முகப்புகோலிவுட்

‘Dark காமெடி’ படங்களின் முன்னோடியான ‘சூது கவ்வும்’! #5YearsOfSoodhuKavvum

  | May 01, 2018 09:34 IST
Soodhu Kavvum

துனுக்குகள்

  • கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காமெடி படம்
  • இவர் ஒரு ரசனையான எழுத்தாளர் என்பது அவர் இயக்கிய 2 படங்களிலுமே தெரியும்
  • ‘சூது கவ்வும்’ ஒரு subtle ஆன social satire படம் என்றும் கூட சொல்லலாம்
ஹாலிவுட்டில் ஒரு சில ‘Dark காமெடி’ திரைப்படங்களை பார்க்கையில், இது போல நல்ல படங்கள் தமிழில் வராதா என்றொரு ஏக்கம் ஏற்படுவதுண்டு. தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே, ‘Dark காமெடி’ என்கிற ஜானரை நம் ரசிகர்களுக்கு ‘பேசும் படம்’ திரைப்படம் மூலம் 30 வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசன் அவர்களையே சேரும். அதன் பின்னர், கடந்த 10-15 ஆண்டுகளில் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘ஓரம் போ’, ‘வ – குவார்ட்டர் கட்டிங்’ என ஒரு சில படங்கள் வெளியாகியிருந்தாலும் கூட, வணிகரீதியாக பெரிய வெற்றியடைந்து இந்த ஜானரை ரசிகர்களிடையே மிகச்சரியாக கொண்டுபோய் சேர்த்த திரைப்படம் என்றால், அது இயக்குனர் நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’ திரைப்படம் தான்!
 
vijay sethupathi soodhu kavvum

பொதுவாக ஒரு காமெடி திரைப்படத்தில், வித்தியாசமான கதாபாத்திரங்களும் அவர்களை ஒரு மையப்புள்ளியில் இணைக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும் சரியாக எழுதப்பட்டுவிட்டால், நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில், ஆள் கடத்தலுக்கு விதிமுறைகள் எல்லாம் வைத்து பாடம் எடுக்கும் தாஸ், அவனது கற்பனைக் காதலி / தோழி ஷாலு, விடியற்காலையில் அலாரம் வைத்து எழுந்து குளித்துவிட்டு சரக்கடிக்கும் சேகர், நயன்தாராவுக்கு கோவில் கட்டிய பகலவன், தவறான ஐடியாக்கள் கொடுக்கும் கேசவன், தன்னிடம் லஞ்சம் கொடுக்க வந்த ஆளை தானே லஞ்ச ஒழிப்பு துறையில் பிடித்து கொடுக்கும் அமைச்சர் ஞானோதயம், அவருக்கு அப்படியே நேர் எதிரான குணாதிசியம் கொண்ட அவரது மகன் அருமை பிரகாசம், இன்ஸ்பெக்டர் பிரம்மா, ரவுடி டாக்டர் என ‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாமே தனித்துவமாக இருந்தன.

படம் முழுக்க ஒரேயொரு காட்சி தவிர வேறெங்குமே படத்தின் மைய கதாபாத்திரங்கள் எங்குமே சிரிக்கக் கூட மாட்டார்கள், ஆனால் பார்வையாளர்களாகிய நாம் சிரிக்காத காட்சிகளே இருக்காது. படம் நெடுக சின்ன சின்ன காட்சியிலும் கூட, வசனங்களும் ஒவ்வொரு பாத்திரத்தின் ரியாக்ஷனும் ஏதோவொரு வகையில் சிரிப்பை வரவழைக்கும். உதாரணத்திற்கு, டாஸ்மாக் பாரில் கும்பல்களுக்கு இடையே சண்டை வந்து போலீஸ் அங்கு வரவே சண்டையிட்டு கொண்டிருந்த ஒரு ஆள் போலீஸைப் பார்த்து ‘ஏன்மா சைரன் எல்லாம் வெச்ச வண்டியில வரமாட்டீங்களா?’ என கேட்பதாகட்டும், இல்லாத ஷாலுவுடன் பேசும் தாஸிடம் அப்பாவியாக பகலவன் ‘இந்த நோய் உங்களுக்கு எப்படி வந்துச்சு, பாஸ்? என்ன பண்ணா வரும்?’ என கேட்பது, ‘1.5 லட்சத்துக்கு நயன்தாராவுக்கு சிலை வெச்சியா? ஏதாச்சும் தொழில் பண்ணியிருக்கலாம்ல..’ என கேசவன் சொல்ல ‘தொழிலா, எதுக்கு?’ என பகலவன் கேட்பது, ’உங்க பட்ஜெட்ல 45,000 துண்டு விழுந்தா, சமாளிச்சிட முடியுமா?’ என கடத்தப்பட்ட பெண்ணின் அப்பாவிடம் தாஸ் பேரம் பேசுவது, ‘எல்லோரும் வேலை பார்த்தே ஆகணுமா? தினமும் திங்கணும், பேளணும்… நடுவுல கொஞ்சம் வேலை பார்க்கணும். இதானே உங்க கான்செப்டு?’ என சேகர் philosophy பேசுவது, ‘நீ பேப்பர் படிப்பியா?’ என கேட்க ‘அது என்னங்க... டெய்லி ஒரே நியூஸை போட்டு தேதியை மாத்தி மாத்தி விக்குறானுங்க’ என பகலவன் சொல்வது, சரக்கடித்துவிட்டு பகலவன் சாப்பிடுவதை பார்த்து ‘இதை இட்லின்னு சொன்னா, சட்னி கூட நம்பாதுடா’ என கேசவன் கடுப்பாவது, ‘அதிகாரத்தில் கை வைக்கக்கூடாது, no power house… This plan no pickup, Problems very much, I complete..’ என எப்பொழுதும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருக்கும் தாஸ், ‘இவனை கடத்த பிளான் எல்லாம் போட தேவையில்ல, ஒரு டீக்கடை போட்டாலே போதும்’ என கேசவன் கிண்டலடிப்பது, இறுதியில் போலீஸிடம் பேயடி வாங்கும்பொழுதும் கூட ‘இதுக்கு பேருதான் இருட்டு அறையில் முரட்டுக் குத்தா?’ என சொல்லி நான்கு பேரும் விழுந்து விழுந்து சிரிப்பது என காட்சிக்கு காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்த மிகச்சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம் இது.

நலன் குமாரசாமி ஒரு ரசனையான எழுத்தாளர் என்பது அவர் இயக்கிய இரண்டு படங்களிலுமே தெரியும். அவரது கதாபாத்திரங்கள், சமூகத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் கவனித்து அவற்றை அழகாக கதைக்குள் கொண்டு வருவது, ரொம்பவே சீரியஸான காட்சியிலும் கூட மெல்லியதாக இழையோடும் நகைக்சுவை என பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படத்தில் ஒரு சில பாத்திரங்களுக்கு பயங்கரமாக பில்ட்-அப் கொடுத்து அதை அழகாக உடைத்திருப்பார்; உதாரணத்திற்கு, படம் முழுக்க ரொம்ப கொடூரமாக காட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் முடிவு மற்றும் முதலமைச்சரும் அமைச்சர் மகன் அருமைப்பிரகாசமும் சந்திக்கும் காட்சிகளை சொல்லலாம்.
 
vijay sethupathi soodhu kavvum

ஒரு காமெடி திரைப்படம் என்பதை தாண்டி, ‘சூது கவ்வும்’ திரைப்படத்தை ஒரு subtle ஆன social satire திரைப்படம் என்றும் கூட சொல்லலாம்; படத்தின் டைட்டிலில் தொடங்கி, பல விஷயங்கள் இப்படத்தில் பட்டும் படாமல் ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும். “நீ எப்படி உங்கப்பனுக்கு தெரியாம ஃப்ராடு பண்ணியோ, அதேதான் அரசியல்.. ஆனா, இங்கே அப்பாவுக்கு பதிலா மக்கள்” என சொல்லி முதலமைச்சர் தனது கட்சியின் எம்.எல்.ஏ வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறார். அவன் வெற்றி பெற்று சட்டமன்றம் போவதை, ஒரு நேர்மையான காவல் அதிகாரியும் ஊழல் கரையே படியாத அரசியல்வாதியும் சகிக்கமுடியாமல் பார்க்கிறார்கள். அதே போல, “குற்றவாளியா இருந்தாதானே, என்கவுண்ட்டர் பண்ணமுடியாது.. நிரபராதி தானே, என்ன வேணா பண்ணலாம்” என்றொரு வசனம் வரும்; காவல் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை, இதை விட வலிமையாக வேறு வார்த்தைகளில் சொல்லமுடியுமா என தெரியவில்லை.
‘சூது கவ்வும்’ படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது சந்தோஷ் நாராயணன் அவர்களின் பின்னணி இசையும், பாடல்களும். ‘மாமா டிரவுசர்’ பாடலும், ‘Sudden Delight’ தீம் மியூசிக்கும் பயன்படுத்தபட்ட விதமே அதிரடியாக இருக்கும். இப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகியும், இன்றும் பலரது ரிங்டோனாக இந்த தீம் மியூசிக் இருப்பதை காண முடிகிறது.

முதலில், இக்கதையில் தாஸ் வேடத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு அவர்களை நடிக்க வைத்து அவரை ரொம்பவே வித்தியாசமாக காட்டவேண்டும் என நலன் குமாரசாமி விரும்பியதாக கூறப்படுகிறது. வடிவேலு அவர்கள் நடித்திருந்தால், எந்தளவிற்கு பிரமாதமாக வித்தியாசமாக இருந்திருக்குமோ தெரியவில்லை; ஆனால், இந்த வேடத்தில் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காமெடி படம் ‘சூது கவ்வும்’. இந்த 5 ஆண்டுகளில், இப்படத்தை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமாக வேறெந்த காமெடி படமும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் உண்மை!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்