இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “பேட்ட”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இளம் இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது இத்திரைப்படம். காளி என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி தனக்கான இடத்தை மீண்டும் தக்கவைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாவின் நடிப்பு அற்புதம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும் இன்னும் அப்போது பார்த்த சிம்ரனாக இளமையாக தோன்றுகிறார்.
இந்த படத்தில் பேசப்பட வேண்டிய இன்னொரு விஷயம் பின்னணி இசை. “மரண மாஸ்” பாடல் வெளியான அன்றே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ரஜினியின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னணி இசை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் அனிருத்.
பேட்ட திரைப்படம் குறித்து கூறியிருக்கிற அனிருத், “தலைவரின் தீவிர ரசிகன் நான். அவருடைய அண்ணாமலை, ‘பாட்ஷா' போன்ற படங்களின் பாடல்கள் எப்படி ரசிகர்களான எங்களை மகிழ்ச்சி படுத்தியதோ, அதே போல் மகிழ்ச்சியை ‘பேட்ட' படத்தில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். தலைவரோட படத்திற்கு இசை அமைப்பது என்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்பதை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து தெரிந்துக்கொண்டேன்” என்றிருக்கிறார்.