முகப்புகோலிவுட்

எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை! - அமலா பால் அறிக்கை

  | February 13, 2018 15:28 IST
Amala Paul Sexual Harassment

துனுக்குகள்

  • பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்
  • இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்
  • இந்த பிரச்சனையில் உடனடியாக செயல்பட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரும் அவருக்கு துணையாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளது காவல் துறை. அவர்களைக் காவல்துறை விசாரித்துவருகிறது. இந்த சம்பவம் குறித்து அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜனவரி 31ம் தேதி தனக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பின் வருமாறு விவரித்திருந்தார். "நான் சென்னையிலுள்ள ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவர் நடன நிகழ்ச்சியைப் பற்றி முக்கியமாக என்னிடம் பேச வேண்டும் எனக் கூறினார். மலேஷியாவில் நிகழ்ச்சி முடிந்த பின் நடக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார். `அப்படி என்ன சிறப்பு விருந்து அது?' என நான் கேட்க, அவர் உனக்குத் தெரியாததா என அலட்சியமாக சொன்னார். அப்போது எங்களை சுற்றி யாரும் இல்லாதததும், அவரின் இந்தப் பேச்சும் என்னைக் கலவரமடையச் செய்தது. உன்னுடைய சம்மதத்துக்காக வெளியில் காத்திருப்பேன் எனச் சொல்லிவிட்டு சென்றார். நான் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் போன் செய்து என்னை மீட்கும் படி கூறினேன். அவர்கள் அங்கு வர அரை மணிநேரம் ஆனது. அந்த மனிதரோ தன்னுடைய வழக்கமான தொழில் பேச்சுவார்த்தை நடத்தியதைப் போல் ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்றிருந்தார்.

என்னுடைய ஆட்கள் அவரைப் பிடிக்க முயலும் போது, `அவளுக்கு விருப்பமில்லை என்றால், விருப்பமில்லை என சொல்ல வேண்டியதுதானே. அதில் என்ன இருக்கிறது' என்று கூறி அதிலிருந்து தப்பிக்க முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தார்கள். இவை நடந்து கொண்டிருந்தபோது, அவரது மொபைலில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், பிற தகவல்கள் மேலும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் மற்ற நடிகைகளின் விபரங்கள் எல்லாம் இருந்ததைப் பார்த்தேன். அப்போதுதான், அவர் திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என உணர்ந்தேன். அங்கு காவல் துறையினர் வந்ததும், அவரை ஒப்படைத்துவிட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவதற்காக நானும் தி.நகர் மாம்பலம் காவல் நிலையத்துக்குச் சென்றேன்.
இந்தப் பிரச்சனையில் வேகமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணைக்கான ஆதாரங்களைத் திரட்டியதோடு, மோசடியில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் கைது செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரைப் பிடிக்க பிடி வாரண்டு தயார் நிலையில் உள்ளது. இந்த மோசடியில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிரார்களோ அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என வேண்டுகிறேன்.

இது எதுவும் தெரியாமலேயே சில ஊடகங்கள், என்னைப் பற்றியும், என் மேனேஜரைப் பற்றியும் தவறான தகவல் பரப்புகிறார்கள். விசாரணைக்குத் தடையாக இருக்கக் கூடாது என்றுதான் அமைதி காத்துவருகிறேன். ஆனால், அது போன்ற கீழ்த்தரமான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன்.

இந்த அறிக்கையைக் கூட, சென்னைக் காவல்துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் திரு.பிரதீப்குமார் மீதோ எந்தத் தவறும் இல்லை என்பதைப் அறிவிக்கவே வெளியிடுகிறேன்." இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் அமலா பால்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்