தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் போராட்டம் நடந்தது
தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது
தென்னிந்திய திரையுலகின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து காலை 9 மணி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன அறவழி போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா, விஷால், தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்பட திரையுலகின் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
சினிமா சாராத இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அஜித், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
எஸ்.ஜே.சூர்யா, செந்தில், ரேகா, ரமேஷ் கண்ணா, சி.ஆர்.சரஸ்வதி, சவுந்தர்ராஜா, விவேக், மன்சூர் அலிகான், வையாபுரி, ஆர்த்தி, கணேஷ், சாய் தன்ஷிகா, சக்தி, சத்யராஜ், சிபிராஜ், பிரஷாந்த், சிவக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், பார்த்திபன், பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக பல கோரிக்கைகளுக்காக புதுப்பட வெளியீடு, படப்பிடிப்பு போன்றவை ரத்து செய்திருக்கும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள்.
நிகழ்வின் இறுதியில் சத்யராஜ் "மூடுங்கள் மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்" என கோஷம் இட்டு தமிழர்களின் உணர்வை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம். எனத் தனது கருத்தை பதிவு செய்தார்.
அதன் பின் பேசிய ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் போராட்டாத்தால், தொழிலாளர்கள் எங்களுக்கு ஒரு நாளைக்கு 2கோடி வரை நஷ்டம். ஆனால், அந்த நஷ்டம் பரவாயில்லை தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் நினைக்கிறோம்.
அதே நேரத்தில் நாங்கள் கேட்காமலே விஷால் சார்பில் சில பண உதவிகள் எங்களுக்கு வழங்கப்பட்டது. கூடவே எஸ்.ஆர்.பிரபுவும் நன்கொடையாக பத்து லட்சம் வழங்கினார்.
ஒரு சரியான தலைமையும், இணக்கம் ஏற்பட வேண்டும் என எடுக்கப்பட்ட முயற்சியாலேயே இது சாத்தியமானது. அதே போல் கர்நாடக மக்களுக்கு தமிழகமக்கள் எதிரியில்லை, தமிழக மக்களுக்கு கர்நாடக மக்கள் எதிரியில்லை. இந்த இரண்டு மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசுதான் மோசமானது.
இவர்களை இணைக்கின்ற அரசு எப்போது வருமோ, அப்போதுதான் இந்தப் பிரச்சனைக்கு நல்ல முடிவு பிறக்கும் என நம்புகிறேன் எனக் கூறினார். மேலும் தங்களது போராட்ட கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் முன் வைத்தனர்.
தனது பெரியம்மா மறைவின் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தமுடன் ட்வீட்டை பகிர்ந்திருந்தார் நடிகர் சூரி.
மேலும் இதே பிரச்சனை தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எவ்வளவு முக்கியம் என இயக்குநர் சற்குணம் வெளியிட்ட வீடியோவும் பரவலாக பகிரப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனியாக கருத்து தெரிவித்தார் நடிகர் சிம்பு.
அந்த சந்திப்பில், இது மௌனமாக போராட வேண்டிய தருணம் அல்ல, இதுதான் பேச வேண்டியதற்கான நேரம்.
அதனால்தான் நான் எல்லோரோடும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கு கர்நாடத்தைச் சார்ந்த தாய்மார்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும். நீங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் நாங்கள் புரிந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
ஐபிஎல் செல்லும் ரசிகர்கள் கருப்பு சட்டை அணிந்து சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் என்றும் கூறினார்.
தோனி தமிழக மக்களுக்கு தனது ஆதரவை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் சிம்பு.
தமிழ் சினிமாவின் இந்த ஆதரவுக்கு பலத்த ஆதரவும், சில எதிர்ப்புகளும் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.