முகப்புகோலிவுட்

"தமிழில் ஒரு சர்வதேச முயற்சி பாலாவின் 'பரதேசி' " 5YearsofParadesi

  | March 15, 2018 11:28 IST
Paradesi Movie

துனுக்குகள்

 • இயக்குநர் பாலாவின் படங்களில் 'பரதேசி'யும் மிக முக்கியமானது
 • பலரையும் கவர்ந்த 'பரதேசி'க்கு இன்று ஐந்து வயது
 • சிறப்புக் கட்டுரையும் ஒளிப்பதிவாளர் செழியனின் அனுபவமும் கீழே
இயக்குநர் பாலாவின் படங்களில் எனக்கு எப்போதும் இருக்கும் வியப்பு ஒரு வரிக்கதையை முழுப்படமாய் வடிவமைத்து, உண்மையான உணர்வுகளுடன் அதை அளிப்பது. மனநிலை பிறழ்ந்த ஒருவன் சங்கிலிகளால் கட்டப்பட்டு மெலிந்த தேகத்தோடு இருக்கிறான், அவனுக்குப் பின்னால் ஒரு காதல் கதை இருக்கிறது. இந்த லைனை 'சேது'வாக யாரும் உருவாக்க முடியுமா?, தாய் கையாலேயே விஷம் ஊட்டப்பட்டு மரித்துப் போகிறான் மகன், இந்த லைனை `நந்தா'வாக சிந்திக்க முடியுமா?, தன் நண்பனைக் கொன்றவனை மிகக் கொடூரமாக கொன்று, உலகை வெறுத்து விரக்தியுடன் நடைபோடுகிறான் ஒருவன், இதை 'பிதாமகன்னா'க எழுத முடியுமா? சாவை வரமாக பெரும் ஒருத்தி என்பதை `நான் கடவுள்'லாகக் கொடுத்து மிரள வைக்க முடியுமா? எல்லாம் பாலாவால் முடிந்தது. ஒற்றை வரிக் கதைக்கு காட்சிகள் மூலம் அவர் சேர்க்கும் அழுத்தம், காட்டிய உண்மையான உணர்வுகள் எல்லாம் தமிழ் சினிமாவின் வேறு விதமான கலைஞனை நமக்கு அடையாளம் காட்டியது.
 
paradesi

இதிலிருந்து `பரதேசி' கொஞ்சம் வித்தியாசமானது. காரணம் கதை நடக்கும் காலம், மனிதர்கள், கதை நிகழும் நிலம் எனப் பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியது. படம் வெளியாகி இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னுமும் அந்தப் படத்தின் முடிவில் ராசா "நரகக்குழில விழுந்துட்டியே அங்கமா" எனக் கதறும் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. `பரதேசி'யில் வேலை செய்த அண்ணன் ஒருவர் என்னிடம் அடிக்கடி அந்தப் படம் பற்றி பேசுவார், "காலைல தேனில இருந்து கிளம்பினா வர்றதுக்கு எப்படியும் நைட் ஆயிடும். பல நாட்கள் ஷூட்டிங்கில் ஆயிரம் பேர் நடிக்கும் காட்சிகள், விறுவிறுப்பா நடந்த வேலைகள், அசாதாரணமான சூழல்னு 'பரதேசி' பத்து படங்கள்ல வேலை செஞ்சதுக்கான அனுபவம்" என்பார் ஒவ்வொரு முறையும். இந்தப் பட வெளியீட்டுக்கு முன் ஒரு பேட்டியில், `பரதேசி'னு படத்துடைய தலைப்பே வித்தியாசமா இருக்கே எனக் கேள்வி கேட்கப்பட, "என்னது பயங்கரமா? இதுக்கு முதல் வெச்ச பேர் `சனி பகவான்' " என பதில் சொல்லியிருந்தார் பாலா. ஒருவேளை `சனி பகவான்' தலைப்பு பொருத்தம் எனத் தோன்றியிருந்தால், அதே பெயரில் படம் வந்திருக்கும். காரணம் பாலா அப்படிதான். என்ன கொடுக்க நினைக்கிறாரோ கொடுப்பார், என்ன பெற நினைக்கிறாரோ அப்படியே வாங்கிக் கொள்வார். இதற்கு உதாரணமாக முன்பு சொன்ன அதே அண்ணன் சொன்னதை சொல்கிறேன். "அதர்வாவின் கால் நரம்பு அறுக்குற சீன்ல, அதர்வா எத்தனை முறை கண் சிமிடணும்னு கூட சொல்லிக் கொடுத்தார் பாலா" என்றார். எனக்கு பரதேசி பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் ஆவல் கூடியது.

படம் பற்றி இன்னும் நெருக்கமாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் படத்தின் ஒளிப்பதிவாளரும், 'டூலெட்' மூலம் சர்வதேச கவனம் பெற்றுவரும் இயக்குநருமான செழியனிடம் பேசினேன். "திடீர்னு ஒருநாள் 1969ல் பால் ஹேரிஸ் டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல கொடுத்து 'படிச்சிட்டு சொல்லுங்க'னு சொன்னார் பாலா. அடிக்கடி இப்படி எதாவது புத்தகத்தைக் கொடுத்து படிச்சிட்டு சொல்லுங்கம்பார். அதேபோல இந்த புத்தகத்தையும் கொடுத்தார். ஆனா, படிக்கும் போதே எனக்குத் தெரிஞ்சது, இதைப் படமா பண்றதுக்காகதான் படிக்க சொல்றார்னு. படிச்சிட்டுப் போனபோது 'ஒரு சர்வதேச முயற்சியா இந்தப் படத்தை எடுக்கலாமா?'னு கேட்டார் பாலா. `பரதேசி' அப்படிதான் ஆரம்பமானது" என சிலிர்ப்புடன் பேசத்துவங்கினார் செழியன்.
 
paradesi

"வழக்கமா இல்லாம, இன்டர்நேஷனல் அட்டம்ட்ல ஒரு படம்னு அவர் சொன்னது எனக்குப் பிடிச்சது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் பீரியட் ஃபிலிம்ங்கறது. நாவல் அடிப்படையானு சொன்னதும் அதில் இருந்து என்னென்ன எடுத்துக்கலாம், எதெல்லாம் வேணாம்ங்கற டிஸ்கஷன் இருந்தது. அதே சமயத்தில் 'நாம புக்ல இருக்கறதை அப்படியே எடுக்கல, அந்த களத்தில் இப்படி ஒரு கதை நடக்குது'னு முடிவு பண்ணி எழுதினார் பாலா. படம் வெளியான பின்னால, புத்தகம் சரியாக படமாக்கப்படலனு நிறைய சர்ச்சைகள் கூட எழுந்தது. ஆனா, தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு காலகட்டத்தில் கூலிகளா ஒரு கூட்டம் போயிருக்கு. அது மட்டும்தான் புத்தகத்திலிருந்து எடுத்துக்கிட்டது. மற்றதெல்லாம் கற்பனை".

எது நிழல்... எது நிஜம்
 
paradesi

படத்தை மிக உயிரோட்டமாக அளித்ததில் படத்துக்கான நிலமும் முக்கிய பங்கு வகித்தது. வறண்டுபோன சாலூராக இருக்கட்டும், பச்சை பூத்துக் குலுங்கும் தேயிலைத் தோட்டமாக இருக்கட்டும். கதையின் நகர்வுக்கும், அதன் நிலத்துக்கும், வெளிப்படும் உணர்வுகளுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். ஒரு கதைக்கு நிலம் அவசியப்படும்போது, அதை அதைத் தவிர்த்துவிட்டு நீங்கள் கதை சொன்னால் அதில் ஜீவன் இருக்காது. தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற நிலமும், களமும் பற்றி விளக்கினார் செழியன், "முதல் பாதியில் ஜாலி, கேலி கிண்டல், காதல், கல்யாணம், கொண்டாட்டம்னு எல்லாம் இருக்கும், செக்கன்ட் ஹாஃப் முழுக்க கஷ்டம் மட்டுமே இருக்கும். இதில் ஒரு சவால் வந்து நின்னது. முதல் பாதியில் வறுமை, வறட்சி எல்லாம் இருந்தாலும் அவங்க சந்தோசமாதான் இருக்காங்க, அந்த தேயிலைத் தோட்டத்துக்கு கதை போனதுக்குப் பின்னால பசுமை, குளுமை எல்லாம் இருந்தாலும் வாழ்க்கை சோகமா இருக்கு. இந்த வித்தியாசத்த, முரண்பாட்ட எப்படி விஷுவலா காமிக்கறதுங்கறதுதான் சவாலா வந்தது. ஆனா, எங்க உழைப்பால் அது சாத்தியமானது. நிறைய விமர்சனங்களில் நிஜமாவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இடத்துக்கே போய் எடுத்திருக்காங்க, அதே மாதிரி சாலூர் செட்டும் நல்லா இருந்ததுனு எழுதியிருந்தாங்க.
 
paradesi

ஆனா, உண்மை என்னென்னா படத்தின் முதல் பாதியில் வர்ற சாலூர் நிஜமாவே இப்பவும் இருக்கு. அங்க லைவா போய் எடுத்தோம், அங்க எந்த செட்டும் போடல. சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் இருந்தது. அதை மறைக்க மின்கம்பங்களைச் சுத்தி பனைமரம் மாதிரி கோட்டிங் கொடுத்து செட் பண்ணினோம். சில இடங்களில் கட்டடங்கள் இருந்தது அதை குடிசைகளை உருவாக்கி மறைச்சோம். மின்சார வயர்கள் எந்தக் காட்சியிலும் வரக் கூடாதுன்னு, ஹை-ஆங்கிள் வைக்காம தவிர்த்தோம். தேயிலை தொழிலாளர் குடியிருப்புகளுக்கு செட் போட்டோம். அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமா ஒன்னு நடந்தது. செட்டு போட்டு முடிச்ச சமயத்தில் மூணு மாசம் ஸ்ட்ரைக் நடந்தது. நாங்களும் செட்டை அப்படியே விட்டுட்டுப் போயிட்டோம். அந்த சமயத்தில் குடிசைல கரையான் அரிக்கறது, பூச்சி, தூசு எல்லாம் படியறது, இடையில் அங்க சுத்துப் பாக்க வர்றவங்க குடிசைகள்ல தங்கறதுனு, ஸ்ட்ரைக் முடிஞ்சு வரும் போது நிஜமாவே அது ஒரு வசிப்பிடமா மாறியிருந்தது"
மந்திர நொடியில் கிடைத்த க்ளைமாக்ஸ்
 
paradesi

குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மிகப் பெரும் வலு. அதர்வாவின் கால் நரம்பு அறுபட்ட போதே படம் முடிந்துவிட்டது. இந்தப் படத்துக்கு எப்படிப்பட்ட முடிவுதான் இருக்கும் எனக் காத்திருந்தவர்களை அந்தப் பெரும் அழுகை கலங்கடித்திருக்கும். இந்தக் க்ளைமாக்ஸ் பிறந்த கதை பற்றி இப்படி விவரித்தார் செழியன்,

"க்ளைமாக்ஸ் என்ன மாதிரி இருக்கலாம்னு நிறைய டிஸ்கஷன் போச்சு. ராசா கதாபாத்திரம் தப்பிச்சுப் போறது ஒரு முடிவா இருக்கலாம். ஆனா, அப்படி வைக்க முடியாது. வழக்கமான படங்கள் மாதிரி பழிவாங்கி வில்லனக் கொல்லலாம். ஆனா, இதில் அந்த மாதிரி முடிவை வைக்க முடியாது. அதிகபட்ச கோபத்தில் அவன் என்ன செய்வானு சாத்தியங்களை மட்டும் பேசிட்டு க்ளைமாக்ஸ் இதுமாதிரின்னு முடிவு பண்ணோம். இதைதான் எடுக்கப் போறோம்னு முடிவு பண்ணி அதற்கான ரிகர்சல் எல்லாம் போயிட்டிருந்தது. அப்போ புதுசா ஒரு யோசனை வந்தது. 'கதையுடைய முன் பகுதியில் கங்காணிதான் இவங்க எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தான். இவங்க இங்க வந்து பல காலம் ஆயிடுச்சு. மறுபடி அதே ஊருக்கு அவன் போகாமலா இருப்பான்?'னு ஒரு கேள்வி வந்தது. அதனுடைய விடையாதான், பரதேசியினுடைய க்ளைமாக்ஸ். அதன் படி தன்னுடைய மனைவி அங்கமாவும் மகனும் இந்த நரகத்துக்குள்ள வர்றதைப் பார்த்து ராசா கதறி அழறான். எங்கிருந்து இவன் தப்பிக்கணும்னு நினைகறானோ அதே இடத்துக்கு அவனுடைய குடும்பமே வந்திடுது. இதுவரைக்கும் நடந்த கஷ்டங்கள் எல்லாம் திரும்ப நடக்கப் போகுதுனு சொல்லும் படியா படம் முடியும். அங்கிருந்து அவன் தப்பிக்கறதோ, பழிவாங்கறதையோ விட இந்த முடிவுதான் உண்மையானதா இருக்கும்னு தோணுச்சு. அதன்படி இப்போ வரை அந்தக் க்ளைமாக்ஸ் பேசப்படுது."

கிடைத்த அனுபவமும் - பாலாவின் நம்பிக்கையும்
 
paradesi

"பரிசோதனை முயற்சியுடைய எக்ஸ்ட்ரீம் வரை என்னால இந்தப் படத்தில் RAWவா செய்து பார்க்க முடிந்தது. படத்தில் லைட் கிடையாது. ஏன் இல்லைனா, இது பீரியட் ஃபிலிம். அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. இது பொதுவாகவே எல்லா பீரியட் படத்துக்கும் உள்ள சவால்தான். ஒன்னு லைட் சோர்ஸ் அரிகேன் விளக்கா தரையில் இருக்கும், இல்லன்ன அகல் விளக்கா சுவத்தில் இருக்கும். மிஞ்சிப் போனா தீப்பந்தம். தலைக்கு மேல் இருந்து வெளிச்சம் தரும் எந்த வசதியும் கிடையாது. இதை வெச்சு எப்படி வெளிச்சம் கொடுக்கறது, பகல்ல வரும் வெளிச்சத்தை எந்த அளவு எடுத்துகறதுனு சில சிக்கல்கள் வந்தது. இங்கதான் எக்ஸ்பரிமென்ட் ஒன்னு கேட்கும். இப்படிப் பண்ணினாதான் ஆடியன்ஸ் ஏத்துப்பாங்கனு நடுவாந்தரமா ஒன்னு பண்ணவே கூடாது. எது உங்களுக்குத் திருப்தி ஏற்படுதோ அதை கொடுத்தரனும். தப்பு இருந்தா அதிலிருந்து கத்துக்கலாம். அதனால இந்த எக்ஸ்பரிமென்ட்ல எவ்வளவு சீரியசான உழைப்பக் கொடுக்கணுமோ கொடுத்தோம். இதற்கான எல்லா சுதந்திரத்தையும் பாலா எனக்குக் கொடுத்தார்.
 
paradesi

குறிப்பா செங்காடே பாட்டு விஷுவலை பற்றி சொல்லணும். அந்தப் பாட்டு முழுக்க வேலைக்காக கிளம்பி போன மக்களுடைய பயணம் மட்டும்தான் இருக்கும். அதை வேற வேற லொகேஷன்களில் படம்பிடிக்கணும் 20-25நாள் எடுக்க வேண்டியிருக்கும்னு சொல்லியிருந்தார் பாலா. ஆனா, அதை ஒரு மூன்றரை நாள்ல எடுத்து முடிச்சிட்டோம். பாட்டைப் பார்த்தீங்கன்னா வெவ்வேறு இடங்களில் எடுத்த மாதிரி இருக்கும். ஆனா, நிஜமா எடுத்தது ரெண்டு கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஏரியாவில்தான். பிறகு பாலாவுடைய படங்களில் நிறைய க்ளோஸ்அப் காட்சிகள் இருக்கும். ஆனா, அதை இந்தப் படத்தில் முடிந்த அளவு தவிர்த்து Wide ஷாட்ஸ் அதிகம் பயன்படுத்தியிருந்தேன். ஏன்னா இந்தப் படத்தில் நிலம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்னு ஸ்க்ரிப்ட் படிச்சப்போவே புரிஞ்சது. அதுவும் காட்சிக்குள் வரணும்னு நினைச்சேன். "இவ்வளவு Wide இருந்தா எப்பிடி?"னு பாலா கூட கேட்டார். "க்ளோசப்லயும் இருக்கு. எது உங்களுக்கு ஓகேனு சொல்றிங்களோ அதை படத்தில் வெச்சுக்கலாம்"னு சொன்னேன். ஆனா, பார்த்த பின்னால Wide நல்லாயிருக்கு, அதையே வெச்சுக்கலாம்னு சொன்னார். அப்படி அவர் என் மேல வெச்ச நம்பிக்கை எனக்குப் பெரிய பலம்."
 
paradesi

செழியனின் அனுபவம் கேட்ட பிறகு 'பரதேசி'யின் உழைப்பு இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. வழக்கமான படங்களுக்கு மத்தியில் 'பரதேசி' உழைக்கும் மக்களின் வலியைப் பற்றி பேசியது. எப்போதும் வாழ்வியல் பற்றி பேசும் சினிமாக்களுக்கான பலம், அது என்றைக்கும் பேசப்படும் சினிமாக்களாக நிலைக்கும் என்பது. அப்படிப் பார்த்தால் பாலாவின் பரதேசி நிச்சயம் தமிழில் ஒரு சர்வதேச முயற்சிதான்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com