முகப்புகோலிவுட்

" 'காற்று வெளியிடை' உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா?" #1YearofKaatruVeliyidai

  | April 07, 2018 12:36 IST
Kaatru Veliyidai

துனுக்குகள்

  • மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியானது 'காற்று வெளியிடை'
  • கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம்
  • படம் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது
"அந்த ஆஃபீஸர் அஷோக் இருக்கான்ல, அவனுக்கு என்மேல ஒரு கண்ணு. எப்பப் பார்த்தாலும் ஈனு இளிப்பான். எனக்க்க்கு உங்க மேல ஒரு இது, உங்களுக்கு லீலாவ பிடிக்கும்... லீலாவுக்கு VCய பிடிக்கும். ஆனா, VCக்கு... VCய மட்டும்தான் பிடிக்கும்"

இந்த வசனம் படத்தின் நிதானமான காட்சி ஒன்றில் வரும். "VC என்கிற வருண், லீலாவை இப்படி பாடாய் படுத்துகிறானே" என இலயாஸ் ஹீசைன், நிதியிடம் அலுத்துக் கொள்வான். அப்போது நிதி, ஹுசைன் மீதுள்ள காதலையும், வருண் - லீலாவின் காதல் நிலை பற்றியும் சிக்கனமாக வர்ணிக்க, மேலே இருக்கும் வசனத்தை சொல்வாள். சரியாக ஒரு வருடம் முன்பு இதே நாளில் வெளியானது `காற்று வெளியிடை'. ஒரே கேள்விதான் "இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா?" பதிலை யோசித்து வையுங்கள்.
 
kaatru veliyidai


ரொம்பவும் பழக்கப்பட்ட சண்டைதான். காதலியின் ஆர்வம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பாத, தன்னைப் பற்றியே சிந்திக்கும் காதலன். இருவரும் சண்டை போடுகிறார்கள். அவ்வப்போது காதல் செய்கிறார்கள், `டேங்கோ' பாட்டெல்லாம் பாடுகிறார்கள். "பனிப்புயல் வந்திடும் வா போகலாம்" என வருண் லீலாவை இழுக்க அங்கு வருகிறது சின்ன உரசல், "வான்னா வரணும்" என முறைப்பு கட்டுவான் வருண். அப்போது சமாதனம் ஆனாலும், ஜாலியாக `Waiting for the புன்னகை' பாடினாலும் அடுத்தடுத்து படம் எதை நோக்கி செல்லும் என நாம் கிட்டத்தட்ட தயாராகியிருப்போம்.
தன் பைட்டர் பைலட் வேலை போலவே முரட்டுத்தனமாக இருப்பது, பறந்துதான் கொண்டிருக்கிறோம் என்பது போல் லீலாவை குனிந்து பார்த்து "பொம்பள வேற ஆம்பள வேற" என கர்வத்துடன் புருவம் உயத்துவதுமாக இருப்பான் வருண். இதற்கு அப்படியே எதிர், லீலா. டாக்டர்.லீலா அல்லவா. மிகுந்த கருணை, பணிவு, அன்பு. "நான் ஏர்ஃபோர்ஸ்காரன் குண்டு வீசுறவன், நீ டாக்டர் உயிரக் காப்பாத்தற ரகம்" என பாகிஸ்தான் ஜெயிலில் இருந்தபடி வருண் சிந்திப்பதை படத்தில் கேட்டிருப்போம். இந்த கான்ட்ராஸ்ட், கூடவே வருணின் போக்கு இரண்டும்தான் படத்துக்கான ப்ளே. `ஆய்த எழுத்து' படத்தில் வரும் இன்பா - சஷி ஜோடியின் அடிதடி காதலை, `காற்று வெளியிடை' கொஞ்சம் ஞாபகப்படுத்தலாம். ஆனால், இதில் கேம் வேறு. வருண் - லீலா இவர்களின் சண்டைக்கு ஊடாக, சில புரிதல்கள் நிகழும். இந்தப் படம் எனக்குப் பிடிப்பதற்கான காரணமும் அதுதான். படத்தை போஸ்ட்மார்ட்டம் செய்து ஆராய்ச்சிக் கட்டுரைக்கு பதிலாக படத்தில் உள்ளில் நடக்கும் இந்தப் Realizing Process பற்றிக் கூறினால் போதுமானது என நம்புகிறேன்.

முதலில் லீலா. வருணுக்கு விபத்து நடக்கும் முன்பே, அவனுக்கு சிகிச்சை அளிக்கும் முன்பே லீலாவுக்கு அவனைத் தெரியும். அவளது அண்ணன் ரவி வருணுடன் பணிபுரிந்தவன். அவனின் கடிதங்களில் மூலம், உயர் அதிகாரி கண்டசாலா போல பாடுவார் என்பது வரை லீலாவுக்கு அத்திப்படி. அதே கடிதங்கள் மூலம்தான் வருண் பற்றியும் லீலாவுக்கு அறிமுகம் கிடைக்கும். அந்த கடிதங்கள் மூலம் ரசித்த வருணை, ஸ்ரீநகர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் முதன்முறை பார்ப்பாள். இந்த வருண்தான் தன்னை அதிகாரம் செய்யப் போகிறான், தன் கையை முறுக்கப் போகிறான், ஏன் அமைதியாக இருக்கணும் எனக் கேட்டால், "Because i say so" என்று சொல்லப் போகிறான் என எதுவும் தெரியாது. பின்பு அது புரிந்ததும் "நீ என்ன கொத்தடிமை மாதிரி நினைக்கிற வருண். செல்ல நாய்க்குட்டி மாதிரி, இப்பிடின்னா வரணும் நினைக்கற. என்னால அது முடியாது. எனக்குத் தன்மானம் உண்டு. எனக்கு ஒரு Equal Relationshipதான் வேணும்'" எனக் கேட்பாள். கடிதங்களில் படித்த வருண், இத்தனை கடினமாக இருப்பான் என்பதை புரிந்து கொள்வாள் லீலா.
 
kaatru veliyidai


இப்போது வருண். அவனுக்கு லீலாவுக்குள் என்ன எனப் புரியாது. அவனுக்கு இருந்ததெல்லாம் ஒரு அச்சம் மட்டுமே. உலகத்தில் தன்னைத்தவிர வேற யாருக்கும் எதுவும் தெரியாது என நினைக்கும் தன் அப்பா சக்கரபாணிப் பிள்ளை போல் ஆகிவிடக்கூடாது. தான், தன்னை சார்ந்த சில விஷயங்கள் தவிர்த்து மற்ற எதிலும் பெரிய ஆர்வம் காட்ட மாட்டான் வருண். கோவித்துக் கொண்டு போன காதலியை சமாதனாம் செய்து அழைத்துவந்து, நண்பர்களிடம் காட்டி "நான் சொன்னா லீலா வருவான்னு சொன்னேன்ல" என்று சொல்வது சரியா, தவறா என அவனுக்குத் தெரியாது. நாளை ரிஜிஸ்டர் ஆஃபீஸில் பெயர் பதியலாம் எனச் சொன்னால், அதை மறக்கக் கூடாது என்ற முக்கியத்தும் அவனுக்குத் தெரியாது. வருணின் கருவை சுமந்து கொண்டிருக்கும் லீலாவிடம் "குழந்தைக்கு தகப்பனாக இருக்கும் அருகதை எனக்கு இல்லை" என்பான். ஆனால், எல்லாம் புரிய ஆரம்பிக்கும் போது கிளம்பவேண்டிய நெருக்கடி வரும். "லீலா நான் திரும்ப வருவேன்" என்று சொல்லிவிட்டுப் போவான். கைதாகி சிறையில் இருக்கும் போது, லீலா என்ன என்று புரியும். தவிப்பான் வருண்,

"கண்ண மூடுனா உன்னோட முகம் தெரியிது, உன் சிரிப்பு தெரியுது, உன் மடிஞ்ச காது, உன் உதடு, உன் பெரிய கண்ணு, வெட்கம், கோபம் எல்லாம் தெரியிது. ஆனா, உன் குரல் மட்டும் மறந்து போச்சு. நீ என்ன VCனு கூப்பிடறது கேட்கல, சந்தோஷமா கத்துறது கேக்கல, நீ பாடுறது கேக்கல. உன்னப் பாக்கணும் லீலா. ஒரு தடவ பாக்கணும்"

மீண்டும் லீலாவைப் பார்க்க சிறையில் இருந்து தப்புவான். சிகிச்சைக்குப் பின் லீலாவைப் பார்க்கும் வருண் "என்ன செஞ்சா டாக்டருக்கு என் மேல நம்பிக்கை வரும்?" எனக் கேட்பான். "எழு கடல், எழு மலை தாண்டி வரணும்" என்பாள். கிட்டத்தட்ட அப்படித்தான் தப்பி வருவான் வருண். கடைசியாக தன் ஜென்ம சாபல்யமாக நினைக்கும் லீலாவை, அவளது அன்பை வந்து சேர்கிறான். தான் வேண்டாம் என நினைத்த கரு, மகள் ரோகினியாக நிற்பதைப் பார்த்து கலங்குகிறான். சுபம்.
 
kaatru veliyidai


"என் செல்லக்கிளியே... அழகுராணி எனக் கொஞ்சுவதெல்லாம் ஓவர், லீலா வருண் இடையே இருக்கும் பிரச்சனையை காட்டிய அளவுக்கு, அவர்களுக்குள் ஏன் அப்படி ஒரு காதல் என்பதற்கு படத்தில் எந்த காரணமும் சொல்லப்படவில்லை. அல்லது Destiny என சொல்லப்பட்டிருந்தது" போன்றவை குறைகளாக சொல்லப்பட்டது. இதற்கு சாக்கு சொல்வது கஷ்டம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான். மணிரத்னமே வந்து காரணம் சொன்னாலும் பிடிக்காதுதான். ஆனால், எப்போதுமே பஞ்சாயத்தாய் இருக்கிற ஒரு பிரச்சனை, இன்னும் தாண்டி அது உளவியல் சார்ந்ததும் கூட. ஆண் - பெண்... எடுத்தாலே சிக்கலில் இழுத்துவிடும் பிரச்சனைகளை இத்தனை காதல் சேர்த்து கொடுத்த விதத்தில் 'காற்று வெளியிடை' மறக்க முடியாத அனுபவம்.

மறுபடி அதே கேள்வியைக் கேட்கிறேன், "உங்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா? பிடிக்காதா?"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்