முகப்புகோலிவுட்

"அந்த உயிரே எனது உலகமானது!!" - மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி சங்கர் #Exclusive

  | May 05, 2020 11:31 IST
Celebrity Interview

துனுக்குகள்

 • அய்யய்யோ..! நடிக்கின்ற ஆசையும் இல்லை, படம் பார்க்கும் வழக்கமும் இல்லை
 • அவ்வாறு தேர்வு செய்து அனுப்பப்பட்ட கடைசி மிஸ். மெட்ராஸ் நான் தான்..!
 • எல்லா கட்சியில் இருந்தும் அழைப்பு வந்தது அது வேறு விஷயம். ஆனா
1991ம் ஆண்டு 'ஆத்தா உன் கோவிலிலே' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் திருமதி. கஸ்தூரி சங்கர். சின்னவர், Government மாப்பிள்ளை, இந்தியன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர் மிஸ். மெட்ராஸ் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியான 'வெல்வெட் நகரம்' வெளிவர காத்திருக்கும் 'தமிழரசன்' போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. NDTV தமிழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டி பின்வருமாறு...    

அப்பா IIT என்ஜினீயர்.. அம்மா வக்கீல்.. பொதுவாக தாய் தந்தையர் தங்கள் வழியில் பிள்ளைகளை வளர்ப்பது தான் இயல்பு.. ஆனால் நீங்கள் எப்படி திரைத்துறையை தேர்வு செய்தீர்கள்..? நடிக்க அவ்வளவு ஆசையா..?

அய்யய்யோ..! நடிக்கின்ற ஆசையும் இல்லை, படம் பார்க்கும் வழக்கமும் இல்லை, வீட்டில் யாரும் சினிமா துறையை சார்ந்தவர்களும் இல்லை.. ஆனால் சிறு வயதில் இருந்தே பாட்டு மற்றும் நடனத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. அது மட்டுமல்லாமல், அந்த காலகட்டத்திலேயே 'Doordarshan'-ல் குழந்தை தொகுப்பாளினியாக நான் பணிபுரிந்து வந்தேன். அப்பொழுது எனக்கு கிடைத்த அறிமுகங்கள் வாயிலாக மாடலிங், அழகி போட்டிகள் என்று ஆரமித்தது இறுதியில் சினிமாவில் வந்து நின்றது. 
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், நான் படிப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி. ஆதலால் நான் IAS அதிகாரியாக அல்லது பெரிய விஞ்ஞானியாக வருவேன் என்று எண்ணினார்கள். ஆனால் நான் 'Alyque Padamsee' அவர்களை போல விளம்பரத்துறையில் சாதிக்க வேண்டும் என்று சொல்லி (பல எதிர்ப்புகளை மீறி) பள்ளியில் Fourth Group எடுத்து படித்தேன். இந்த முடிவால் இறுதியில் நான் ஆசிரியர்கள் உட்பட பலரின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்துவிட்டு சினிமாவில் நுழைந்தேன்.

வீட்டில் எனது தாய் தந்தை என்னுடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் எனது சொந்தங்கள் பலரும் அதை விரும்பவில்லை. அதே போல நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சரி வந்த பிறகும் சரி பெரிய அளவில் எனக்கு சினிமா மீது ஆசை இல்லை. "ஏன்னா சினிமாவ வெளில இருந்து பாக்குறப்பதான் ஜிகு ஜிகு-ன்னு இருக்கும், உள்ள வந்தாதான் அங்க இருக்குற கஷ்டம் புரியும்"... 

ஒரு Flash Back கேள்வி... மிஸ். மெட்ராஸ் பட்டம் வாங்கிய தமிழ் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் 90-கலில் அதை பெறுவது என்பது மிகவும் கடினம். ஆகையால் அந்த விருது குறித்து சில வரிகள்...

(சலிப்புடன்).. "இப்போதான் மெட்ராஸ் அப்படிங்கிற பேரும் இல்ல.. மிஸ். மெட்ராஸ் போட்டியும் இல்ல.."  

முன்பெல்லாம் மிஸ். மெட்ராஸ், ஹைதராபாத், டெல்லி மற்றும் கல்கத்தா என்று மண்டலம் வாரிய தேர்வு செய்து அதன் பிறகு இறுதி போட்டிக்கு அனுப்புவார்கள். இந்நிலையில் அவ்வாறு தேர்வு செய்து அனுப்பப்பட்ட கடைசி மிஸ். மெட்ராஸ் நான் தான்..! ஏன் என்றால் அடுத்த ஆண்டில் இருந்து அவர்கள் அந்த தேர்வுகளை தேசிய அளவில் மாற்றி அமைத்துவிட்டனர். ஆதலால் நான் தான் கடைசி மிஸ். மெட்ராஸ் அந்த பட்டம் இன்றும் கூட என்னிடம் தான் உள்ளது. அதேபோல மிஸ். இந்தியாவை பொறுத்தவரை நானும் ஒரு Finalist, ஆனால் அந்த ஆண்டு வெற்றி பெற்றது ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் தான். "சோ, எந்த அளவுக்கு competition இருந்துருக்கும்னு உங்களுக்கு தெரியும்.."

சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள திரைத்துறையை கலக்கிய 'Shweta Menon' தான் (மிஸ். இந்தியா போட்டிகள் நடந்தபோது) அப்போது என்னுடைய ரூம் மேட். போட்டியில் பங்கேற்ற அனைவரும் ஆடம்பர உடைகள் அணிந்து சென்றபோது, நான் 230 ரூபாய்க்கு ஒரு புடவை வாங்கி கட்டிக்கொண்டு போட்டியில் கலந்துகொண்டேன். "(மெல்லிய புன்னகையோடு) ஒரு வேலை என்னுடைய அசாத்திய நம்பிக்கையை பார்த்துத்தான் பட்டத்தை கொடுத்துவிட்டார்கள் போல.." 

சிறந்த நடிகையாக திகழ்ந்த நீங்கள் சட்டென்று ஒரு நீண்ட இடைவெளி கொடுக்க காரணம் என்ன..?

(மீண்டும் ஒரு சலிப்போடு கூடிய புன்னகையுடன்..) "அட ஏங்க நீங்க.. நான் எப்போ சினிமாவுக்கு வந்தேனோ அப்போவே எங்க அத்தை சொல்லிட்டாங்க எனக்கு கல்யாணம் ஆகாதுன்னு..", அதனால் என்னோட தாயாரோட உச்சபச்ச கனவு, எனக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதாக மாறியது". இடையில் எனக்கும் சில Proposalகள் வருவதை கண்டு அவர்கள் அதிக பதற்றம் அடைந்தனர். நான் லவ் பண்ணிடுவேன்னு பயந்து ஒரு நாள் எனக்கு கல்யாணம்னு சொல்லி அடம்புடிச்சுட்டாங்க. நானும் கல்யாணம் பண்ணிட்டேன். 

அதுல ஒரு விஷயம் என்னனா, நானும் ரொம்ப நாளா ஒத்துழையாமை இயக்கதுல இருந்தேன். கல்யாணம் செய்து கொள்ள மறுத்தேன். ஏன் என்றால் எனக்கு சென்னையை விட்டுப்போக மனமில்லை, அதனால் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தேன். அவர்களும் மூன்று ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை தேடினார்கள், இறுதியில் படத்தில் வருவதை போல "நான் கண்ண மூடுறதுக்குள்ள உன்ன ஒருத்தன் கைல புடிச்சு குடுத்திடனும்னு சொன்னாங்க", இறுதியில் எனக்கு கிடைத்தது அமெரிக்க மாப்பிள்ளை தான். அதனால அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து நடித்துவிட்டு சென்றதால் என்னால் பெரிய அளவில் படங்களில் நடிக்க முடியவில்லை அதும் அந்த இடைவெளிக்கு காரணம்.

அதன் பிறகு குழந்தை என்று வந்ததும் அந்த உயிரே எனது உலகமாக மாறியது, அதுவும் இந்த இடைவெளிக்கு இன்னொரு காரணம்.. ஆனாலும் என்னுடைய மகள் பிறந்த பிறகு தான் நான் 'தமிழ் படம்' முதல் பாகத்தில் 'குத்துவிளக்கு' பாடலில் நடமாடினேன். அதேப்போல எனது மகன் பிறந்த பிறகு தான் 'தமிழ் படம் இரண்டில்' நான் 'வா வா காமா' பாடலில் நடனமாடினேன்.

'ஒரு பாடல் நாயகி' - இந்த விஷயத்தை அறிமுக நடிகை ஏற்பது சகஜம். ஆனால் வருடத்திற்கு 7 படங்கள் வரை நடித்த ஒரு புகழ்பெற்ற நடிகைக்கு சரிவருமா..? அதை நீங்கள் எப்படி ஏற்று கொண்டீர்கள்...

"Actually சினிமாவில் எனக்கு பிரேக் கொடுத்ததே ஒரு பாடலில் நான் நடித்த படம் தான், அந்த படம் தான் இந்தியன்". ஆனால் "Item Song" குறித்து நீங்க கேக்குறீங்கன்னு நினைக்கிறன்.. அப்படி பார்த்தால்.. அதுலயும் நான் First இல்லையே.. எனக்கு முன்பே பல முன்னணி நடிகைகள் item songகிற்கு நடனமாடி இருக்கின்றார்கள். ரம்யா கிருஷ்ணன், மீனா, சிம்ரன் எனக்கு முன்பே அதை செய்துவிட்டார்கள், மேலும் நான் சொன்னது போல இடைவெளி விட்டு நடிக்கும்போது முழுநீள படமும் நடிப்பது கடினம். 

அடுத்ததாக "என்னுடைய Fitnessஐ மற்றவர்களும் கொஞ்சம் பார்க்கட்டுமே, சுருக்கமாக சொன்னால் இந்த வயதிலும் இளமை மாறாமல் இருக்கின்றேன் என்பது சாதனை தானே. Being Sexy என்பது அவமானமான விஷயம் அல்ல, அது பெருமைகொள்ளவேண்டிய விஷயம். எல்லாராலும் அது முடியுமா..? என்னோடு அறிமுகமான நடிகர்களையும், எனக்கு பிறகு அறிமுகமான நடிகர்களையும் பாருங்க. அவங்க எப்படி இருகாங்க நான் எப்படி இருக்கேன்..?. இந்த கேள்வியை யாரும் ஐஸ்வர்யா ராய்யை பார்த்தோ, ஷில்பா ஷெட்டியை பார்த்தோ அல்லது Jenifer Lopezஐ பார்த்தோ கேட்பதில்லை. தமிழ் பெண் என்றாலே இந்த கேள்வி வந்துவிடுகிறது...
 
மிஸ். மதராஸ் கஸ்தூரி எப்போ அரசியல் விமர்சகராக மாறினார்...? ஏன் இந்த திடீர்' அரசியல் பிரவேசம்' 

அரசியல் ப்ரவேசமா அப்படினு கேட்டா...? (சிறு புன்னகை) எல்லா கட்சியில் இருந்தும் அழைப்பு வந்தது அது வேறு விஷயம். ஆனா அரசியலுக்கு வருவதற்கு நமக்குன்னு ஒரு தகுதி வேண்டும்.. குறிப்பாக பொருளாதார தகுதி வேண்டும் அது சுத்தமா இல்ல. மேலும் பெரிய பெரிய திமிங்கலமே வர தயங்கும் நேரத்தில் நான் வெறும் அயிர மீன் எனக்கு அரசியல் ஆசை இருக்கலாமா..?. அரசியல் மேலே பெரிய அவநம்பிக்கை இருக்கின்றது என்பது இன்னொரு காரணம். சரி இந்த சாக்கடையை வெளியில் இருந்து திட்டுவதை விட, உள்ள இறங்கி சுத்தம் செய்தால் தான் சரிவரும் என்று வரும்போது, எல்லோரும் குதிச்ச அந்த குட்டையில நானும் குதிச்சிர வேண்டியது தான்.      

ட்விட்டர் பக்கத்தில் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை 'வச்சு செய்றீங்க', நிச்சயம் பல எதிர்ப்புகள் வரும், எப்படி சமாளிக்கிறீங்க..?

எதிர்ப்புகள் வரும்னுலாம் இல்ல.. வந்துகிட்டு தான் இருக்கு, சந்திச்சுக்கிட்டு தான் இருக்கேன். உண்மையை பேசும்போது எது வந்தாலும் நம்மால் மனதை மாற்றிக்கொள்ள முடியாது. ஏன் என்றால் உண்மை மாறாது. அந்த உண்மை கொடுக்கும் தெம்பில் தான் சமாளித்து கொண்டு இருக்கின்றோம். "என்னால் பெயரை குறிப்பிட முடியவில்லை, இந்திய அளவில் பெரிய அமைச்சருடைய மகன், போன் செஞ்சு மிரட்டி இருக்காரு.". நான் எப்போதாவது எந்த அரசியல் கட்சியையாவது விமர்சித்தால் அந்த கட்சியில் இருந்து பயங்கர torture குடுப்பாங்க. 

எல்லா கட்சியில் இருந்தும் தேவை இல்லாத சில விஷயங்கள் நடக்கும், நானும் அந்த அந்த கட்சிகளிடம் நியாயம் கேட்பேன், அதே போல எனக்கு சாதகமாக நடவடிக்கைகளும் சில சமயம் எடுக்கப்படும் அதையும் நான் ஒப்புக்கொள்ளவேண்டும். அதே சமயம் எல்லா அரசியல் கட்சிகளிடமும் நான் ஒரு மரியாதையை சம்பாதித்துள்ளேன் என்பது உண்மை.   

சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயரை சொல்கிறேன்.. உங்கள் மனதில் தோன்றும் முதல் வார்த்தை என்ன என்று கூறுங்கள்..?

கலைஞர் கருணாநிதி - சகலகலா வல்லவர் 
செல்வி ஜெயலலிதா - சிங்கப் பெண் 
திமுக தலைவர் ஸ்டாலின் - அடுத்த வாரிசு 
சூப்பர் ஸ்டார் ரஜினி - தனி ஸ்டைல், தனி வழி.. அவர் வழி தனி வழி..
கமல்ஹாசன் - Encyclopedia 
விஜயகாந்த் - தமிழகத்துக்கு கொடுத்துவைக்கள..
எடப்பாடி பழனிசாமி - எளிமை 
தினகரன் - புன்னகை மன்னன் 
சீமான் - பாமரரையும் கவரும் பேச்சு
பிரதமர் மோடி - அய்யயோ 8 மணிக்கு என்ன சொல்வாரோ..?
  
நிறைய அரசியல் பேசியாச்சு.. குழந்தைகள் எப்படி இருகாங்க..? அவர்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

குழந்தைகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால், எல்லா தாய்மார்களும் சொல்வதை போல எனக்கும் அவர்கள் தான் உலகம். "என் மகளை பற்றி சொல்லனும்னா.. அவள் என் மகள் என்பதை விட அவள் என் தாய் என்று சொல்லலாம்". டான்ஸ், ஓவியம், சமையல், பன்மொழி திறமை இப்படி பல விஷயங்களில் ஈடுபாடு இருப்பதால் அவள் ஒரு கலையரசி என்று கூறலாம். அவங்க கலை அரசி என்றால் நம்ம ஆளு வீட்டு விஞ்ஞானி, கணித மேதை. "பாதி நேரம் அவன் கணக்கில் எது எதோ பேசுவான், எனக்கு ஒன்னும் புரியாது, உடனே நான் தமிழில் பேசுவேன் அது அவனுக்கு புரியாது. எப்படியும் இந்த வருடத்துக்குள்ள எனக்கு கணக்கு காத்துக்கொடுக்கணும்னு அவன் முயற்சி செய்கிறான். அவனுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டும் என்று நான் முயற்சிக்கிறேன். "இந்த லாக் டவுன் முடிஞ்சதும், முதல் வேலையாக அமெரிக்காவில் இருக்கும் இருவரையும் இந்தியா அழைத்து வர வேண்டும்".

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com