Advertisement
HomeMovie Reviews

துல்கர் மற்றும் கௌதமின் காதல் கலந்த Hi-Tech கதையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்

குறிப்பாக இடைவெளியில் யார் அந்த 'Black Sheep' என்று தெரியவரும்போது ஒரு நிமிடம் நம் புருவங்கள் உயர்வது நிச்சம்.

  | February 28, 2020 16:35 IST

Rating:

துல்கர் மற்றும் கௌதமின் காதல் கலந்த Hi-Tech கதையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்
 • Genre:
  Romantic Thriller
 • Cast:
  துல்கர் சல்மான், கௌதம் வாசுதேவ் மேனன், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
 • Director:
  Desingh Periyasamy
 • Producer:
  Viacom 18 Studios
 • Writer:
  Desingh Periyasamy
 • Music:
  Masala Coffee, Harshavardhan Rameshwar
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்க புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் மற்றும் சின்னத்திரை புகழ் ரக்ஷன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்".. படத்தை பற்றிய விமர்சனம் தொடங்கும் முன், அந்த கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குநர் GVMக்கு கொடுத்த BGMக்கு இயக்குனருக்கும், இசையமைப்பாளர்கள் மசாலா காபி மற்றும் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்க்கு ஒரு பலத்த கைத்தட்டல். நிச்சயம் இந்த கிளைமாக்ஸ் காட்சியை கௌதம் வாசுதேவ் மேனன் பல வருடங்களுக்கு மறக்க மாட்டார் என்பது உறுதி.  

மதியம் 12 மணிக்கு அலாரம் வச்சு எந்திருக்கும் சுறுசுறுப்பான ஹீரோவாக அசத்தலாக அறிமுகமாகிறார் துல்கர் சல்மான். (இது துல்கரின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது) அடுத்ததாக தனக்கே உரித்தான தொகுப்பாளர் பாணியில் அறிமுகமாகிறார் சின்னத்திரை புகழ் ரக்ஷன். 12 மணிக்கு அலாரம் வைத்து எந்திரிச்சு ஹீரோவும் அவர் நண்பரும் எழுந்தபின் செய்யும் வேலைக்கு இசையமைப்பாளர்கள் தந்த "சிரிக்கலாம், பறக்கலாம் பாடலே சாட்சி. பாடல் முடிந்ததும் சூடு பிடிக்கிறது கதை, காரணம் அடுத்த அறிமுகம் அப்படி, அவருக்கே உரித்தான அந்த ரம்யமான குரலுடன் கம்பிரமாக போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அறிமுக காட்சியில் வில்லன்களிடம் அவர் பேசும் வசனம் மெய்மறந்து நம்மை விசில் அடிக்கவைக்கிறது என்றால் அது மிகையல்ல, இந்த இடத்தில் இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

படத்தில் வெகு சில கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர்  என்பதால், விரைவாகவும் சீராகவும் நகர்கிறது கதைக்களம். அடுத்து அறிமுகம் நம்ம கதாநாயகி தான், அலட்டிக்கொள்ளாமல் எளிமையான பெண்ணாக அதற்குரிய அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரிது வர்மா. வழக்கப்படி திரைக்கதையில் அடுத்தது கண்டதும் காதல், துல்கரை போல அழகான கதாநாயகனை எந்த அழகான நாயகி தான் காதலிக்காமல் இருப்பார்கள். நேரத்தை வீணடிக்காமல் இருவரும் காதலிக்க, தனி மரமாய் நிற்கும் நாயகனின் நண்பருக்கும் காதலி கிடைக்க அனிரூத் குரலில் ஒலிக்கும் "ஏலோ புல்லேலோ" என்ற பாடல் நம்மையும் முணுமுணுக்க வைக்கின்றது. கார், சொகுசு பங்களா என்று தினமும் விதவிதமாக சுற்றி திரியும் ஹீரோவுக்கும் அவர் நண்பருக்கும் எப்படி இவ்வளவு காசு வந்தது...? படத்தில் யார் தான் வில்லன்..? அப்போ போலீஸ் அதிகாரி கௌதம் எதுக்கு இருக்காரு..? என்ற பல கேள்விகளுக்கு விடை தருகின்றது முதல் பாதி. குறிப்பாக இடைவெளியில் யார் அந்த 'Black Sheep' என்று தெரியவரும்போது, ஒரு நிமிடம் நம் புருவங்கள் உயர்வது நிச்சம். மீண்டும் இயக்குநரும், கதாசிரியருமான தேசிங்கு பெரியசாமிக்கு ஒரு 100 லைக் போடலாம்.  

இயல்பான கதைக்களம் என்றபோதும் அந்த கதையை கையாண்ட விதம் முற்றிலும் புதிது, படு சுறுசுறுப்பாக முதல் பாதி முடிய இரண்டாம் பாதியில் ஹீரோவும் அவர் நண்பரும் சிலரால் ஏமாற்றப்பட அவர்கள் முன்பு வாழ்ந்த சொகுசு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. சில லாஜிக் இல்லாத விஷயங்களுடன் சற்று பொறுமையாகவே நகர்கிறது கதைக்களம் என்றாலும் வெகு சில கதாபாத்திரங்கள் கொண்டு கதைக்களம் நகர்வதால் கதையின் ஓட்டத்தில் தொய்வில்லை. படத்தில் வரும் அந்த கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க ஹீரோ, அவர் நண்பர் மற்றும் போலீஸ் அதிகாரி பிரதாப் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி விரைகின்றனர், ஆனால் அந்த நேரத்தில் கதையில் வருகிறது ஒரு ட்விஸ்ட், அந்த ட்விஸ்ட் என்ன என்பதே Hi-Techஆன மீதிக்கதை. ஏமாற்றப்பட்ட கதையின் நாயகனும் அவர் நண்பரும் என்ன ஆனார்கள், நாயகி என்ன ஆனார், டெல்லி வந்த நம்ம கௌதம் வாசுதேவ் மேனன் என்ன ஆனார்..? என்று பல கேள்விகளுக்கு விடையாய் அமைகின்றது இரண்டாம் பாதி. 

கதையின் நீளம் 2.42 மணி நேரம் என்றபோது, தொய்வில்லாமல் கதையின்கலம் பயணிப்பது ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சி. ஒரு சண்டைக்காட்சி கூட இல்லை, ஆனால் (Hi-Tech) ஹீரோயிசம் காட்டும் துல்கர் சல்மான் நடிப்பு இயல்பாய் வெளிப்படுத்துவது சிறப்பு. வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கும் ரக்ஷன், கதையின் இரண்டாம் நாயகன் என்றால் அது மிகையல்ல. அட்டகாசமக அதேசமயம் அமைதியாக நடித்திருக்கிறார் நடிகை ரிது வர்மா. அடுத்து யாரு நம்ம போலீஸ் சார் தான், படம் முழுக்க நிறைந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன் ஆரம்பம் முதல் இறுதி வரை இயல்பான நடிப்பு வெளிப்படுத்தினார், இடையில் கதைக்களம் சற்று சறுக்கினாலும் அதை உயர்த்திப்பிடிக்கிறார் GVM. கடைசியில் அந்த கிளைமாக்ஸ் கட்சியில் GVM 'காதல் வயப்படுவது' அல்டிமேட்.. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் குழுவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..'திருடா திருடா படத்தின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பாடலை போல அழகான படம்...' இறுதியில் துல்கர் மற்றும் கௌதமின் காதல் கலந்த Hi-Tech கதையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..
Advertisement
Advertisement
Listen to the latest songs, only on JioSaavn.com