முகப்புவிமர்சனம்

ஏமாலி திரைப்பட விமர்சனம் - Yemaali Movie Review

  | Saturday, February 03, 2018

Rating:

ஏமாலி திரைப்பட விமர்சனம் - Yemaali Movie Review
 • பிரிவுவகை:
  ரொமாண்டிக் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, ரோஷ்னி பிரகாஷ்
 • இயக்குனர்:
  வி.இசட்.துரை
 • தயாரிப்பாளர்:
  லதா புரொடக்ஷன்ஸ்
 • எழுதியவர்:
  வி.இசட்.துரை
 • பாடல்கள்:
  சாம்.டி.ராஜ்

10 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் சினிமாவில் இயக்குனர் V.Z.துரை என்றால் ஓர் மரியாதையும் நற்பெயரும் உண்டு. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘முகவரி’ என்கிற பிராமதமான படத்தில் தொடங்கி, அதன் பின் ‘காதல் சடுகுடு’, ‘தொட்டி ஜெயா’ ‘நேபாளி’ ‘6 மெழுகுவர்த்திகள்’ என சில வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஒவ்வொரு படமும் குறையில்லாத அற்புதமான படைப்புகளாக இல்லாவிடினும் கூட, நேர்மையான முயற்சிகளாகவோ ஓரளவுக்கு ரசிக்கும்படியான திரைப்படங்களாகவோ இருந்திருக்கின்றன. இவரது இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் ‘ஏமாலி’ திரைப்படம் புதுமுகங்கள் நடிப்பில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது எழுத்தில் உருவாகியுள்ளது.

மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரித்துவும் (அதுல்யா ரவி) இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு செல்ஃபியால் தொடங்கும் சண்டை, இருவரது காதல் பிரேக்-அப்பில் முடிகிறது. சோகம் தாங்காமல் தனது நண்பர் மற்றும் அண்ணனான அரவிந்த்திடம் (சமுத்திரக்கனி) புலம்பும் மாலி, அவளை மறக்கவும் முடியாமல் அவளுடன் பேசவும் முடியாமல் ரித்துவை கொலை செய்வது என விபரீத முடிவெடுக்கிறான். போலீஸில் மாட்டாமல், எப்படி அவளை கொல்வதென விரிவாக திட்டமிடுகிறான். அதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘ஏமாலி’ திரைப்படத்தின் கதை சுருக்கம்.

இந்த படத்தின் பேட்டிகளில் எல்லாம் இயக்குனர் V.Z.துரை, இது இன்றைய இளைஞர்களைப் பற்றியும் அவர்களது காதல் உறவுகளைப் பற்றியும் அதிலுள்ள சிக்கல்கள் பற்றியும் மிக விரிவாக தெளிவாக பேசும் திரைப்படம் என சொல்லியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால், கடந்த 10, 15 ஆண்டுகளில் வெளியான மிக மோசமான, பிற்போக்குத்தனமான, இழிவான சிந்தனைகளை கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘ஏமாலி’ என மிக உறுதியாக சொல்லலாம். ‘முகவரி’ போன்ற ஒரு திரைப்படத்தை எடுத்த இயக்குனர் தான் இந்த படத்தை எடுத்தாரா என்பதை நம்ப முடியவில்லை. தொடர்ச்சியாக சில படங்கள் தோல்வியடைந்ததால், ‘ஏதாவது ஒரு மலிவான தரத்திலான ஒரு படத்தை எடுத்து, காசு பார்க்க வேண்டியதுதான்’ என நினைத்துவிட்டாரா என தெரியவில்லை.

படம் முழுக்கவே செக்ஸ், செக்ஸ், செக்ஸ், செக்ஸ் என்பதே பிரதான விவாதமாக இருக்கிறது. அந்த விவாதங்களில் சொல்லப்பட்ட விஷயங்களும் ஏற்புடையதாக இல்லை. ஹீரோயினை கொலை செய்ய வேண்டாமென தான் எவ்வளவு சொல்லியும் கேட்காத ஹீரோவிடம் அவன் வழியிலேயே சென்று அவனை திருத்துகிறேன் என அவனுக்கு விரிவான திட்டம் போட்டு கொடுக்கிறார் சமுத்திரக்கனி. இது என்ன மாதிரியான லாஜிக்கோ தெரியவில்லை. அதே போல, படம் தொடங்கிய 10 நிமிடத்தில் ‘வீணாப் போன பெண்ணை நம்பி மோசம் போனேனே’ என வரும் பாடலில் இருந்து காட்சிக்கு காட்சிக்கு ஒவ்வொரு வசனத்திலும் பெண்களை குறை சொல்லிவிட்டு, கிளைமாக்ஸில் மட்டும் ‘இனி இதெல்லாம் வேண்டாமே’ என கருத்து சொல்வது எவ்வளவு பகட்டான சமூக அக்கறை!

படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தைத் தவிர எல்லோருமே, பெண்களை வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே பார்க்கிறார்கள். படத்தில் வரும் எல்லா ஆண்களுமே வக்கிர புத்திக்காரர்களாகவோ, எந்நேரமும் குடித்துத் திரிபவர்களாகவோ அல்லது சந்தேகப் பிராணிகளாகவோ மட்டுமே காட்டப்படுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் எல்லோருமே இப்படித்தான் என்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை வெற்றிகரமாக கட்டமைத்து விடுகிறார் இயக்குனர். அடுத்ததாக, இன்றைய இளம் காதலர்கள் எல்லோரும் இப்படித்தான், செக்ஸ்தான் அவர்களது உயரிய லட்சியம் ஒரே குறிக்கோள் என்பது போல் பொதுமைப்படுத்தப்படுகிறார்.

இது போதாதென்று, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு முறை யாராவது ஒருவர் ‘இந்த பொண்ணுங்கன்னாலே இப்படித்தான்’ என்பது போல பேசி செல்கின்றனர். காதல் தோல்வியில் தவிக்கும் தன் நண்பனுக்கு ‘ஏதாச்சும் ஒரு பொண்ணை மேட்டர் பண்ணி ஜாலியா இரு’ என யோசனை சொல்கிறார் அவரது நண்பர். ஒவ்வொரு பெண்ணாக சென்று அவர்கள் இருவரும் அதை கேட்கவும் செய்யும் ஒரு காணக்கிடைக்காத அற்புதமான காட்சி இருக்கிறது. அதில், ஒவ்வொரு பெண்ணையும் செக்ஸூக்காக அலைபவர்கள் போல சித்தரித்திருக்கிறார்கள். ஒரு பெண் ‘நான் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு affairல் இருப்பேன்’ என பெருமையாக சொல்கிறார். அதே போல, இன்னும் வேறு சில பெண்கள். இன்னொரு காட்சியில், தன்னை விசாரிக்க வந்த காவல் அதிகாரியிடமே ஆபாசமாக பேசி அவரை கவர முயல்கிறார் ஒரு பெண். பெண்களை இத்தனை கேவலமாக காட்டிய ஒரு படம் சமீபத்தில் வந்ததே இல்லை என ஆணித்தரமாக சொல்லலாம். இத்தோடு நிற்காமல் ‘பொம்பளைங்கன்னாலே ஏமாத்துவாங்க’ என்கிற கருத்தும் பல முறை சொல்லப்படுகிறது. ‘குடிகாரர்களுக்கு இலவசம்’ என தன் வண்டியில் எழுதி வைத்திருக்கும் ஒரு டாக்ஸி டிரைவர், “குடிகாரங்க எல்லாம் குழந்தைகள் போல சாதுவானவர்கள். படத்துல குடிக்கும் காட்சி வர்றப்போ ‘உடல்நலத்திற்கு தீங்கு’ன்னு போடுற மாதிரி, காதல் காட்சி வர்றப்போ ‘பொண்ணுங்க ஏமாத்திடுவாங்க, ஜாக்கிரதையா இருங்க’ன்னு போட்டு பசங்களை காப்பாத்தணும்” என ஒரு உயரிய சிந்தனையை உதிர்த்து செல்கிறார்.

படத்தில் ஒரு சிறிய வேடத்தில் போலீஸ் ஏட்டாக வரும் சிங்கம் புலி கூட ஆபாசமாகத்தான் பேசுகிறார். விசாரிக்க செல்லும் இடத்தில் எல்லாம் ‘உங்க நம்பர் குடுக்குறீங்களா?’ ‘உங்க square feet என்ன?’ ‘லவ் பைட்ன்னா என்ன?’ என பெண்களிடம் ஆபாசமாகவோ இரட்டை அர்த்த வசனத்திலோ தான் பேசுகிறார். ஆங்காங்கே, ஓரினச் சேர்க்கையாளர்களை ‘அவளா நீ?’ ‘worstu behavior’ என்றெல்லாம் கீழ்த்தரமான கிண்டல்கள் வேறு.

ஒட்டுமொத்த படத்தில், வித்தியாசமாகவோ அல்லது ரசிக்கும்படியோ இருப்பது ஒரு சில விசாரணைக் காட்சிகள் மட்டுமே. அவையும் கூட, ஸ்கேலில் அடித்து உண்மையை வரவழைக்கும் சிபிஐ ஆஃபிசர் போன்ற காட்சிகளால் நகைப்புக்குள்ளாகிறது. ஒரு சில நல்ல காட்சிகள் கூட, நடிக்கவே வராத ஹீரோவால் மோசமாகிப் போகிறது. படத்தின் ஆரம்பக்காட்சிகளில் வசனத்தைத் தாண்டி பின்னணி இசையில் கூட ‘தரமணி’ திரைப்படத்தின் நெடி ரொம்பவே அதிகம். படத்தின் மேக்கிங் மிகவும் மோசமாக இருந்தது; பல காட்சிகளில் குறும்படங்களே இதை விட பல மடங்கு நன்றாக இருக்கும் என்கிற ரீதியில் இருந்தது. என்னதான் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், இன்றைய டிரெண்டிற்கு ஏற்றாற்போல் ஒரு குறைந்தபட்ச தரத்தையாவது மேக்கிங்கில் தர வேண்டுமல்லவா.

ஹீரோ அடிக்கடி ‘என்னோட காதல் true love… தெய்வீக காதல்’ என்றெல்லாம் சொல்லி மெச்சிக்கொள்கிறார், அவரே ரொம்ப பெருமைப்பட்டு கொள்கிறார். அப்படி என்னதான் புனிதமான காதலோ என ஃபிளாஷ்பேக்கைப் பார்த்தால், கொடூரமாக இருக்கிறது. ஹீரோயினைப் பார்த்தவுடனேயே கிளர்ச்சியடையும் ஹீரோ, அவளது அனுமதியில்லாமல் வலுக்கட்டாயமாக அவளை உதட்டில் முத்தமிடுகிறான். அதற்கு, ஹீரோயின் அவனை செருப்பால் அடித்திருப்பாள், அவளுக்கு கோபம் வந்திருக்கும் என நீங்கள் நினைத்தால் தவறு. அவளுக்கு காதல் வருகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோயினும் அவரது தோழிகளும் தங்கள் கார் பழுதடைந்து சாலையில் நிற்கையில், அந்த வழியே செல்லும் ஹீரோ ‘நான் உங்களுக்கு உதவுகிறேன், ஆனால் அவள் என்னருகே உட்கார வேண்டும்’ என சொல்கிறார். இப்படியான தருணங்களில் தான் பூக்கிறது, அந்த உன்னத காதல். அது போக, அந்த காட்சியில் பழுதடைந்த காரை பற்றி பேசுகையில் ‘நான் அமுக்கும்போது, நீங்களும் அமுக்கணும்.. நான் விடும்போது, நீங்களும் விடணும்’ என கேட்க சகிக்காத இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு. இப்பேற்பட்ட ஒரு திரைப்படத்தில், ஜெயமோகன் அவர்களின் பங்குதான் என்னவென்று புரியவில்லை.
ஒரு புறம், படம் முழுக்க பிற்போக்குத்தனமான சிந்தனையாலும் கேவலமான வசனங்களாலும் நிரம்பிக்கிடக்க, மறுபுறம் ‘இது சரி, இது தவறு’ என சொல்லும் moral policingம் உண்டு. ஒரு சில காட்சிகளில் ‘ஒரு பொண்ணு ஏமாத்திட்டாலே, 90% பேருக்கு அவளைக் கொல்லத்தான் தோணும்’ என்பது போன்ற தேவையே இல்லாத பொதுமைப்படுத்தும் வசனங்கள் வேறு. பல காட்சிகளில் நேரடியாகவே, பெண்கள் எல்லோருமே slut, bitch என்கிற எண்ணத்தை முன்வைக்கிறார்கள். படத்தில் வரும் இரண்டு ஹீரோயினின் அங்கங்கள் மீதுதான் கேமரா கண்கள் எந்நேரமும் இருக்கிறது. இத்தனையும் செய்துவிட்டு, ‘பொம்பளைங்களை மதிச்சு நடந்தா மட்டுந்தான் நாம ஆம்பள’ ‘ஒரு பொண்ணுக்கு இருபது வயசு வரை பாராட்டே கிடைக்குறதில்ல, அட்வைஸ் மட்டுந்தான் கிடைக்குது..’ ‘பொம்பளைங்கன்னா என்ன வேணா பேசுவீங்களாடா?’ ‘ஆம்பளைத் தப்பு பண்ணா, சகிச்சுட்டு வாழணும்... பொம்பளை தப்பு பண்ணா, அசிங்கப்படுத்தணுமா?’ என ஊறுகாயைப் போல் ஆங்காங்கே சில போலியான பகட்டான அக்கறையுடனான வசனங்கள் வைத்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?

‘ஏமாலி’ போன்ற திரைப்படங்கள், இந்த சமூகத்திற்கும் சினிமாவிற்கும் இன்னும் அதிக அசிங்கங்களையே தேடித் தரும் ஆபத்து உள்ளது!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்