முகப்புபாலிவுட்

பத்மாவதி - படைப்புலகை நசுக்கும் அருவருப்பான அரசியல்

  | November 17, 2017 12:35 IST
Padmavati  Controversy

துனுக்குகள்

  • ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு தடைவிதிப்பது பெரும் அவமானம்
  • வரலாற்றுப் பதிவுகளுக்கு தடைவிதிப்பது வரலாற்றினை மறைப்பதற்கு சமம்
  • கலைப் படைப்பில் உண்மைத்தன்மையை அளிக்கும் செயலில் இந்திய செயல்படுகின்றது
பொதுவாக உலக சினிமா அரங்கில், ஒரு படைப்பாளி தன் படத்தை வடிவமைக்க தொடங்கும் போது படத்தின் பட்ஜெட்டை பொறுத்து எதையெல்லாம் எடுக்க முடியும் எதை எடுக்க முடியாது என்று முடிவெடுத்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்வார்.

ஆனால் இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் பார்த்து பார்த்து வடிவமைக்கவேண்டியதாக இருக்கிறது.
 
deepika padukone padmavati shahid kapoor

எப்போது எதை பிடித்துக்கொண்டு யார் எந்த பிரச்சினையை கிளப்புவார் என படைப்பாளிகள் தினம் தினம் பயந்துகொண்டே முன்னேற்பாடுகள் செய்யும் கேவலமான நிலையை ஏற்படுத்துவதில் அரபு நாடுகளுக்கே சவால் விடும் வகையில் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இருப்பது மிகப்பெரிய அவமானம்.

பத்மாவதி அரசியை தழுவி எடுக்கப்பட்ட படத்தை தடை செய்யக்கோரி சாதிய அமைப்புகள் போராட்டம் நடத்துவது காலம் காலமாக வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு ஏற்படும் பிரச்சனை, ஆனால் ஒரு மாநில அரசே இப்படத்தை தடை செய்வதும், வெளியீட்டிற்கு முன்னரே தாங்கள் காணவேண்டும் எனக்கூறுவதும், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பின் நீக்க வேண்டுமென கூறுவதும், பேச்சுரியமையையே குழி தோண்டி புதைத்து மூடும் செயல். சென்சார் போர்டின் இருப்பையும் கேலிக்குள்ளாகும் செயல்.
நியாயமாக படைப்பாளிகளை நசுக்கும் இந்த சாதிய அமைப்புகளின் கொட்டத்தை அடக்கி திரைப்படத்தை சுமூகமாக வெளியிட முனைவதே அரசாங்கம் செய்ய வேண்டிய அறம், ஏற்கனவே குண்டர்கள் மிரட்டல்களாலும், பணத்தை எதிர்பார்த்து படத்தை எதிர்க்கும் சில்லறை கட்சி தலைவர்களாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் படக்குழுவினரை அரசும் சேர்ந்து நோகடிப்பதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடிய செயல்.

அரசு ஒவ்வொரு படத்தை பார்த்து வெளியிட வேண்டும் என நினைத்தால் சென்சார் போர்ட் எதற்கு, அதை முழுவதுமாக கலைத்து விடலாமே?
சென்சார் போர்டுக்கே காட்சிகளை வெட்ட உரிமையில்லை, அதற்கு ஏற்ற சான்றிதழ் வழங்குவது மட்டுமே அதன் வேலை.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட "தி இன்டெர்வியூ" படத்தில் தங்கள் நாட்டின் அதிபர் கிம் ஜாங் கை பகடி செய்ததாக கூறி வடகொரிய நாட்டு ஹேக்கர்கள் சோனி குழுமத்தின் வலைதளத்தை முடக்கினர், படத்தை வெளியிட்டால் அவர்களின் வெளியிடப்பாடாத புதிய படங்களை பொதுவில் பரப்புவோம் என மிரட்டினர்,
ஒட்டுமொத்த அமெரிக்காவே பொங்கி எழுந்தது, அரசாங்கம் தானாக முன்வந்து பகிரங்கமாக தன் முழு ஆதரவையும் படக்குழுவினருக்கு அளித்தது, அது தானே தன் நாட்டு பிரஜையின் உரிமையை காக்கும் அரசின் முன்னுதாரணம்.

மெர்சல் படத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் இந்தியா' வசனத்தை வெட்டக்கோரி எத்தனை அலப்பறைகள், ஒரு குடிமகன் அரசின் திட்டத்தை பற்றி என்ன நினைக்கிறான் என தெரிந்து கொள்வதில் அல்லவா அரசு கவனம் காட்ட வேண்டும், அதற்கு முற்றிலும் மாறாக நீ பேசவே கூடாது என்பது எந்த நிலையான மனநிலை, நீங்கள் நினைப்பதையே அனைவரும் பேசினால் பிறகு அவரவர்களுக்கு என எதற்கு தனித்தனியாக வாய், சிந்திக்க மூளை.
 
deepika padukone padmavati shahid kapoor

பிறர் பேசுவதில் நமக்கு உடன்பாடு ஏற்படாமல் இருக்கலாம், அதை எதிர்த்தும் பேசலாம், ஆனால் எனக்கு பிடிக்காததை மற்றொருவன் பேசவே கூடாது என எதிர்பார்ப்பது பச்சை அயோக்கியத்தனமன்றி வேறில்லை. அதன் பெயர் பாசிசம், ஹிட்லரிசம்.

எதற்கெடுத்தாலும் மேற்கத்திய நாடுகளை உதாரணம் தேடும் அரசியல்வாதிகள் இதிலும் மேற்கு நோக்கி பார்த்தால் உண்மை தெரியும்.

ஏசு கிறிஸ்து வை பின்பற்றும் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாழும் நாடுகளில் டான் பிரவுன் போன்ற ஒருவர், கிறிஸ்தவத்தை அடிப்படையாக கொண்டு பல வித சர்ச்சைகளை ஏற்படுத்தும், கிறிஸ்தவத்தின் அடிப்படையையே அசைத்து பார்க்கும் நாவல்கள் எழுதி கோடிக்கணக்கில் விற்கிறார், அதை அடிப்படையாகக்கொண்டு படங்கள் வெளியாகின்றன அவைகளும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன.
எதிர்ப்பே வருவதில்லையா ?

அங்கும் எதிர்ப்பு வருகிறது, ஆனால் எவரும் படத்தை வெளியிட்டால் நாடே சுடுகாடாகும் என மிரட்டல் விடுப்பதில்லை, அப்படி மிரட்டல் விடுப்பவரை அரசும் விட்டு வைப்பதில்லை, அவர்கள் வாக்கு கிடைக்காது என பம்முவதில்லை.

எதிர்போர் ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டிருக்க ஆதரிப்போர் மறுபுறம் ஆதரிக்கின்றனர், முக்கியமாக அரசாங்கம் சில்லறைகளுடன் சேர்ந்து படக்குழுவினரை நெருக்குவதில்லை, இந்த சமநிலை தானே ஜனநாயகம், ஒருவரின் எதிர்ப்பால் இன்னொருவரின் பேச்சுரிமையை நசுக்காமல் இருக்கும் நிலை.
பன்முகத்தன்மை தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் இப்படியல்லவா பேணப்பட வேண்டும்.

எதிர்ப்போரின் கூச்சல்களை கொஞ்சம் கேட்டால் அவர்கள் மனநிலை சரியாகத்தான் இருக்கிறதா என யோசிக்கும் அளவிற்கு அவர்கள் கூறும் காரணங்கள் இருக்கின்றன.

பத்மாவதி அவரின் இடை தெரியும் படி சேலை அணிபவரல்ல, அவரின் இடையை காட்டி எங்கள் மனதை புண் படுத்துகிறீர்கள் என்கிறார்கள்.
 
deepika padukone padmavati shahid kapoor

பண்டைய இந்தியாவில் பல பெண்களுக்கு ரவிக்கை அணியும் பழக்கமே கிடையாது, வெறும் சேலை தான். பிற்காலத்தில் தான் ரவிக்கை அணியும் பழக்கமே மக்களிடம் வந்தது. கற்பனையாக எடுக்கப்படும் கதையாதலால் பார்க்க லட்சணமாக இருக்க வேண்டுமென அழகியலாக காட்டப்படுவதை கூட புரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் கூட்டத்திற்கு மத்தியில் தான் நாம் வாழ்கிறோமா...

இடை தெரிவது ஆபாசம் என்றால் நாம் கோவில்களுக்கே செல்ல முடியாதே, கோனார்க், கஜுராஹோ போன்ற கோவில்களில் காமத்தை சிற்பமாக வடித்து அதை கலையாக கொண்டாடிய நாகரிகம் இந்தியவினுடயது.

அரசியல்வாதிகளுக்கு சினிமாவை தடை செய்வதென்றால் அல்வா தின்பது போல இனிக்கிறது, எங்கெல்லாம் படங்களுக்கு தடை கோரப்படுகிறதோ அங்கெல்லாம் அரசின் கையாலாகாத தனத்தால் மக்கள் தினம் தினம் அல்லல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் அதை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் படத்தை பார்த்ததும் அறச்சீற்றம் கொள்வதெல்லாம் இதை வைத்து முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவும் அதை வைத்து குறிப்பிட்ட சாதிய , சமூக வாக்குகளை கவர்வதற்கும் மட்டும் தான்.

அதனால் தான் பணம் மாற்ற வரிசையில் நின்று உயிர் விட்டவர்கள் பற்றியும், கேவலம் அடிப்படையான பிராண வாயு கூட இல்லாமல் குழந்தைகள் இறந்த போதும் மௌனம் காத்த வாய்கள் இப்போது மட்டும் சலங்கை கட்டி குதிக்கின்றன...

இவர்களுக்கு உங்கள் தொன்மத்தின் மீதெல்லாம் அக்கறை இல்லை, நம்மை பெருமை படுத்தியே ஒருவன் படம் எடுத்தாலும், அதை குறை கூறி அவனை அச்சமூகத்தின் எதிரியாக சித்தரித்து அவனை எதிர்த்து நசுக்கி, தான் மட்டுமே அச்சமூகத்தின் தலைவன் என பிரகடனம் செய்து அந்த சமூகத்தின் வாக்குகளை கவரும் கீழ்த்தரமான அரசியலே இவையெல்லாம்.

ஏனென்றால் படம் எடுக்கும் அளவிற்கு இவர்களுக்கு திறமை இருப்பதில்லை, அதை தடுத்து நிறுத்தி அதன் மூலம் புகழ் ஒளியை தேடும் அற்ப விட்டில் பூச்சிகள் மட்டுமே இவர்கள் ...

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்