முகப்புகோலிவுட்

15 Years of ‘ஆறுச்சாமி’

  | May 01, 2018 08:54 IST
Saamy

துனுக்குகள்

  • விக்ரம் நடித்ததிலேயே மிகச்சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம் என ‘சாமி’
  • விக்ரம் மட்டுமல்ல, த்ரிஷாவின் கேரியரிலும் மிக முக்கியமான திரைப்படம்
  • இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சாமி square’ என்கிற பெயரில் தயாராகி வருகிறது
‘தில்’, ‘தூள்’, ‘ஜெமினி’ என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களாக ‘சீயான்’ விக்ரம் நடித்து வந்த நேரம் அது. அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ விஜய்யா? அஜீத்தா? என்கிற கேள்வியே மாறுமளவிற்கு அடுத்தடுத்து ‘ஆல் சென்டர்’ ஹிட் படங்களாக கொடுத்து ‘சீயான்’ அசத்திக் கொண்டிருந்த நேரத்தில் மற்றொரு மெகா ஹிட் படமாக அமைந்ததுதான் இயக்குனர் ஹரியின் ‘சாமி’! படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் ‘நான் எத்தனையோ போலீஸ் படம் நடிச்சிருக்கேன். ஆனா, எனக்கு இப்படியொரு போலீஸ் படம் அமையலையேன்னு தோணுது’ என தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி ரஜினிகாந்த் அவர்களையே சொல்லவைத்த ‘சாமி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது.
vikram saamy

விக்ரம் நடித்ததிலேயே மிகச்சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம் என ‘சாமி’ திரைப்படத்தை தாரளமாக சொல்லலாம். படம் ஆரம்பித்த நொடியிலிருந்து, கிளைமாக்ஸ் வரை மொத்த இரண்டே முக்கால் மணிநேரமும் பரபரவென நகரும் படுவேகமான திரைக்கதையில் ரசிகர்களை கட்டிப் போட்டார் இயக்குனர் ஹரி. அந்த காலகட்டத்தில் வேகமாக நகரும் திரைக்கதைகளுக்கெல்லாம் இலக்கணமாகவும், முன்னோடியாகவும் இருந்தது இயக்குனர்கள் ஹரி மற்றும் தரணியின் படங்கள் என்றே சொல்லலாம்.

மஃப்டியில் வந்து நோட்டம் விடுவது போன்ற காட்சிகளும், வில்லனை ஏமாற்றி நல்லது செய்யும் கதையும் அதற்கு முன்னதாகவே சில படங்களில் வந்திருந்தாலும் கூட, காட்சிப்படுத்திய விதத்திலும் ஹீரோவின் குணாதிசியம் புத்திசாலித்தனம் மற்றும் திட்டமிடுதல் மூலமும் அது வரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புதிய, பவர்ஃபுல்லான போலீஸை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் ஹரி.
 
vikram saamy

‘காசு வாங்காமலே காசு வாங்குனேன்னு பழி வந்துச்சுல்ல... இனிமே காசு வாங்கிட்டு நல்லது பண்ணு’ என சொல்லும் தந்தையின் வார்த்தைகளில் தொடங்கி, ‘கார் ஆக்ஸிடெண்ட்ல குற்றவாளியை தப்பிக்க விட்ருவீங்க, செத்தவன் குடும்பத்துக்கு எவன்யா சோறு போடுறது?’ என கேட்கும் அணுகுமுறை என ஒவ்வொரு விஷயத்திலும் ஆறுச்சாமி இதற்கு முன் நாம் பார்த்த போலீஸ் ஹீரோக்களை விட ரொம்பவே வித்தியாசமாக இருந்தான்.

ரவுடியைப் போல நடித்து பின்னர் தான் போலீஸ் என்கிற உண்மையை சொல்வது, துணை ஆணையராக பொறுப்பேற்கையில் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிப்பதில் தொடங்கி படம் நெடுக ஒவ்வொரு காட்சியிலும் சாமியின் ஹீரோயிசம் வேகம் கூட்டியது. ஆயுதம் ஏந்தி வரும் சாதிக் கலவரக்காரர்களிடம் ஆயுதத்துடனே பேசுவது, ‘பெருமாள் பிச்சைங்கிற ஒருத்தருக்கு மட்டுந்தான் மரியாதை’ என சீறுவது, ‘உன் திமிரோட அளவை நீ காட்டிட்ட, என் திமிரோட அளவை நான் காட்டுறேன்... கிங்மேக்கர் பெருமாள் பிச்சையை ஒரே வாரத்துல வெறும் பிச்சையாக்குறேன்’ என சவால் விடுவது, ‘பொண்ணு தளதளன்னு இருந்ததால தொட்டுட்டான்னு சொன்னேல்ல... இப்போ பாரு, நீ தொடாமலே உன்னை உள்ளே தூக்கி போட்டுட்டேன்.. இதான் சாமி ஸ்டைல்’ என எம்.எல்.ஏ.வை கைது செய்வது ‘எம்.எல்.ஏ செல்வத்துக்கு ஒண்ணுமில்ல, அவர் காரைதான் காப்பாத்த முடியல’ என காரை கொளுத்துவது, ‘close பண்ண முடியாத சில ஃபைல்ஸை இப்படி கும்பல்லதான் close பண்ணனும்’ என வில்லன் கும்பல் நடத்தும் ஊர்வலத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்புவது, அண்ணாச்சி முன்னாடி கைநீட்டி பேசக்கூடாது என சொன்னதும் வேண்டுமென்றே தெனாவெட்டாக காலை முகத்தின் முன் நீட்டி பேசுவது என எல்லா சூழ்நிலையையும் ரொம்பவே கூலாக நிதானமாக எதிர்கொள்ளும் ஆறுச்சாமியாக விக்ரம் பட்டையை கிளப்பியிருந்தார். ‘ஊரு பழனின்னு சொன்னீய… ஜாதி என்னன்னு சொன்னீய?’ என கேட்கையில் ‘நான் சொல்லலையே...’ என சிரித்துக்கொண்டே செல்வது, ‘நான் குரைக்குற ஜாதி இல்ல, கடிக்குற ஜாதி’ போன்ற வசனங்களும் ரசிக்கும்படி இருந்தது.
 
vikram saamy

விக்ரம் மட்டுமல்ல, த்ரிஷாவின் கேரியரிலும் ‘சாமி’ மிக முக்கியமான திரைப்படம்; ஹீரோயினாக அவரது முதல் ஹிட் படம் இதுவே. மூடநம்பிக்கைகள், தீண்டாமை, சாதிய படிநிலையை எல்லாம் பகடி செய்யும் விவேக்கின் காமெடி காட்சிகளும் பெரிதளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டைட்டில் போடும்பொழுது வரும் ‘சாமி’ தீம் மியூசிக், படம் முழுக்க வரும் ஒவ்வொரு இடத்திலுமே மயிர்க்கூச்சரிய செய்யும். இப்படத்தின் இரண்டாம் ஹீரோ என்றே சொல்லுமளவிற்கு இசையில் பிரமாதப்படுத்தியிருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்; ‘திருநெல்வேலி அல்வாடா’ ஹீரோ அறிமுகப் பாடல், ஊரை பிரிந்து செல்லும் இளைஞனின் உணர்வுகளை செல்லும் ‘வேப்பமரம்’ பாடல், ‘பிடிச்சிருக்கு’ ‘இதுதானா’ என அழகான மெலடி பாடல்கள், ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ என பக்கா லோக்கல் குத்துப்பாட்டு என செம்ம வெரைட்டியான ஆல்பமாக கொடுத்திருந்தார் ஹாரிஸ்.
போலீஸ் படங்களில் ‘சாமி’ எந்தளவிற்கு ஒரு பெரிய டிரெண்ட்செட்டர் என்றால் ஆறுச்சாமி கதாபாத்திரத்தையும், இப்படத்தின் காட்சிகளையும் வைத்து கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 20, 30 படங்களாவது வந்திருக்கும் என்றே சொல்லலாம். தமிழில் ‘மருதமலை’, ‘வேட்டை’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் இப்படத்தின் தாக்கம் நிறையவே தெரியும்.
 
vikram saamy

தற்பொழுது விக்ரம்-ஹரி கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சாமி square’ என்கிற பெயரில் தயாராகி வருகிறது. அதாவது, பெருமாள் பிச்சை இறந்து 25 ஆண்டுகள் கழித்து நடக்கும் கதையாக, பெருமாள் பிச்சையின் 3 மகன்களோடு ஆறுச்சாமியும் அவரது மகன் ராமசாமியும் மோதுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. விக்ரமிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், த்ரிஷாவிற்கு பதிலாக சதாவும் நடித்து வரும் இத்திரைப்படம் பெயரில் மட்டுமல்லாமல் படமாகவும் முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!


 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்