முகப்புகோலிவுட்

காதலே இல்லாத காதல் திரைப்படம் 'காதலும் கடந்து போகும்’!

  | March 11, 2018 16:12 IST
Kadhalum Kadandhu Pogum

துனுக்குகள்

  • இத்திரைப்படம் வெளியாகி, இன்றோடு 2 ஆண்டுகள் ஆகிறது
  • கதிர் ஒரு அடியாள், இருப்பினும் மிகவும் நல்லவன்
  • தமிழ் சினிமாவின் மிக அழகான ரொமான்டிக் காமெடி திரைப்படங்களில் ஒன்று
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள எத்தனையோ சுவாரஸ்யமான காதல் திரைப்படங்களில், சற்றே வித்தியாசமான ஒரு திரைப்படம் ‘காதலும் கடந்து போகும்’. இத்திரைப்படம் வெளியாகி, இன்றோடு 2 ஆண்டுகள் ஆகிறது.

கடந்த சில ஆண்டுகளில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பையும் அவர்கள் பழகும் விதத்தையும் இவ்வளவு அழகாக காட்டிய திரைப்படம் வேறெதுவும் இல்லை என்றே சொல்லலாம். வழக்கமான ரொமான்டிக் காமெடி திரைப்படங்களின் பாணியில் இருந்து மாறுபட்டு, ரொம்பவே தனித்துவமான ஒரு நடையைக் கொண்டிருந்த படம் இது. ‘காதலே இல்லாத காதல்’ திரைப்படம் என்று கூட சொல்லலாம். ரிலீஸ் ஆன சமயத்தில், வணிகரீதியாக பெரிய வெற்றி பெறாவிடினும் கூட ரசிகர்களிடையே ஒரு cult film ஆக பெரும் மரியாதையை பெற்றிருக்கிறது இத்திரைப்படம். இப்படம் இவ்வளவு ஸ்பெஷலாக அணுகப்பட காரணம், இப்படத்தில் வரும் கதிர் மற்றும் யாழினியின் பாத்திர படைப்பும், அப்பாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் மடோனாவின் அருமையான நடிப்புமே ஆகும்.

கதிர் ஒரு அடியாள், இருப்பினும் மிகவும் நல்லவன். அவன் சில ஆண்டுகள் ஜெயிலுக்கு சென்றது, ஒரு ரவுடிகள் கும்பலின் தலைவன் ஆவதற்காக அல்ல; தான் செய்யாத ஒரு தப்பினை ஒப்புக்கொண்டு சரணடைந்தால், அவன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என சொல்லப்பட்ட வாக்குறுதிக்காக மட்டுமே அப்படி செய்தான். அது மட்டுமல்ல, கதிர் எப்பொழுதுமே நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென நினைப்பவன். சூப்பர் மார்க்கெட்டில் திருடும் சிறுவர்களை போலீசில் பிடித்து தர வேண்டாம் என சொல்லும் அவனே, வெளியில் வந்து அந்த சிறுவர்கள் பேசும் விதத்தைப் பார்த்து அவர்களை அடிக்கிறான். இறுதியில் கொலைப் பழியை ஏற்க தன்னுடன் வரும் முரளியை, வேறு வேலைக்கு போகச் சொல்லி திட்டி அனுப்புகிறான். ஒரு ரவுடியாக வாழ்க்கையை தொடர்வதில் அவனுக்கு விருப்பமில்லை, கட்டாயத்தின் பேரில் மட்டுமே அதை செய்து வருகிறான். ஒரு மதுபானக்கடைக்கு ஓனராகி, எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பது மட்டுமே அவனது ஆசை.
யாழினி சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டுமென நினைக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். விழுப்புரத்தில் பிறந்து, விழுப்புரத்திலேயே வேலை பார்த்து, விழுப்புரத்திலேயே சாகும் வாழ்க்கையை விரும்பாதவள். பெற்றோரின் பேச்சை மீறி சென்னைக்கு தனியாக வந்து, வேலையை இழந்து, தன் வாழ்க்கையில் ஒரு மோசமான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறாள்.

மொத்த படமுமே, இந்த இருவரின் மோதல்களையும் நட்பையும் சுற்றியே நகர்கிறது. அடுத்தடுத்த வீடுகளில் இருக்கும் இந்த இருவருக்கும், அவ்வளவு பெரிய சென்னை மாநகரத்தில் சொந்தம் என்றோ நண்பர்கள் என்றோ யாரும் இல்லை; இவர்களுக்காக வருந்தவோ ஆறுதல் சொல்லவோ எவருமே இல்லை. இருவருக்குள்ளும் ஆரம்பத்திலிருந்தே சரிப்பட்டு வரவில்லையென்றாலும் கூட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்கிறார்கள். கதிருக்கு அவள் நிறைய அக்கறை இருக்கிறது, யாழினிக்கும் அவன் மீது சின்ன மரியாதை உண்டு; ஆனால் இருவருமே அதை எப்பொழுதுமே நேரடியாக காட்டிக்கொள்வதில்லை.

‘எக்ஸ்ட்ரா 100 ரூபா கேட்டாங்க’ என யாழினி சொல்ல, ‘அப்போ, நீயே தூக்கு’ என கதிர் நக்கலடிப்பதில் தொடங்கும் அவர்களது அறிமுகம், அடுத்த காட்சியில் ‘உனக்கு வேலை கிடைக்காதது, உன் தப்பில்ல’ என சொல்வதில் தொடர்கிறது. கதிர் ஒரு அடியாள் என தெரிந்ததும், அவனைப் பார்த்து பயந்து, தன் பாதுகாப்பிற்காக பெப்பர் ஸ்ப்ரே ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்கிறாள். தன் குடையை தன்னை கேட்காமல் எடுத்து சென்றதாலும் வேறு சில சம்பவத்தாலும் ‘எதிர்வீட்டுல ரவுடி இருக்கான்’ என சொல்லி வீட்டை காலி செய்ய நினைக்கும் அவள், தன்னை மருத்துவமனையில் கொண்டு வந்தது சேர்த்தது, தனக்காக மழையில் நனைந்து சென்று குடை வாங்கி வருவது போன்ற சம்பவங்களால் கதிரை நம்ப தொடங்குகிறாள். யாழினியிடம் தப்பாக நடந்துகொள்ள முயன்ற மேனேஜரை அடிப்பது, அவளுக்காக அவளது பெற்றோரிடம் நடிப்பது, இன்டர்வியூவிற்கு வர சொல்லி திட்டுவது, அந்த இன்டர்வியூவிற்கு யாழினி வரவேண்டுமென்பதற்காக அந்த ஆஃபிஸிற்கு சென்று பிரச்சினை பண்ணுவது என தொடர்ந்து யாழினிக்காக பல உதவிகள் செய்கிறான் கதிர். நடுநடுவே யாழினி சரக்கடித்துவிட்டு புலம்புவது, கதிரை ‘எஸ்கிமோ நாய்’ என சொல்வது, இருவரும் கோவில் குளத்தருகே அமர்ந்து பேசுவது என சில அழகான, காமெடியான காட்சிகளும் உண்டு.

‘நான் ஆசைப்படுறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான், நான் இப்போ எப்படியிருக்கேன் எப்படி வாழ்றேன்னு காட்டணும். இந்த உலகத்துலேயே நீதான் அதை பார்த்து அதிக சந்தோஷப்படுவன்னு நினைக்குறேன்’ என சொல்லும் யாழினியின் அந்த கனவு காட்சியும், கடைசியில் வரும் அந்த பெட்ரோல் பங்க் காட்சியுமே ஒரு அழகிய கவிதையைப் போல படமாக்கப்பட்டிருக்கும்.

இந்த எல்லா காட்சிகளுக்கிடையேயும், கதிரும் யாழினியும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் அல்லது வழக்கமான திரைப்படங்களில் இருப்பதைப் போல ஏதாவது சினிமாத்தனமாக செய்வார்கள் என ரசிகர்களாகிய நாம் எதிர்பார்க்கையில் எல்லாம், அப்படி ஏதும் இல்லாமல் கடைசி வரை மிகவும் யதார்த்தமாகாவே நகர்கிறது ‘காதலும் கடந்து போகும்’ (ஒரு வேளை, அதனால்தானோ என்னவோ படம் வெளியான சமயத்தில் பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காமல் போய்விட்டது). இப்படம் முழுக்கவே ‘ரொமான்ஸ்’ என்கிற ஒரு விஷயமே இருக்காது. ஒரு டூயட் பாடலோ, முத்தக்காட்சியோ அல்லது படத்தின் இறுதி வரை எந்த காதல் வசனமுமே இல்லாத ஒரு திரைப்படம் இது. எல்லா காட்சியிலும் கதிர் அவளை ‘ஏய், பக்கத்து வூட்டு பொண்ணு’ என்று மட்டுமே அழைப்பான், யாழினியும் இவனை ‘சார்’ என்றே அழைப்பாள்.

தமிழ் சினிமாவின் மிக அழகான இயல்பான ரொமான்டிக் காமெடி திரைப்படங்களில் ஒன்றாக, என்றுமே 'காதலும் கடந்து போகும்’ நினைவில் கொள்ளப்படும்!

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்