முகப்புஹாலிவுட்

துயரங்களை சுமந்து உலகையே சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன் ! சார்லி சாப்லின்

  | April 16, 2019 16:22 IST
Charlie Chaplin

துனுக்குகள்

 • ஏப்ரல் 1889 ஆண்டு 16ஆம் நாள் இவர் பிறந்தார்
 • உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கியவர்
 • சிறந்த கதை,திரைக்கதை, வசனம் எழுதும் ஆற்றல் மிக்கவராக இருந்தார்
ஒரு தத்துவம்,  மனித வாழ்கையின் அனுபவங்களில் இருந்தே தோன்றுகிறது. அப்படி ஒட்டு மொத்த உலக மக்களையும் சிரிக்க வைத்த ஆகச்சிறந்த தத்துவம் சார்லி சாப்லின்.  இன்று அவரது அவரது பிறந்த நாள், 
 
'மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது' என்ற இந்த வரிகளே சாப்ளினின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கு சான்றாக அமைந்தது….
 
lk7aug3g

1889 ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு ஆண்டுகளிலேயே தாயும் தந்தையும் பிரிந்து விட பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, சலூன்,கண்ணாடித் தொழிற்சாலை,மருத்துவமனை என எங்கெங்கோ வேலை பார்த்தவர், சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால், தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் அவரை சூழ்ந்துக்கொண்டது துயரம்.

1910 ல் நாடகக் குழுவினருடன் அமெரிக்கா போனவருக்கு குறும்படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை கதாபாத்திரமான ‘டிராம்ப்' (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘திகிட்', படத்தில் தொடங்கிய வரேவற்பு, ‘தி கிரேட் டிக்டேட்டர்' வரை நீடித்தது.
 
or9ut6io

ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்க்கையில் அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம். 1918-ல் நடந்தமுதல் திருமணம், இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்குப்பின் நடந்த இரண்டு திருமணங்களும்கூட சாப்ளினுக்குச் சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1942-ல் நான்காவது மனைவியாக ஓனெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன.
 
1945-ம் ஆண்டு. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.

அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.
1972 ஆம் ஆண்டு காலச் சக்கரம் சுழல,அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்' விருது பெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து கிளம்பினார் சாப்ளின்.
 
விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று,"வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?" எனக் கேட்டார்கள்.
 
4se4k6k

சாப்ளின் சிரித்தார்... "இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட என்று அவர் பேசியது இன்னும் வலுவாக ஒளித்துக்கொண்டிருக்கிறது.
 
சமரசம் இல்லாத கம்யூனிச தத்துவத்தை உள்வாங்கிக்கொண்ட கலைஞனாக அவரது பயணம் இருந்தது. அவருடைய படங்கள் அனைத்தும் பாட்டாளி வர்க்க மக்களின் வாழ்வியலை படமிட்டுக்காட்டியது. சர்வதிகாரத்திற்கும், பாசிசத்திற்கும் எதிராக அவர் எழுப்பிய அலை வரலாற்றில் மிகத்தீவிரமானது. அவருடைய படைப்புகளை சற்று பின்னோக்கி திந்தித்து பார்த்தால் வாழ்வியலின் பெரும் பகுதியை நாம் கண்டுவிடலாம்…

1914 கீஸ்டோன் சினிமாக் கம்பெனியில் தயாரித்த ‘தி நியூ ஜானிடர்‘: (துப்புரவு வேலையாள்): இந்தப் படத்தில் அந்தத் தொழிலாளி ஏதோ தவறு செய்துவிட மேனேபஜர் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறேன் என்று கத்துகிறான். ‘ஐயா எனக்குப் பெரிய குடும்பம். சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு. வேலையவிட்டு நிறுத்திடாதீங்கய்யா என்று அவன் கெச்சுவான். இப்படிச் சிறு சிறு சம்பவங்களாக அவனது வாழ்க்கை.
 
1917 ஃபர்ஸ்ட் நேசனல் கம்பெனியில் தயாரித்த ‘ஒரு நாயின் வாழ்க்கை‘: ஏழையின் வாழ்க்கையை நாயின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு நகைச்சுவைக் காட்சிகள் வரும், எச்சில் சோறு தேடப்போய் நாய்ச்சண்டையில் ஒரு நாயைக் காப்பாற்றுகிறான் நாடோடி; பிறகு அந்த நாய் நட்பாகிறது. இப்படியாக அவனது ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை.
 
1921 – தி கிட்: குப்பைத் தொட்டியருகே ஒரு குழந்தை அனாதையாக வீசப்படுகிறது. நாடோடி எடுத்து வளர்க்கிறான். அதை வளர்க்க அவன் படும்பாடு. வளர்ந்து சிறுவனானதும் அவன் பெரிய பங்களாக்களின் கண்ணாடிக் கதவுகளை உடைப்பான். நாடோடி சென்று செப்பம் செய்து சம்பாதிப்பான். இருவரும் நடுவே எதிரியாக வரும் போலீசைச் சமாளிப்பார்கள்.
 
nkeliqv8

தி சர்க்கஸ்‘ : சர்க்கஸ் கோமாளியின் அவல வாழ்க்கை. அவர் மிக உயர்வாக மதித்த மார்செலின் என்ற அற்புதமான மேடை நகைச்சுவை நடிகர் பிழைப்புக்காக பல கோமாளிகளோடு ஒரு கோமாளியாக சர்க்கஸ் கூடாரத்தில் வாழ்வதை நேரில் பார்த்தார். அவரது நசிந்த வாழ்க்கையே இந்த திரைப்படம் என்று சொல்லலாம். ஒரு கலைஞன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறான் என்பதை சர்க்கஸ் கூடாரத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகக் காட்டுகிறார். (ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கரி'ன் கடைசிப் பகுதி சாப்லினை மோசமாகக் காப்பியடித்த படமாகும்.)
 
'தி ஐடில் கிளாஸ்‘ (சோம்பேறி வர்க்கம்): நாடோடி கோல்ஃப் ஆட்டம் ஆடுகிறான். அங்கு நடக்கும் விருந்தில் அழகிய பெண் ஒருத்தியைச் சந்தித்துப் பழகுகிறான்; அதற்காகவே கனவான்களிடம் அடி உதை வாங்கி வெளியே ஓடுகிறான்; மறுபடி பயணம் தொடருகிறான். பணக்காரச் சோம்பேறி வர்க்கத்தை, அந்த கேவலமான வாழ்க்கையை அலசுகிறார் சாப்லின்.

தி சிடி லைட்ஸ்‘ (நகர விளக்குகள்) 1931: இதன் கரு உருவானதே விசித்திரமான கதை. பணக்காரனின் கிளப்பில் இரண்டுபேர் ‘மனித உணர்வுகள் நிலையில்லாதது. அதாவது மாறிக்கொண்டே இருக்கும்' என்று வாதிட்டார்கள். ஒருநாள் சாதாதாரண ஏழையைக் கொண்டுபோய் தங்கள் பங்களாவில் மது, மாது, பாட்டு நடனம் எல்லாம் கொடுத்தார்கள்; அவன் மயங்கி விழுந்ததும் மறுபடி அவன் வாழ்ந்த நடைபாதையில் கொண்டு போட்டு விடுகிறார்கள். தூங்கி எழுந்த அவன் முந்தின இரவு நடந்தது கனவா, நனவா என்று புரியாமல் விழிக்கிறான். இந்த பணக்காரர்களின் குரூரமான வக்கிரப் புத்தியைச் சந்தித்த சாப்லின் இதிலிருந்து தனக்கான கருவை உருவாக்கினார். கிளப்பில் விவாதித்த சோம்பேறியின் பிரதிநிதியாக ஒரு பணக்காரனைக் குடிகாரனாக்கி, அவன் போதையில் இருக்கும் போது நாடோடியை இழுத்துக் கொண்டு போய் நண்பன் என்று சீராட்டுவான். மறுநாள் காலை போதை தெளிந்ததும் ‘யார்டா நீ' என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். இந்த அதிர்ச்சியிலிருந்து நாடோடி மீள்வதற்க்குள்ளாக மறுபடி வேறொரு நாள் அக்குடிகாரன் அவனைப் பார்த்து நட்பு கொண்டாடுவான்.
 
hvcj00uo

சார்லி-சாப்ளின் ஏழ்மை, வறுமை பற்றி சாப்லின் ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வதற்கு பல காரணங்கள் தேடினார்கள். சாமர்செட்மாம் என்ற அமெரிக்க எழுத்தாளர் ”அவரது பழைய நாட்களை விரும்புகிறார், இளவயதில் போராடிய நாட்களின் சுதந்திரத்தை விரும்புகிறார், அதனால் தான் அவரது நகைச்சுவை இப்படி இருக்கிறது” என்றார். அதற்குப் பதில் சொன்ன சாப்லின், ”வறுமை கவர்ச்சிகரமான விஷயம் போல் எழுதிவிடுகிறார்கள். எந்த ஒரு ஏழையும் பழைய வறுமையை மறுபடி விரும்புவதில்லை. அதற்காக ஏங்குவதுமில்லை. அதை போல வறுமையில் சுதந்திரம் காண்பவனும் இருக்கமுடியாது…..” என்று தெளிவாய்ச் சொன்னார். பணக்காரர்களின் அழுகிநாறும் உலகமும் வேண்டாம், ஏழ்மை வறுமையும் வேண்டாம், சுதந்திரமான – ஜனநாயகமான புதிய உலகம் வேண்டும். இதுவே அவரது நடிப்பு, கதை, அரசியல் வாழ்க்கை எல்லாம், இதன் தர்க்கரீதியிலான சிந்தனைகள் அவரைக் கம்யூனிச ஆதரவாளராக மாற்றியது. தன் வாழ்நாள் முழுவதும் துயரங்களை சுமந்த பெரும் பணக்காரர் சாப்லின்… உலக மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த ஏழை சாப்லின்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com