முகப்புகோலிவுட்

கேங்ஸ்டர் சினிமாக்களின் டிரெண்டை மாற்றிய 'புதுப்பேட்டை'! #12YearsOfPudhupettai

  | May 26, 2018 14:02 IST
Dhanush

துனுக்குகள்

  • இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் `புதுப்பேட்டை'
  • தனுஷ், செல்வா, யுவன் என நிறைவான கூட்டணி இணைந்து உருவாக்கிய படம்
  • படம் வெளியாகி இன்றோடு 12 வருடங்களை நிறைவு செய்கிறது
அது 2004ஆம் ஆண்டு – ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’ திரைப்படங்களின் பெரும் வெற்றியை தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருந்தார் இயக்குனர் செல்வராகவன். பல நூறு இளைஞர்களின் முதல் காதல் / பால்ய காதலை நினைவுபடுத்தும் வகையில் இருந்ததாலும், அவர்களது மனதுக்கு நெருக்கமான ஒரு படமாக இருந்ததாலும், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எக்கச்சக்கமாக கொண்டாடப்பட்டது ‘7ஜி ரெயின்போ காலனி’. இத்திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் மெகா ஹிட் ஆன பின், செல்வராகவன் அவர்கள் நடிகர் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது (பின்னர், கைவிடப்பட்டது). அதை தொடர்ந்து, தனுஷ் சோனியா அகர்வால் காயத்ரி ரகுராம் நடிப்பில் ‘ஒரு நாள் ஒரு கனவு’ என்கிற பெயரில் தொடங்கிய செல்வாவின் அடுத்த திரைப்படமும், சில நாட்களிலேயே நின்றுபோனது. சில மாதங்களில், செல்வராகவனின் அடுத்த திரைப்படம் உறுதியானது – தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த ‘புதுப்பேட்டை’ என்கிற கேங்ஸ்டர் திரைப்படம்தான் அது. காதல் படங்கள்தான் செல்வாவின் கோட்டை என அதுவரை நம்பப்பட்டது; அதுவரை ‘ரொமான்ஸ் டிராமா’ தவிர வேறெந்த ஜானரிலும் அவர் படமெடுத்ததில்லை என்பதாலும், ‘புதுப்பேட்டை’ படத்தின் அறிவிப்பே கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தது. ‘Survival of the Fittest’ என்கிற தலைப்பு முதல் பல விஷயங்களில் ஈர்த்த இத்திரைப்படம் வெளியாகி, இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிறது!

கிளாசிக் ‘நாயகன்’, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ‘தளபதி’ மற்றும் ‘பாட்ஷா’ என அதுவரை தமிழ் சினிமாவில் வந்திருந்த கேங்ஸ்டர் படங்களைக் காட்டிலும், ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ரொம்பவே மாறுபட்டு இருந்தது. அதற்கு முன், நாம் பார்த்த கேங்ஸ்டர் ஹீரோக்கள் எல்லோருமே நல்லவர்களாகவும் (நல்லது செய்யும் கெட்டவர்களாகவும்) மட்டுமே இருந்துள்ளனர். கேங்ஸ்டர் படங்களுக்கே உரிய ஃபார்முலாவை தாண்டி, வழக்கமான இலக்கணங்களை உதறிவிட்டு, எடுத்துக்கொண்ட கதையை ரத்தமும் சதையுமாக காட்ட முயற்சித்திருந்தார் செல்வா. ‘புதுப்பேட்டை’ படத்தின் கதாபாத்திரங்களும், நிஜத்தை சமரசப்படுத்திக் கொள்ளாத திரைக்கதையுமே நம் ரசிகர்களுக்கு ரொம்பவே புதிதாக இருந்தது. படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் தன் தந்தை தன்னை கொன்றுவிடுவாரோ என்கிற பயத்தில், தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழிக்கும் ஹீரோவை அதற்கு முன் நாம் பார்த்திருப்போமா? விலைமாதராக நடிக்கும் ஹீரோயினை அதற்கு முன் நாம் பார்த்திருப்போமா? மணி, கிருஷ்ணவேணி, ரவுடி மற்றும் அரசியல்வாதி அன்பு என எந்தவொரு பாத்திரமாக இருந்தாலும், கொக்கி குமாருடனான அவர்களது உறவும் மிகவும் விரிவாக பார்வையாளர்களுக்கு சொல்லப்பட்டது. அமாவாசை (அமைதிப்படை), அரங்கநாதன் (முதல்வன்) மற்றும் செல்வநாயகம் (ஆயுத எழுத்து) என தமிழ் சினிமாவின் பல மறக்கமுடியாத வில்லன் அரசியல்வாதி பாத்திரங்களின் வரிசையில் ஒன்றாக கருத்தப்பட்டது, இப்படத்தில் வரும் தமிழ்செல்வன் கதாபாத்திரம். இப்பாத்திரத்தில் நடித்திருந்த இயக்குனர் அழகம்பெருமாள் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

ஒரு அப்பாவி பள்ளிச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இரக்கமற்ற ரவுடியாக மாறும் கதையே ‘புதுப்பேட்டை’. டைட்டிலில் உள்ளதைப் போல ‘Survival of the Fittest’ என்கிற நியதிக்கேற்றார் போல் ஆட்டை நரியும், நரியை புலியும் வேட்டையாடும் கதை இது.
‘கொக்கி’ குமார், அன்பு, மூர்த்தி, தமிழ்செல்வன் என சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும், புகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரனின் வசனங்களுமே இந்த பூடக நிழல் உலகத்திற்குள் நாம் மூழ்கிப் போக பலமாய் இருந்தது. ‘தொண்டையில ஆபரேஷன்’ என பிச்சையெடுப்பதில் தொடங்கி, ‘நீங்க என்னை உயிரோட விட்டா, நான் உங்களை உயிரோட விடுறேன்’ என கட்சித் தலைவரையே மிரட்டுவது, தன் குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ‘ரொம்ப ஆடக்கூடாதுப்பா… ஆடுனா, இதுதான் கதி’ என கலக்கத்துடன் நகரும் காட்சி வரை எந்தவொரு காட்சியிலும் நம்மால் தனுஷை பார்க்கமுடியவில்லை; படம் முழுக்கவே கொக்கி குமாராகவே நம் மனதில் நிற்குமளவிற்கு வலுவான பாத்திரப் படைப்பும், தனுஷின் யதார்த்த நடிப்பும், அற்புதமான இயக்கமும் பெரிதும் உதவியிருந்தது. தனது கேரியரின் தொடக்கத்திலேயே தன் நடிப்புத்திறனை மொத்தமாக நிரூபிக்கும்படியான இவ்வளவு பிரமாதமான ஒரு வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எல்லா நடிகர்களுக்கும் அமைந்திடாது; அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்தார் தனுஷ். இத்தனை ஒல்லியான நடிகரை அவ்வளவு பெரிய கேங்ஸ்டராக ஏற்றுக்கொள்ள முடிந்ததற்கு காரணமும், குறையே சொல்லமுடியாத இயல்பான நடிப்புதான் என சொல்லலாம். ஆனால், இந்த படத்திற்காக தனுஷிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமே.

எப்படி பார்த்தாலும், எல்லா நிலைகளிலும் ‘கொக்கி’ குமார் ஒரு சந்தர்ப்பவாதி. தன் அன்னையின் ஆசைப்படி, நன்றாக படித்து ஏதோவொரு உத்தியோகத்தில் இருந்திருக்க வேண்டியவன். அவன் அம்மா கொல்லப்பட்டப் பிறகு, வேறு வழியில்லாமல் சாப்பாட்டிற்காக பிச்சையெடுக்க தொடங்குகிறான். ஒரு சந்தர்ப்பத்தில், கஞ்சா விற்கும் கும்பலோடு சேரும் வாய்ப்பு வரும்பொழுது அவன் கொஞ்சமும் தயங்கவில்லை. ‘வாழ்வா சாவா’ என்கிற ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் ஒரு கொலையை செய்வதால், அவன் வாழ்க்கையே தலைகீழாய் மாறுகிறது. சில பல கொலைகளுக்கு பிறகு, மிக பிரபலமான ரவுடியாக மாறுகிறான். ‘கொக்கி’ குமார் எந்தளவிற்கு சந்தர்ப்பவாதி என்றால், எது சரி எது தவறு என்றும் கூட யோசிக்காமல் தனது தொழில் குருவான அன்புவையே போட்டுத்தள்ள துணிபவன் அவன்; தன் நண்பனின் தங்கை சம்மதமில்லாமலே அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டு, அது குறித்து சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல் இருப்பவன். முதலிரவில் தன்னுடன் அவளை படுக்க வைப்பதற்காக, அவளது அண்ணனை கொன்றுவிடுவேன் என மிரட்டவும் தயங்காதவன். ஒரு கட்டத்திற்கு மேல் எதற்காகவும் யாருக்காகவும் பின்வாங்காத ஒருவனாக மாறி, தனது எதிரிகளை எல்லாம் கலைந்தெறியும் ‘கொக்கி’ குமாரின் வீழ்ச்சி தமிழ்செல்வனையே எதிர்க்க துணியும்பொழுது தொடங்குகிறது.

கிருஷ்ணவேணி மற்றும் செல்வியின் கதாபாத்திரங்களும், ‘கொக்கி’ குமாருடனான அவர்களது சிக்கலான உறவும் செல்வராகாவனின் டிரேட்மார்க் ஸ்டைலில் இருந்தது. விபச்சாரியான கிருஷ்ணவேணியை, குமாருக்கு தான் பிச்சையெடுத்த காலத்தில் இருந்தே தெரியும். கொஞ்சம் பிரபலமான ரவுடியான பின்பு அவளை சந்திக்கையில், அவனுக்கு அவளை பிடிக்கிறது. ‘கொக்கி’ குமார் அவளை காதலித்தானா? நிச்சயமாக இல்லை, ஏனெனில் காதலின் அர்த்தமே தெரியாத ஒருவன் அவன். ஒரு கட்டத்தில், பிராத்தல் எனும் நரகத்தில் இருந்து அவளை காப்பாற்ற தன் முதலாளியையே எதிர்க்கவும் துணிகிறான். இதுவே செல்வியின் விவகாரத்தில், அவள் சம்மதமில்லாமல் அவளது பெயர் கூட தெரியாமலே அவளை திருமணம் செய்துகொள்கிறான். அவளை பார்த்த மாத்திரத்திலேயே அவளது அழகில் மயங்கும் ‘கொக்கி’ குமார், அவளை அடைய ஆசைப்படுகிறான். ‘புல் பேசும், பூ பேசும்’ பாடலில் அவனது மனநிலையும், உணர்ச்சிகளும் மிகத் தெளிவாக காட்டப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட அழகான, படித்த ஒரு பெண் தனக்கு மனைவியாக அமைந்ததை எண்ணி சந்தோஷமும் பெருமையும் கொள்கிறான். ஆனால், பின்னர் கிருஷ்ணவேணி கர்ப்பமாக இருப்பதை அறிந்து தன் தவறை உணர்கிறான்; சமூகம் அவளது குழந்தைக்கு ‘தேவிடியா பிள்ளை’ என்கிற பெயரை தந்துவிடும் என பயந்து அவளை திருமணம் செய்து கொள்கிறான். கிருஷ்ணவேணி மீதான தன் காதலை உணர்ந்து, தன் குழந்தையை சுமக்கும் அவளோடு அதிக நேரத்தை செலவிடுகிறான். ஏற்கனவே கோபத்தில் இருக்கும் செல்வி, குமாரின் இரண்டாம் திருமண செய்தியாலும் தனிமையாலும் மேலும் கோபமடைகிறாள். தான் விரும்பிய திருமண வாழ்வை நாசம் செய்தது, முதலிரவில் மிரட்டியது, குமாரின் இரண்டாம் திருமணம், நீதிமன்றத்தில் தான் தப்பிப்பதற்காக அவளை பயன்படுத்தியது என குமார் செய்த எதையுமே மறக்காத அவள், சரியான நேரத்திற்காக காத்திருந்து அவனது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரும்பொழுது அவனுக்கு உதவ மறுக்கிறாள்.

மொத்த படமுமே, சிறையில் இருக்கும் ‘கொக்கி’ குமாரின் ஃபிளாஷ்பேக்காகவே விரிகிறது. செல்வராகவனின் முந்தைய 3 படங்களைப் போல ஒரு சோகமான முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்க, எவரும் எதிர்பாராதவிதமாக இன்றைய அரசியல் சூழலை கிண்டல் செய்யும் விதமாக ஒரு முடிவை வைத்து அசத்தியிருந்தார் செல்வா!

பாலகுமாரன் அவர்களின் எழுத்தில் ஒவ்வொரு வசனமும் ரொம்பவே இயல்பாகவும், காட்சிகளுக்கு பொருந்தும்படியும் இருந்தது. ‘நம்ம உயிர் மேல பயம் இருந்தாதான், அடுத்தவன் உயிரை எடுக்க முடியும்’, ‘இந்த முதல் கொலை ஒருத்தன் பண்றான் பாருங்க, அதான் மேட்டர். அப்படியே ரெண்டு கொம்பு முளைக்கும். அதுக்கப்புறம் அப்படியே வரிசையா கொலை பண்ணிட்டே போகலாம், ஒண்ணும் தெரியாது. நாம நினைக்குறதுதான் நியாயம், நாமதான் கடவுள்’ போன்ற வசனங்கள், தன் குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ‘உயிரோட இருக்கணும் கண்ணு, அதான் முக்கியம்...’ என சொல்லும் வசனம் வரை ஒவ்வொன்றுமே கிளாஸ்!

செல்வாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணாவின் அட்டகாசமான ஒளிப்பதிவு ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் நேர்த்தியான கதை சொல்லலுக்கு இன்னும் பல மடங்கு உதவியது. வெவ்வேறு காட்சிகள் மற்றும் மூடுக்கு ஏற்றாற்போல் மாறுபட்ட கலர் டோன்கள் மற்றும் பிராமதமான ஃபிரேம்களின் உதவியுடன் கதைக்கு நெருக்கமாய் நம்மை இழுத்து சென்றார் அரவிந்த். 10 மிகச்சிறந்த பாடல்களோடு ஒரு அட்டகாசமான ஆல்பத்தை ‘புதுப்பேட்டை’ திரைப்படத்திற்காக கொடுத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா; அவரது கேரியரிலேயே variety மற்றும் experimentation என்கிற அம்சங்களை பொறுத்தவரை, இதுவே மிகச்சிறந்த ஆல்பம் என சொல்லலாம். பின்னணி இசையை பொறுத்தவரையில், படத்தின் உயிர் போல இருந்து ஒவ்வொரு காட்சியையும் வேறு தளத்திற்கு எடுத்து சென்றது. இந்த படத்திற்காக யுவனுக்கு தேசிய விருதே கூட கொடுத்து கௌரவித்திருக்கலாம் என சொல்லுமளவிற்கு சிறப்பானதொரு பணியை செய்திருந்தார்.
 
தமிழ் சினிமாவிலும் சரி, இந்திய சினிமாவிலும் சரி மக்களால் அதிகம் கொண்டாடப்படாத சிறந்த படங்களின் பட்டியலில் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் மிக முக்கிய இடம்பெறும். படம் வெளியான சமயத்தில் mainstream ஆடியன்ஸ் என சொல்லப்படுகின்ற பெரும்பான்மை மக்களிடைய இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. நகரத்து இளைஞர்களால் மட்டும் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம், சாதாரண ரசிகனுக்கான பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்டிருக்கவில்லை என அவர்களால் சொல்லப்பட்டது. ரிலீஸ் சமயத்தில் ரசிகர்கள் கொண்டாடத் தவறிய ‘ஹே ராம்’, ‘அன்பே சிவம்’, ‘கற்றது தமிழ்’, ‘ஆரண்ய காண்டம்’ உள்ளிட்ட எத்தனையோ படங்களின் வரிசையில் ‘புதுப்பேட்டை’ படத்திற்கும் மிகப்பெரிய cult following உண்டு! 2006ஆம் ஆண்டில் வெளியான மிகச்கிறந்த படமாக இருந்தும் கூட, சிறந்த நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என பல விஷயங்களை கொண்டிருந்தும் கூட, இப்படத்திற்கு எந்தவொரு பெரிய விருதுமே கிடைக்கவில்லை என்பது செல்வராகவன் மற்றும் குழுவினரின் துரதிர்ஷ்டம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்!

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்