முகப்புகோலிவுட்

கார்த்திக்-ஜெஸ்ஸி காதலுக்காக மீண்டும் இணையும் ‘இசைப்புயல்’..!

  | May 16, 2020 16:30 IST
Vinnaithaandi Varuvaayaa

‘கார்த்திக் டயல் செய்த எண்' டீஸர் கவுதம் மேனனின் ‘Ondraga Entertainment’ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

பூட்டுதலால் வீட்டில் இருக்கும் சிம்பு தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ஆனால், இது ஒரு முழுநீள திரைப்படம் அல்ல, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ஆகும். இதில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும், கிளாஸிக் ஹிட்டான ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படக் கதாப்பாத்திரங்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக மீண்டும் நடிக்கிறார்கள்.

த்ரிஷா குறும்படத்திற்கான தனது பகுதிகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், சிம்புவும் தனது வீட்டிலேயே நடைபெற்ற ஒரு சிறிய படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் பூட்டுதல் நெருக்கடி தொடர்பாக இருவருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது.

‘கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தின் டீஸர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுதம் மேனனின் ‘Ondraga Entertainment' யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியின் காதலை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், மற்றொரு சுவார்ஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த குறும்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வைரல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இக்குறும்படம் விரைவில் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com