முகப்புகோலிவுட்

உடல் உறுப்புகளை தானம் செய்த விஜய் பட கதாநாயகி..!

  | July 02, 2020 19:53 IST
Genelia

"இந்த துவக்கத்தில் பங்கெடுத்து உங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”

ஜெனிலியா டிஸோசா தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். இயக்குநர் சங்கரின் ‘பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், தனது கியூட்டன முகபாவனைகளுடன் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அவர் தமிழில் கடைசியாக விஜயுடன் இணைந்து 2011-ல் வெளியான வேலாயுதம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ல் பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக திரைப்படங்களை விட்டு ஒதுங்கி இருந்த அவர், விரைவில் மீண்டும் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், நேற்று மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் இணைந்து உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் “ரிதேஷ் தேஷ்முகும் நானும் நீண்ட காலமாக இதைப் பற்றி யோசித்து வருகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய இறங்கவில்லை. இன்று மருத்துவர் தினத்தன்று எங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளிக்கிறோம். எங்களுக்கு ஊக்கமளித்த டாக்டர் நோசர் ஷெரியர் மற்றும் FOGSI க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் ஒருவருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு ‘வாழ்க்கையின் பரிசு'. இந்த துவக்கத்தில் பங்கெடுத்து உயிரைக் காப்பாற்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டு, உங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நட்சத்திர ஜோடியின் இந்த நல்ல முன்னெடுப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com