முகப்புகோலிவுட்

'கற்றது தமிழ்' எனும் மரகதத்தை நினைவுகூர்தல்

  | October 05, 2017 00:01 IST
Kattradhu Thamizh Movie

துனுக்குகள்

  • ஜீவா, தன் கேரியரிலே ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம்
  • 2007 அக்டோபர் 5ஆம் தேதி வெளியான இயக்குனர் ராமின் முதல் படம் கற்றது தமிழ்
  • cult திரைப்படங்களின் வரிசையில், ‘கற்றது தமிழ்’ ஒரு cult classic
தமிழ் சினிமாவில் ‘ஆரண்ய காண்டம்’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’, ‘வாகை சூட வா’, ‘பூ’ உள்ளிட்ட எத்தனையோ சிறந்த திரைப்படங்கள், ரிலீசான சமயத்தில் தமிழ் மக்களால் சரியாக கொண்டாடப்படாமல் கவனிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒரு திரைப்படம், 2007ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியான இயக்குனர் ராமின் முதல் திரைப்படமான ‘கற்றது தமிழ்’. படம் வெளியாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் கொண்டாடித் தீர்க்கப்படும் cult திரைப்படங்களின் வரிசையில், ‘கற்றது தமிழ்’ ஒரு cult classic!

படத்தின் தலைப்பில் உள்ளதைப் போல, தாய்மொழியை பாடமாய் கற்ற ஒருவனின் கஷ்டங்களை மட்டும் காட்டிடும் ஒரு திரைப்படமாக அல்லாமல், காலம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வளவு அலங்கோலம் ஆக்குகிறது என்பதையும் நம் வாழ்விலும் சமூகத்திலும் நம்மைச் சுற்றி எவ்வளவு அசிங்கங்களையும் அழுக்குகளையும் கொண்டிருக்கிறோம் என்பதையும் அப்பட்டமாக காட்டும் திரைப்படமாக இருந்தது ‘கற்றது தமிழ்’. இப்படத்தின் இறுதிக்காட்சியில் வரும் ஒரு வசனத்தையே இப்படத்தின் மையக் கருத்தை சொல்லிட மேற்கோளிட்டு காட்டலாம் – ’அன்னைக்கு இவங்களால இவங்களோட செல்ல நாய் டோனியை காப்பாத்த முடியல, இன்னைக்கு நம்ம யாராலயும் இவங்களை காப்பாத்த முடியல’. இந்த சமுதாயம் ஒருவன் நல்லவனாகவே இருந்திடவும், அவனது கஷ்ட காலங்களில் அவனை தேற்றிடவும் ஆற்றிடவும் எந்த வாய்ப்புகளையுமே கொடுப்பதில்லை என்பதையும் சொல்கிறது.
 
kattradhu thamizh jiiva anjali


தன் பத்து வயதிலேயே தன் தாயையும், தாத்தா பாட்டியையும் இழப்பது, பக்கத்து வீட்டுத் தோழி ஆனந்தியின் பிரிவு, ஹாஸ்டல் வாழ்க்கை, தனக்கு எல்லாமுமாய் இருந்த தமிழ் ஐயா பூபால் ராயரின் மரணம், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தமிழ் மொழியை பட்டப்படிப்பாய் தேர்ந்தெடுப்பது என தொடர்ந்து சாபங்களே பிரபாகருக்கு வாழ்க்கையாய் அமைகிறது. அவன் தோழி ஆனந்தியே, அவனது வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிஷம். ஆனந்தி என்கிற அந்த சொர்க்கமும், பல சமயங்களில் அவன் கையை விட்டு போகிறது. கல்லூரி முடியும் வரை ஓரளவுக்கு பிரச்சினைகள் இல்லாமல் நகரும் பிரபாகரின் வாழ்க்கை, வேலை தேடி சென்னை வந்ததும் முழுக்க முழுக்க நரகமாய் மாறுகிறது. மாதம் 2000 சம்பளம், மேன்ஷன் வாழ்க்கை, அனுதினமும் விலைமாதர் சகவாசம் கொண்ட உடனிருக்கும் மேன்ஷன்வாசிகள், தன் காதல் கவிதையை தவறாக பயன்படுத்திய பக்கத்து அறை நண்பன், தமிழ் ஆங்கிலம் எதுவுமே சரியாக தெரியாத அனந்தராமனுக்கு மாசம் 2 லட்ச ரூபாய் சம்பளம், ஆசை ஆசையாய் முதல் மாத சம்பளம் மொத்தத்தையும் கொடுத்து ஆனந்திக்காக அவள் விரும்பிய சுடிதாரை வாங்கி வருகையில் அவன் கையில் வந்து சேரும் கடிதம் என பிரபாகரின் வாழ்க்கையில் எல்லா பக்கமும் அவமானங்களும், அதிர்ச்சிகளும் மட்டுமே நிரம்பி கிடக்கிறது. தொடர் மன அழுத்தத்தால், ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சிக்கே செல்லும் பிரபாகர் தன் கட்டுப்பாட்டை இழந்து வெவ்வேறு சூழ்நிலைகளில் 22 கொலைகள் செய்யும் அளவிற்கு மனப்பிறழ்வு ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழியைக் கற்றவர்களின் தற்போதைய அவல நிலையையும், தகவல் தொழில்நுட்ப துறையின் அசுர வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வையும் இன்னபிற கேடுகளையும், நமது கல்விமுறை பொருளாதார ரீதியாக எவ்வளவு பெரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றியும், ஒரு குறிப்பிட்ட துறையினர் மட்டுமே வளர்வது வளர்ச்சி அல்ல வீக்கம் என்பதையும் விரிவாக சொல்லியிருந்தார் இயக்குனர் ராம். சில காட்சிகளில் மிகைப்படுத்துதல் இருந்தாலும் கூட eccentric ஆக தெரிந்தாலும் கூட, நல்ல மதிப்பெண் எடுத்த மாணவனைப் பார்த்து ‘ஏன் தமிழ் படிக்க வந்த?’ என கல்லூரி தமிழ் துறைத் தலைவரே கேட்பது, பொது இடத்தில் சிகரெட் பிடித்த வழக்கில் போலீஸ் ஸ்டேஷன் வந்த பிரபாகரிடம் சிகரட்டை கொடுத்து ‘யோவ்.. வெளியே குடிச்சாத்தான்யா கேஸூ, உள்ளே குடிச்சா ஒண்ணும் இல்ல’, ‘கழுதை விட்டை போடுற மட்டும், 50 லட்ச ரூபாய்க்கு கூட கஞ்சா கேஸ் போட முடியும்’ என போலீஸ் கான்ஸ்டபிள் சொல்வது போன்ற காட்சிகளிலும், ‘இந்த ஊரு, ரெண்டு லட்ச ரூபா வாங்குறவனுக்கு ஏத்த மாதிரி மாறிட்டு இருக்கு சார்’ போன்ற வசனங்களிலும் இருக்கும் உண்மையும், ‘என் வாழ்க்கையில ஆனந்தி இல்லாம போனதுக்கு, நானா சார் காரணம்?’ என பிரபாகர் கேட்கும் கேள்வியியும் ரொம்பவே சுடுகிறது!
 
kattradhu thamizh jiiva anjali


இப்படத்தில் வரும் பிரபாகர் – ஆனந்தியின் காதல், தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்த காதல் காட்சிகளின் மிகத் தூய்மையான வடிவம் என்றே சொல்ல வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு தன்னைப் பார்க்கும் பிரபாகரிடம் ‘நாங்க இரண்டாம் தாரத்து குடும்பம்ன்னு தெரிஞ்சா, எல்லோரும் எவ்ளோ தப்பா பேசுவாங்க. ஏன், நீயே தப்பா நினைக்கமாட்ட?’ என கேட்டதும், ‘ச்சச்சே.. எனக்கு நீ எப்போவுமே கோழி றெக்கைகளைப் பறிச்சுக் குடுத்த அதே குட்டி ஆனந்தி தான்’ என பிரபாகர் சொல்வதும், ஆனந்தியைத் தேடி மகாராஷ்ட்ரா வரை பிராபகர் செல்வதும், பிரபாகரிடம் காசில்லை என தெரிந்து விலை குறைவான சுடிதார் தான் வேண்டும் என ஆனந்தி அடம்பிடிப்பதும், இறுதியில் ஆனந்தியை ஒரு விபச்சார விடுதியில் இருந்து காப்பாற்றி பிரபாகர் கூட்டிச் செல்லும்பொழுது தான் ஏன் இப்படியானேன் என ஆனந்தி சொல்ல முயற்சிக்கும்பொழுது ‘எனக்கு தெரிஞ்ச ஆனந்தி வாழ்க்கையில, எதுவுமே நடக்கல’ என பிரபாகர் சொல்வது, பஸ்ஸில் ஆனந்தியை பார்ப்பவனிடம் ‘ஏழு வயசுலேயே எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு’ என சொல்வது என ஆனந்தியும் பிரபாகரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியுமே ஒரு செல்லுலாயிட் கவிதையாகவே இருந்தது. ‘இல்லாத பாலைவனத்தைப் பத்தி பெரிய கனவு காணுற இல்லாத புலி’ கதை, ஒவ்வொரு முறையும் ‘நிஜமாதான் சொல்றியா?’ என கேட்கும் ஆனந்தி, மகாராஷ்ட்ராவில் ஆனந்தியுடனான காட்சிகள், ‘அம்மா இல்லாத இந்த கொஞ்ச நேரத்துல, என்னால உனக்கு சமைக்க முடிஞ்சது வெறும் இந்த ஒரு டம்ளர் சுடுதண்ணி தான்.. குடிச்சிடேன் ப்ளீஸ்’, ‘நிஜமாதான் சொல்றியான்னு கேட்டப்போவே எனக்குள்ள இருந்த அந்த பழைய குட்டி பிரபாகர், மரணமும் கொலையும் அறியாத அந்த குட்டி பிரபாகர் திரும்ப வந்துட்டான்னு புரிஞ்சது’, ‘பொதுவா நம்ம வாழ்க்கையில சந்தோஷமா இருக்குற தருணங்கள், நாம கவனிக்காமலே கடந்து போய்டும். ஆனா, அன்னைக்கு எனக்கு ஒரு பாக்கியம் இருந்துச்சு. என வாழ்க்கையோட முக்கியமான தருணத்தை நான் கவனிச்சு சந்தோஷமா பார்த்துட்டு இருந்தேன்’ என்பது போல படம் நெடுக இந்த அழகான காட்சிகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இன்னும் அதிக அழகு சேர்த்தது ராமின் வசனங்கள்.

இந்த படத்தில் யுவனின் பங்களிப்பு, அளப்பறியாதது. அவரது இசைதான், 'கற்றது தமிழ்' படத்தின் உயிர் என்றே சொல்லலாம். யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான பாடல்களும், மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசையும் இல்லாமல் இப்படத்தை நினைத்து கூட பார்க்க இயலாது. ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘ஆரண்ய காண்டம்’, ‘புதுப்பேட்டை’, ‘பருத்தி வீரன்’ என யுவனின் சிறந்த படைப்புகளை பட்டியலிட்டால் ‘கற்றது தமிழ்’ திரைப்படமும் அதில் ‘டாப் 5’ திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இயக்குனர் ராமின் கதைக்கும் பாத்திரங்களின் உணர்வுகளுக்கும் பாடல்களில் மிகச் சரியான வார்த்தை வடிவம் கொடுத்திருந்தார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். ‘பறவையே எங்கு இருக்கிறாய்’, ‘உனக்காகத்தானே’, ‘பற பற பற பட்டாம்பூச்சி’ உள்ளிட்ட ஒவ்வொரு பாடலிலுமே, பாடல் வரிகள் நம்மை கதாபாத்திரங்களுக்கு அருகே இழுத்து சென்றது. ‘உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே, மரணங்கள் வந்தாலும் வரமல்லவா?’ ‘கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்... உரையாடல் தீர்ந்தாலும், உன் மௌனங்கள்’ என பாடல் வரிகளில் முத்துக்களை பதித்திருந்தார் முத்துக்குமார். இப்படிப்பட்ட ஒரு சோஷியல் த்ரில்லர் திரைப்படத்திற்கு, டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பாக அமைவது ரொம்ப முக்கியம். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் கடும் உழைப்பும், இந்த படத்தை ஒரு குறையில்லா சித்திரமாக உருவாக்க உதவியிருந்தது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் அவர்களுக்கு இதுவே முதல் திரைப்படம் என்கிற உண்மையை கொஞ்சம் கூட நம்பவே முடியாத அளவிற்கு, ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃபிரேமிலும் அசத்தியிருப்பார்.

நடிகர் ஜீவா, தன் கேரியரிலே ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திரைப்படம் இதுவே என சொன்னால் மிகையாகாது. பள்ளி-கல்லூரி மாணவன், தமிழ் ஆசிரியர், கொலைகாரன் என ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப மிகையில்லாத வகையில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு முழுமையான நடிகனாய் நிரூபித்த அவர், இந்த படத்திற்காக எந்த விருதையுமே வெல்லாதது வருத்தமே! முதல் படம் என்றே நம்ப முடியாத அளவிற்கு ஆனந்தியாகவே வாழ்ந்து நம் மனதில் பதிந்த அஞ்சலி, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். ‘அதுக்கென்னடே’, ‘நோ மென்ஷம் டே’ என நாகர்கோவில் தமிழில் பேசும் ஹாஸ்டல் வார்டன் தமிழ் ஐயா பூபால் ராயராக வந்த அழகம்பெருமாள், ‘அப்படியென்னடே பெரிய இங்கிலிப்பீஸூ..?’ என சொல்லி ‘தர் வாஸ் அ கேர்ள்’ என ரைம்ஸ் பாடும் அழகிலேயே ‘ச்சே, நமக்கு இப்படியொரு வாத்தியார் அமையலையே’ என ஏங்க வைத்திருப்பார்.
 
kattradhu thamizh jiiva anjali


‘கற்றது தமிழ்’ திரைப்படம் வெளியான புதிதில், ஒரு சில சினிமா ரசிகர்கள் சொன்ன குறைகளில் ஒன்று – ‘படம் focused ஆக நகரவில்லை, ஆங்காங்கே கன்னாபின்னாவென கதை நகர்கிறது’ என்பது. ஆனால், இந்த கதையை இதை விட தெளிவாக கோர்வையாக சொல்லிவிட முடியாது. ‘கதைக்குத்தான் இந்த காரணம், லொட்டு லொசுக்கெல்லாம்... நிஜ வாழ்க்கைக்கு காரணமும் கிடையாது, எந்த தர்க்கமும் கிடையாது – There are no logics and reasons for real life’ என பிராபகரன் இப்படத்தில் சொல்லும் லாஜிக்கே இதற்கும் பொருந்தும். ஒரு நல்லவன், இந்த சமுதாயத்தை பொறுத்தவரை அநியாயத்துக்கும் நல்லவன் என பார்க்கப்பட்ட ஒருவன், இங்கே வாழவே லாயக்கில்லாதவன் என ஏளனமாய் பார்க்கப்பட்ட ஒருவன் எப்படி 22 கொலைகள் செய்த ஒரு சைக்கோ கொலைகாரன் ஆக மாறினான் என்பதை இதை விட அழுத்தமாக சொல்லியிருக்கவே முடியாது. அபாரமான எடிட்டிங் உதவியுடன், கதாநாயகனின் ஃபிளாஷ்பேக்கை முன்னும் பின்னுமாக சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார் இயக்குனர் ராம்.

‘கற்றது தமிழ்’ வெளியாகி அடுத்த நாளே, சில முன்னணி பத்திரிக்கைகளில் படத்தை பாராட்டித் தள்ளி எழுதிய விமர்சனங்களைப் பார்க்க முடிந்தது. தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என கிளம்பினால், கிட்டத்தட்ட 15 தியேட்டர் இருந்த என் ஊரில் ஒரு குப்பை தியேட்டரில் கூட இந்த படத்தை வெளியிட யாரும் தயாராக இல்லை. மதுரைக்கு கிளம்பி போய் பார்த்துவிட்டு வரலாமா என யோசித்துக் கொண்டிருக்கையில், நாலாவது நாளே மதுரையில் ஒரு தியேட்டரில் கூட்டமே இல்லை என்கிற காரணத்தால் படம் தூக்கப்பட்டு அந்த பிரிண்டில் எங்கள் ஊரில் திரையிடப்பட்டது. இந்த படம் வெளியான சமயத்தில், இப்படிப்பட்டதொரு வரவேற்பே கிடைத்தது. ‘கூட்டம் வரவில்லை’ என்று நம்மூரிலும் படத்தை தூக்கிவிடுவார்களோ என பயந்து, எங்கள் ஊரில் படம் வெளியான அன்றே அவசர அவசரமாக முதல் நாள் முதல் காட்சியே சென்று பார்த்தேன். அதன் பின், நண்பன் ஒருவனோடு மீண்டுமொரு முறையும் பார்த்து சிலிர்த்தேன்.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த தரமான படைப்புகளில் ஒன்றான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியான பொழுதே பல பத்திரிக்கைகளால் கொண்டாடப்பட்டாலும் கூட, மெயின்ஸ்ட்ரீம் ஆடியன்ஸ் இடையே ரொம்பவே மோசமான வரவேற்பையே பெற்றது. ஒரு வேளை இந்த படத்தை இது வரை நீங்கள் பார்த்திருக்கவில்லையென்றால், கூடிய விரைவில் பார்க்க முயற்சியுங்கள்! :)

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்