விளம்பரம்
முகப்புவிமர்சனம்

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம் - Yenda Thalaiyila Yenna Vekkala Movie Review

  | Saturday, February 24, 2018

Rating:

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம் - Yenda Thalaiyila Yenna Vekkala Movie Review
  • பிரிவுவகை:
    ஃபேண்டசி காமெடி ட்ராமா
  • நடிகர்கள்:
    அஸார், சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், யோகிபாபு
  • இயக்குனர்:
    விக்னேஷ் கார்த்திக்
  • தயாரிப்பாளர்:
    யோகி அண்டு பார்ட்னர்ஸ்
  • எழுதியவர்:
    விக்னேஷ் கார்த்திக்
  • பாடல்கள்:
    ஏ.ஆர்.ரெஹானா

பிரவீன் (அஸார்) வேலை இல்லாததால் வீட்டிலேயே விதவிதமாகக் கலாய்க்கப்படும், படு பிஸியாக வேலை தேடும் வி.ஐ.பி. வேலைக்காக இன்டர்வியூ செல்லும் இடத்தில் ரம்யாவைப் (சஞ்சிதா ஷெட்டி) பார்த்து காதல் கொள்கிறார். அதன் பிறகு பிஸியாக காதலிப்பதையே முழுநேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சஞ்சிதாவும் காதலிக்கத் துவங்குகிறார். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் போது, அஸாருக்கு ஒரு அமானுஷ்யப் பிரச்சனை வருகிறது. அதிலிருந்து தப்பிக்க நான்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. "இதை எல்லாம் செய்து முடித்தால் எல்லாம் இயல்பாகிவிடும், இல்லை என்றால் இறந்துவிடுவாய்" என்கிற நிலை. அது என்ன அமானுஷ்யப் பிரச்சனை, அது எதனால் வந்தது, அதிலிருந்து அஸார் தப்பித்தாரா என்பதை காமெடி கலந்து கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் அஸார் நடிப்பில் இரண்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். நடக்கும் விஷயங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவது, என்ன செய்வது என தெரியாமல் குழம்புவது, காமெடி என சில இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். ஆனால், சில இடங்களில் மட்டும் செயற்கைத்தனம் துருத்திக் கொண்டு தெரிவதும், நடிகர்களை இமிடேட் செய்தே பழகியது திரையிலும் வெளிப்படுவதும் மட்டும் மைனஸ். இருந்தாலும் வெல்கம் அஸார். நாயகி சஞ்சிதா ஷெட்டிக்கு நடிக்க பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. அஸார் நண்பராக வரும் சிங்கப்பூர் தீபன் சிரிக்க வைக்கிறார். இருந்தாலும் அவரை ஒரே காட்சியில் ஓவர் டேக் செய்துவிடுகிறார் யோகி பாபு. அவ்வளவு பச்சையாக இருக்கும் வசனங்களை மட்டும் தவிர்த்திருந்தால், அது இன்னும் ரசிக்கும் படியான காமெடி எப்பிசோடாகி இருந்திருக்கும்.

படம் மிக மெதுவாகத் துவங்கி மையப் பிரச்சனைக்கு வருவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. அதற்கு முன் காட்டும் காதல் காட்சிகள், காமெடிகள் என எதிலும் புதிதாக எதுவும் இல்லை என்பதால் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது. ஆனால், அஸார் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்ததும் வேகமெடுக்கிறது படம். கிளைமாக்ஸுக்கு முன் வரும் அந்தக் கடற்கரைக் காட்சியில் ட்விஸ்ட் மிக நன்றாகவே இருந்தது. ஏ.ஆர்.ரெஹானா இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை மூலம் திகில் தருகிறார். குறைந்த பட்ஜெட் என்பதை முடிந்த வரை சமாளித்து, படத்தின் உணர்வு கெடாத வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வம்சிதரன் முகுந்தன். கதைக்குத் தேவையான
சில சி.ஜி காட்சிகளுக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

முழுக்க காமெடி ட்ரீட்மென்டில் ஒரு ஃபேன்டசி படம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஆனால், அதில் கால் கிணறுதான் தாண்டியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக அஸார் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஓகே. ஆனால், திடீரென வரும் ராமர் பாட்டுப்பாடி அதுதான் அவரது டாஸ்க் என சொல்வது, தேவை இல்லாமல் ஹீரோயின் மேல் சந்தேகத்தைக் கிளப்ப வைக்கும் போன் கால்ஸ், ஊட்டிவிட்டால் காதல் வரும் மினிஸ்டர் பெண் என கொஞ்சம் லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியாத சில பிரச்சனைகள் படத்தில் உண்டு.

திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்து விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால், முக்கியமான ஃபேண்டசி படமாகக் கூட மாறியிருக்கும். ஆனால், ஜாலியாக ஒரு படம் பார்த்துவிட்டு வரலாம் என விரும்புபவர்களுக்கு நல்ல பொழுதுபோக்குதான் இந்தப் படம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்