக்க -சூப்பர் ஸ்டாரை காலி செய்வாரா அல்டிமேட் ஸ்டார்....?

ஃபிளாஷ்பேக்கின் தொடக்க காட்சிகளில், தூக்குதுரை கேரக்டரை ரொம்ப ரகளையான ஆளாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அந்த காட்சியமைப்புகள் எல்லாமே ரொம்ப பழைய டிரெண்டில் இருப்பதால், பெரிதாக எடுபடவில்லை. ஜெயிலையே வீடு போல மாற்றி ஊரே ரகளை செய்வதை போன்ற காட்சிகளை எல்லாம் பல கமர்ஷியல் திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. ‘நான் சாராயம் குடிக்காத ஊர்ல, எவனும் சாராயம் குடிக்கக்கூடாது’ போன்ற காட்சிகள் எல்லாம் ‘மாரி 2’ naughty டான் ரக மொக்கை. அதையெல்லாம் தாண்டி ஒரு சில காட்சிகளில் அஜித் ஸ்கோர் செய்ய முயற்சித்தாலும், மயக்க ஊசி போட்டு டாக்டரிடம் பேசுவதைப் போலான ஹைதர் காலத்து காட்சிகளே மீண்டும் மீண்டும் முதல் பாதியில் வருகிறது. முதல் பாதியின் காதல் காட்சிகளை ஓரளவுக்கு ரசிக்கும்படிசெய்வதில் பெரும்பங்கு, நயன்தாராவை சேரும்; படிக்காத கிராமத்து அடாவடிக்காரனை மும்பையை சேர்ந்த டாக்டர் பெண் காதலிக்கும் சினிமாத்தனமான ரொமான்ஸ் டிராக்தான் என்றாலும், படத்திற்கு பெரிய பிளஸ் ஆக இருக்கிறார் நயன்தாரா.

இடைவேளை வரை ஓரளவுக்கு சீராக நகரும் ‘விஸ்வாசம்’, இரண்டாம் பாதியில் ரொம்பவே தடுமாறுகிறது. கிளைமாக்ஸில் மெசேஜ் சொல்ல வேண்டுமென்பதற்காகவே, வில்லனின் ஃபிளாஷ்பேக்கை அபத்தமாக படைத்ததை போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. வில்லனின் பாத்திர படைப்பும் ரொம்ப டம்மியாக தெரிவதால், ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் எவ்வித பரபரப்பும் இல்லை. ‘வீரம்’, ‘வேதாளம்’ போன்ற வெற்றிப்படங்களில் திரைக்கதை சுமாராக இருந்தாலும், மாஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்யும் சிவா இப்படத்தில்  ரொம்பவே சறுக்கியிருக்கிறார். ஹீரோவும், வில்லனும் மோதிக்கொள்வதே இரண்டே காட்சிகளில்தான்; அதிலும் கூட, ‘என் கதையில நான் ஹீரோடா, நான் வில்லன்டா’ போன்ற சவடால் பஞ்ச் டயலாக்குகளிலேயே பெரும் நேரம் கழிகிறது. ரொம்பவே பில்டப் கொடுக்கப்பட்ட இடைவேளை சண்டைக்காட்சி மற்றும் டாய்லெட் சண்டைக்காட்சி கூட பெரிதாக ஈர்க்கவில்லை; சொல்லப்போனால், சிவா & அஜித் கூட்டணியில் வெளியான 4 படங்களிலேயே மோசமான சண்டைக்காட்சிகளைக் கொண்ட படம் ‘விஸ்வாசம்’ என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க - "விஸ்வாசத்தின்.. விஸ்வாசம்.."

இரண்டாம் பாதியில் மகளுடனான சென்டிமெண்ட் காட்சிகள் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், அஜித் – நயன்தாரா இடையிலான காட்சிகள் எதுவுமே ஒட்டவில்லை. ‘ஏன் லேட்டு’, ‘அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க’ டைப் காட்சிகளை ரிப்பீட் மோடில் பார்ப்பதை போல இருந்தது. அதிலும், அஜித்தின் மகளை கார் மோத வரும் காட்சி, கிளைமாக்ஸில் ஜெகபதி பாபு குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் மெகா சீரியல் உணர்வையே தந்தது. ஆக்ஷன் காட்சிகளை விட சினிமாத்தனமான எமோஷனல் காட்சிகளை ஓவர்டோஸ் ஆக வைத்ததும்தான், ‘விஸ்வாசம்’ படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

‘விவேகம்’ தோல்விக்கு பின்னர் நான்காவது முறையாக அஜித் வாய்ப்பளித்தும் கூட, திரைக்கதைக்கோ காட்சியமைப்புகளுக்கோ இயக்குனர் சிவா பெரிதாக மெனக்கெடவில்லை என தெரிகிறது. இவ்வளவு வீக்கான திரைக்கதையை கேட்டு, அஜித் எப்படி திருப்தியடைந்தார் என்பதும் ஆச்சர்யமே. டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான் என்றாலும், பின்னணி இசை நன்றாகவே இருந்தது. ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் லொகேஷன்களும், ஒளிப்பதிவும் சிறப்பு.

அஜித்தின் தீவிர ரசிகர்களையும், டார்கெட் ஆடியன்ஸ் ஆன பி, சி சென்டர் ரசிகர்களையும் மட்டும் திருப்தியடைய செய்யும் இந்த ‘விஸ்வாசம்’ சுமார் ரகம் தான். 

 

மேலும் படிக்க - 'பேட்ட' விமர்சனம்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்