முகப்புகோலிவுட்

காலம் கடந்து நிற்கும் 'தேவர் மகன்' - வெள்ளி விழா ஆண்டு சிறப்பு கட்டுரை

  | October 25, 2017 09:11 IST
Kamal Haasan  Films

துனுக்குகள்

  • மக்களால் எப்பொழுதுமே கொண்டாடப்படும் இரு படங்கள் தேவர் மகன், நாயகன்
  • தேவர் மகன் கதையை வெறும் ஏழு நாட்களில் எழுதி முடித்தார் கமல்ஹாசன்
  • வடிவேலு அவர்களின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம்
'உலக நாயகன்' கமல்ஹாசன் அவர்களது நடிப்பிலும், எழுத்திலும் 'ஹே ராம்', 'மகாநதி', 'அன்பே சிவம்', 'குணா', 'ஆளவந்தான்', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'அபூர்வ சகோதரர்கள்', 'சலங்கை ஒலி', 'சிப்பிக்குள் முத்து', 'மூன்றாம் பிறை', 'வேட்டையாடு விளையாடு', 'குருதிப் புனல்', 'அவ்வை சண்முகி', 'இந்தியன்', 'சதி லீலாவதி', 'தசாவதாரம்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'விஸ்வரூபம்', 'சத்யா', 'வறுமையின் நிறம் சிகப்பு' என எத்தனையோ நல்ல திரைப்படங்களும் எண்டர்டைனர்களும் இருந்தாலும் கூட, பெரும்பான்மையான மக்களால் எப்பொழுதுமே கொண்டாடப்படும் இரண்டு கமல் திரைப்படங்கள் - 'நாயகன்' மற்றும் 'தேவர் மகன்'.

இந்த இரண்டு திரைப்படத்திற்குமே உள்ள ஒரு முக்கியமான ஒற்றுமை - இரண்டு படங்களிலுமே 'தி காட்ஃபாதர்' அமெரிக்க படத்தின் சாயல் இருக்கும்; மணிரத்னம்-கமல் இருவருமே தாங்கள் 'தி காட்ஃபாதர்' திரைப்படத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும் அந்த படத்தின் தாக்கமே தங்கள் படம் உருவாக காரணமாக இருந்தது என்றும் வெளிப்படையாகவே நேர்காணல்களில் கூறியிருக்கின்றனர். கமல் அவர்களின் சினிமா கேரியரில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே மிக சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கருதப்படும் 'தேவர் மகன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றது.

1980களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முக்தா சீனிவாசன், 'தி காட்ஃபாதர்' திரைப்படத்தை தழுவி கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து ஒரு படம் இயக்க நினைத்தார். ஆனால், அப்படி எடுத்தால் அது சிவாஜி கணேசனுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் படமாக போய்விடும் என பலரும் யோசனை சொன்னதால் அந்த எண்ணம் அப்படியே கைவிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின், கமல் அவர்கள் 'தி காட்ஃபாதர்' திரைப்படத்தில் இன்ஸ்பயர் ஆகி 'தேவர் மகன்' கதையை 7 நாட்களில் எழுதி முடித்தார். ஒரு சின்ன குடும்ப பிரச்சினையால் இரண்டு கிராமங்களுக்கிடையே கலவரம் வெடிக்கும் கதையை மையமாக கொண்ட 'காடு' என்கிற கன்னட திரைப்படமும் இக்கதையை எழுத உந்தியதாக கூறியிருக்கிறார் கமல். தனக்கு டைரக்ஷனில் முன் அனுபவம் இல்லை என்கிற காரணத்தாலும், தானே திரைக்கதை, வசனம் எழுதிய அந்த ஸ்க்ரிப்ட்டை கெடுத்துவிடக்கூடாது என்கிற பயத்திலும் மலையாள இயக்குனர் பரதன் அவர்களை இயக்கச் சொல்லி கேட்டார். இக்கதையை எழுதுகையில் நடுவிலேயே குழம்பி நின்றபொழுது 'ஒரு கோவிலுக்கு இரண்டு பூட்டு' என சில கிராமங்களில் நடக்கும் வழக்கத்தைக் கூறி, அவருக்கு எழுத்தாளர் கலைஞானம் உதவினார்.
தன் கிராமத்தில் தன்னை சுற்றி நடக்கும் எதுவுமே பிடிக்காத ஒருவன், சூழ்நிலை காரணமாக தன் தந்தையின் அரியணையிலேயே அமர்வது தான் இப்படத்தின் மையக்கதை. லண்டனில் படித்து முடித்து தன் காதலியுடன் கிராமம் திரும்பும் சக்திவேலுக்கு, தன் சித்தப்பா குடும்பத்திற்கு தங்கள் மீதுள்ள வன்மம், இரண்டு கும்பல்களாக பிரிந்து கிடக்கும் ஊர் மக்கள், தன் மக்களின் வன்முறை வெறி என அந்த கிராமத்தில் நடக்கும் எதுவுமே புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் சக்திவேல் விளையாட்டாக செய்யும் ஒரு காரியத்தால், ஊரே பற்றி எரிகிறது. அடுத்தடுத்த சம்பவங்கள் மூலம் பிரச்சினைகள் இன்னும் தீவிரமடைய, அவனது தந்தையும் இறந்துவிட, சக்திவேல் தனது ஊர் மக்களுக்கெல்லாம் தலைமை ஏற்று நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். ஒவ்வொரு பிரச்சினையின் பொழுதும் அமைதி காத்து 'வன்முறைக்கு வன்முறை தீர்வு ஆகாது' என அறிவுறுத்தும் அவனே, இறுதியில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னையுமறியாமல் வன்முறையை கையில் எடுக்கும்படி ஆகிறது.

படம் தொடங்கும் முதல் காட்சியிலிருந்தே, கதை தொடங்கிவிடுகிறது. தன் படிப்பை முடித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்பும் சக்திவேல் மற்றும் பானுமதியின் கண்கள் வழியாகவே, நாமும் அந்த ஊரையும், மனிதர்களையும் பற்றி காண்கிறோம். படத்தின் முதல் பாடலிலேயே பெரியத் தேவர் பற்றியும், ஊர் மக்கள் பற்றியும் அந்த சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கை பற்றியும் விரிவாக காட்டப்படுகிறது. முதல் அரைமணி நேரத்தில் கோவில் பூட்டு உடைக்கப்படும் காட்சியியிலிருந்தே, படம் ரொம்ப சீரியஸ் ஆகி வேகமெடுக்கிறது. அதன் பின், சில நிமிடங்களிலேயே இசக்கியை மருத்துவமனையில் சந்திக்கும் காட்சியிலும், தேவரும் அவர் மகனும் பேசிக்கொள்ளும் காட்சியிலுமே கதையும் முக்கிய கதாபாத்திரங்களும் ஆழமாக விவரிக்கப்படுகின்றன. அடுத்தடுத்த காட்சிகளிலும், கமல்ஹாசனின் எழுத்து ஆளுமையும் இயக்குனர் பரதனின் ஆற்றலும் மிளிர்கிறது.

'தேவர் மகன்' படத்தின் மிகப்பெரிய பலம் - படம் பார்க்கும் ரசிகனுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு வலுவான பாத்திரப்படைப்புகளும், அதற்கு பக்கபலமாக இருந்த நடிகர் தேர்வும் தான். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்கள் இருவருமே ஒரே படத்தில் அப்பா மகனாக போட்டி போட்டு நடிக்கும் ஒரு படத்தை பார்ப்பது, ரசிகர்களுக்கு பெரும் விருந்தன்றி வேறென்ன! கமலின் காதலியாக நடித்த கெளதமி, மனைவியாக நடித்த ரேவதி (இப்படத்திற்காக தேசிய விருதும் வென்றார்), மாயத் தேவனாக நடித்த நாசர் ஆகியோரை எல்லாம் தாண்டி மாயனின் அப்பா சின்னத் தேவராக நடித்த காக்கா ராதாகிருஷ்ணன், மாயனின் அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி, கணக்குப் பிள்ளையாக நடித்த சங்கிலி முருகன் உட்பட எல்லோருமே நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார்கள். அது வரை, கவுண்டமணி-செந்தில் காமெடிகளில் சின்ன சின்ன வேடங்களில் தோன்றிய வடிவேலு இந்த படத்தில் 'இசக்கி' கதாபாத்திரம் மூலம் ஒரு நடிகனாக மக்களால் அடையாளம் காணப்பட்டார். வடிவேலுவின் கேரியரில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த திரைப்படம் என்றே இப்படத்தை சொல்லலாம், அதுவே நடிகர் நாசருக்கும் பொருந்தும். அதற்கு முன் பல படங்களில் தோன்றியிருந்தாலும், 'நாயகன்', 'சத்யா', 'உன்னால் முடியும் தம்பி', 'மைக்கேல் மதன காமராஜன்', 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற கமல் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் 'மாயத் தேவன்' என்கிற திமிரான வில்லன் வேடமே அவரது சினிமா வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது என சொல்லலாம். ஒரேயொரு காட்சியில் தோன்றும் காந்திமதி கூட நிறைவாக நடித்திருப்பார். கதையின் ஓட்டத்திற்கு தூண் போல தோள் கொடுத்திருந்தன பி.சி.ஸ்ரீராம் அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவும், இளையராஜா அவர்களின் மறக்கமுடியாத பாடல்களும் பின்னணி இசையும். 'இஞ்சி இடுப்பழகி'யும், 'சாந்து பொட்டு'ம் 'போற்றி பாடடி பெண்ணே'வும் இன்னும் பல தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படும் அளவிற்கு ராஜா அவர்களின் மிகச்சிறந்த ஆல்பங்களில் ஒன்று 'தேவர் மகன்'.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் 'தேவர் மகன்' இவ்வளவு ஸ்பெஷலான திரைப்படமாக கொண்டாடப்பட முக்கிய காரணம், இப்படத்தின் திரைக்கதையும், காட்சியமைப்பும், பல உணர்வுப்பூர்வமான கணங்களுமே. உதாரணத்திற்கு, சக்திவேல் தனது கிராமத்தின் உண்மையான நிலையை உணரும் வாய்க்கால் உடையும் காட்சியையும், ஊருக்கு போகவில்லை என டிக்கெட்டை கேன்சல் செய்ய சொல்லும் காட்சியையும் சொல்லலாம்; குடிசைகளை நீர் வெள்ளம் மூழ்கடித்த இடத்தில் தன் ஷூவை கழற்றியெறிந்து சேற்றில் இறங்கி இறந்து போன குழந்தையைப் பார்த்து கமல் அழுகும் காட்சியை சொல்லலாம். 'நான் இந்த ஊரைவிட்டு போறேன்ய்யா' என சிவாஜியிடம் கமல் சொல்ல, 'விதை போட்டதும், பழம் சாப்பிடலாம்ன்னு நெனைக்கலாமோ' என சிவாஜி பேசும் அந்த 5 நிமிட காட்சி தமிழ் சினிமாவின் மிக பிரமாதமான காட்சிகளில் ஒன்று. இரண்டாம் பாதியில் வரும் இரண்டு காதல் காட்சிகளும் ரொம்பவே ரசனையானவை. சூழ்நிலைக் கைதியான தன் நிலைமையை கௌதமியிடம் எப்படி சொல்லி புரிய வைப்பதென தெரியாமல் கமல் பரிதவித்து 'இதுவும் நிஜம், நான் உன்னை காதலிக்கிறதும் நிஜம்... ஆனா இதுல ஏதாவது ஒண்ணு பொய் ஆகணும், பானு' என சொல்லும் அந்த காட்சி அவ்வளவு முதிர்ச்சியுடன் கையாளப்பட்டிருக்கும். அதற்கு சில காட்சிகளுக்கு பின் 'மறக்க மனம் கூடுதில்லையே' என கமல் பாட, 'மறந்துடுவேன்னு சொன்னீயளே' என அப்பாவியாக ரேவதி கேட்க 'நான் இப்போ சொன்னது உன்னை' என்பது போல சமிக்ஞை காட்டி 'இனி என் வாழ்க்கையில நீ மட்டும்தான்' என உறுதியளிக்கும் இடத்தில் வரும் 'இஞ்சி இடுப்பழகி' பாடலே கொள்ளை அழகாக இருக்கும்.

இப்படத்தில் வரும் ஊர் பிரச்சினை, வன்முறை, கலவரம் எல்லாவற்றையும் தாண்டி 'தேவர் மகன்' ஒரு தந்தை மகன் இடையிலான அன்பையும் பிரதானமாக பேசுகிறது. படம் முழுக்க எங்குமே கமலோ, சிவாஜி கணேசனோ நமது கண்களுக்கு தெரியவில்லை; சக்திவேலையும் பெரிய தேவரையும் மட்டுமே பார்க்கிறோம். கெளதமியை முதன்முதலில் பார்த்த மாத்திரத்திலேயே பார்வையிலேயே தனது மறுப்பை தெரிவிப்பது, 'அவங்க அப்பாவுக்கு எல்லாம் தெரியுமா? இந்த பொண்ணு இங்கே வந்திருக்குன்னு தெரியுமா? நல்ல குடும்பம்' என நக்கலடிப்பது, 'களத்தூர் வழியா போங்க... அவுகதான் சொல்றாகள்ல, கேட்டா உங்க கௌரவம் கொறைஞ்சிடுமோ?' என சட்டென கோபிப்பது, 'நான் என்னைக்காவது உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருப்பேனா? என் பிள்ளையை பக்கத்துலேயே வெச்சு பார்த்துக்கணும்ன்னு ஆசை இருக்காதா?' என தன் மகனிடம் மனமுருகி பேசுவது, 'பாத்தியா, ஒரு பிள்ளையை பறிகொடுத்தவ.. எதுக்கு சாப்பிடுறா? இன்னொரு பிள்ளையை காப்பாத்த.. மத்தவங்களைக் காப்பாத்தணும்ன்னா, நாம மொதல்ல தெம்பா இருக்கணும்' என சோகத்தில் இருக்கும் தன் மகனை தேற்றுவது, மகன் ஊருக்குப் போகவில்லை என்றதும் குழந்தையைப் போல துள்ளி உற்சாகமடைவது, பஞ்சாயத்தில் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் 'நீ போய் உன் ஓட்டல் பொழைப்பைப் பாருப்பா, இவனுங்களையும் கூட சேர்த்துக்கோ... முடிஞ்சா, எனக்கும் கூட ஏதாவது ஒரு வேலை போட்டுக்குடு' என வெம்பி வேதனையில் பேசுவது என முதல் பாதி முழுக்க நடிப்பின் சிகரமாய் ஆட்சி செய்திருப்பார் 'செவாலியே' சிவாஜி கணேசன். தந்தையின் மரணத்திற்கு பிறகு அவர் ஆசைப்பட்டபடியே அவரது இடத்தை சக்திவேல் எடுத்துக்கொள்ளும் இடைவேளை காட்சி, ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் புல்லரிக்க செய்திடும்.

1992ஆம் ஆண்டு வெளியான 'தேவர் மகன்' திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. படம் வெளியான புதிதில் முதல் பாதியில் கமல்ஹாசன் வைத்திருக்கும் ஃபங்க் ஹேர்ஸ்டைலும், இரண்டாம் பாதியில் வரும் முறுக்கு மீசையும் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது; அடுத்த 3, 4 ஆண்டுகள் ஃபங்க் ஹேர்ஸ்டைல் மிகப்பெரிய ட்ரெண்டாக இருந்தது. கெளதம் மேனன், செல்வராகவன், ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா உட்பட எத்தனையோ முன்னணி இயக்குனர்கள் தங்களது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக 'தேவர் மகன்' திரைப்படத்தை குறிப்பிட்டுள்ளனர். 'சண்டைக்கோழி' படத்தில் வரும் ராஜ்கிரணின் கதாபாத்திரம் உட்பட பல வெற்றி திரைப்படங்களில் 'தேவர் மகன்' படத்தின் சாயல் நிறையவே காணப்பட்டதுண்டு.

இத்தனை பெருமைகளைத் தாண்டி, 'தேவர் மகன்' திரைப்படம் ஒரு சாதிய திரைப்படம் எனவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி மட்டும் பெருமையாக பேசி மறைமுகமாக வன்முறையை மகிமைப்படுத்துகிறது என்றும், படம் வந்த புதிதில் தென் தமிழகத்தில் சில இடங்களில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்தது எனவும், இப்படத்தின் ரிலீஸிற்கு பின் கீழ்சாதியினர் மீதான வெறுப்பும் தீண்டாமையும் இன்னும் அதிகமாயிற்று எனவும் பல குற்றச்சாட்டுகள் உண்டு. மதுரை அல்லது தென்தமிழகம் என்றாலே அரிவாள் கலாச்சாரமும் வன்முறையுமே மேலோங்கி இருக்கும் எனும் பிம்பத்தை திரையில் கொண்டுவந்த முதல் படம் இது என்றும், நேரடியாகவே சாதி பெருமை பேசும் பல வசனங்களைக் கொண்டிருந்த திரைப்படம் என்றும், கிளைமாக்ஸில் 'வன்முறை தவறு' என்கிற கருத்தை வலியுறுத்தினாலும் படம் முழுக்க ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வன்முறை கலாச்சாரத்தை பெருமை பேசியதாகவும் பல எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இன்று வரை விமர்சிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது என்பதும் உண்மையே. இந்த படத்திலும் சரி, 'விருமாண்டி' படத்திலும் சரி கமல்ஹாசன் அவர்கள் இரு சாதிகளுக்கிடையேயான பிரச்சினைகளைக் காட்ட நினைத்து, அது பெரும் சர்ச்சைக்குள்ளாகலாம் அல்லது படம் தோல்வியைத் தழுவ நேரிடும் என நினைத்தே ஒரு படத்தில் பங்காளி சண்டையாகவும், இன்னொரு படத்தில் இரண்டு ஊர்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சினையாகவும் காட்டியதைப் போலவே தெரியும். 'தேவர் மகன்' படத்தின் முதல் ஃபிரேமிலேயே பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் புகைப்படத்தைக் காட்டுவது, 'பெரிய கள்ளர் அய்யா நீர்..' என வக்கீல் சொல்ல, 'நான் மறவன்' என நாசர் கர்வம் பொங்க பதிலளிப்பது, 'ஆந்திராவுல ராஜுன்னு ஒரு ஜாதிய்யா.. தேவருக்கு நிகரான உயர்ந்த ஜாதி' என கெளதமி பற்றி கமல் சொல்வது, 'அடிக்கு அடி குடுக்கலைன்னா, அப்புறம் என்னய்யா தேவன்', 'தேவனுக்கு வாக்குதான் முக்கியம்' 'தேவனா கொக்கா' என படம் முழுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் சாதிப் பெருமை பேசும் பல வசனங்களும் 'போற்றிப்பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே', 'தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம் தான், முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான்…', 'வானம் தொட்டு போனா, மானமுள்ள சாமி.. தேம்புதையா பாவம், தேவர்களின் பூமி' என பாடல் வரிகளும் நிறையவே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இது அந்த வட்டார மக்களிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கமல்ஹாசன் அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்று வரை உசிலம்பட்டி, தேனி பகுதிகளில் திருவிழாக்களிலோ குடும்ப விழாக்களிலோ ஒளிபரப்பப்படும் முதல் பாடல் 'போற்றிப்பாடடி பெண்ணே'வாகத்தான் இருக்கும். இந்த விமர்சனங்களுக்கெல்லாம் நேர்மாறாக 'நிஜத்தில் என்ன நடக்கிறதோ, அதைத்தானே காட்டியிருக்கிறார்கள்' என இத்திரைப்படத்தை இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மதித்து கொண்டாடுபவர்களே அதிகம்.

எது எப்படியோ, ஒரு நல்ல சினிமாவாக மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையும் சமுதாயத்தையும் அதை சார்ந்த மனிதர்களையும் ரத்தமும் சதையுமாக காட்டிய ஒரு முக்கிய பதிவாகவும் 'தேவர் மகன்' காலம் கடந்து நிற்கும்!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்