முகப்புகோலிவுட்

20 வருட சினிமா பயணம்; ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு ஏ.ஆர் ரகுமான் வாழ்த்து..!

  | May 14, 2020 20:15 IST
Ravi Varman

ரவி வர்மன் தற்போது மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சினிமா துறையில் பயணம் செய்யத் தொடங்கி இந்த ஆண்டுடன், தனது 20-வது ஆண்டை வெற்றிகரமாக கடக்கிறார். ‘ஜலமர்மரம்' திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் மலையாளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிற மொழிகளிலும் பணியாற்றினார்.

ரவி வர்மன் கடந்த இருபது ஆண்டுகளில் தனது படைப்புகளின் தொகுப்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது அழகான ஃபிரேம்கள் மற்றும் காட்சிகளை பட்டியலிடுகிறது. பார்ப்பவர்களை மேலும் பிரம்மிக்க வைக்கிறது. இவரையும், இவரது படைப்புகளையும், தொடரும் இவரது சினிமா பயணத்தையும் பலரூம் சமூக வலைதளங்களில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அதேபோல், ‘ஆஸ்கர் நாயகன்' இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானும் அதே வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரவிவர்மனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “சிறப்பான 20 ஆண்டுகள்! எங்களுக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோலிவுட்டில் சுசி கனேசன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபைவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ரவி வர்மன். அதையடுத்து ஆட்டோகிராஃப், அன்னியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், வில்லு, காற்று வெளியிடை ஆகிய படங்களில் பணியாற்றிய அவர், தற்போது மணி ரத்னத்தின் பிரம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் தனது பங்கினை அளித்துவருகிறார். மேலும், ரவி வர்மன் சமீபத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து விலகியது குறிப்ப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com