முகப்புகோலிவுட்

"படத்துக்கு 'நீலாம்பரி'ன்னே பேர் வெச்சிடலாமா?" #19YearsofPadayappa

  | April 10, 2018 13:38 IST
Padayappa

துனுக்குகள்

  • ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் 'படையப்பா'
  • இந்தப் படம் வெளியாகி பத்தொன்பது வருடங்கள் ஆகிறது
  • படம் பற்றிய சிறப்பு பகிர்வு இதோ
`படையப்பா' எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. திரையரங்கில் நான் பார்த்த முதல் படம். ரஜினியின் மௌத் ஆர்கன், உள்ளே டீசர்ட் போட்டு மேலே தொழ தொழ ஜீன்ஸ் சட்டை, என் வழி தனி வழி என ஒவ்வொன்றும் மனதில் இருந்து பட்டியலிட முடியும். "என்ன பெரிய உலகசினிமா போல பில்டப்பு" எனக் குரல்கள் கேட்கிறது. ஆஹா ஓஹோ இல்லைதான். சிலருக்கு... குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் மறக்க முடியாதது. சிவாஜி இருந்தார், ரஜினி இருந்தார், படம் வந்து இன்றோடு பத்தொன்பது வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்தில் இருந்த இன்னொருவர் பற்றி இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
 
rajinikanth padayappa

நீலாம்பரி. சில ஜித்துகள் சொல்லும், ரஜினியின் ஒரு பர்சனல் மோதலின் திரை வெளிப்பாடே அந்தக் கதாபாத்திரம் என்று. அப்படியா எனத் தெரியவில்லை, காரணம் `மாப்பிள்ளை' படத்தில் ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரத்தைக் கூட அப்படித்தான் கூறினார்கள். கல்கியின் `பொன்னியின் செல்வன்' நாவலில் இருந்த நந்தினி கதாபாத்திரம்தான் இதற்கான ஆரம்பப்புள்ளி என்று கூட ஒரு தகவல் இருக்கிறது. சரி என்னமோ இருந்துவிட்டுப் போகட்டும். படத்தில் நிறைய இருந்தும் இந்தக் கதாபாத்திரம் பற்றி பேசக் காரணம் உண்டு. அந்த பாத்திரத்தின் கணம் அதிகம். எந்த அளவுக்கு அதிகம் என்றால், இந்தப் படத்தை அறிவித்த சமயத்திலேயே `படையப்பா' எனப் பெயரையும் சேர்த்து அறிவித்திருந்தார்கள். ஆனால், நீலாம்பரி கதாபாத்திரத்தின் பலம் கருதி ஒரு கட்டத்தில் படத்திற்கு `நீலாம்பரி' என்றே பெயர் மாற்றிவிடலாமா என யோசித்தார்களாம். அந்த அளவுக்கு அடர்த்தியான ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி பேசுவதில் தவறில்லைதானே.

ஒரு மாஸ் ஹீரோ படத்தில் எப்போதும் வில்லனுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படி முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்கள் எல்லாம் ஐகானிக்காக நின்று விளையாடும். `பாட்ஷா'வில் ஆண்டனி தொடங்கி `தனி ஒருவன்' சித்தார்த் அபிமன்யு வரை பல உதாரணங்கள். நம்பியார் எல்லாம் வேறு உயரம். ஆனால், இங்கு ஒரு ஃபீமேல் ஆன்டகானிஸ்ட் அப்படி நிற்கவில்லையே என்பதற்கான பதிலாக நீலாம்பரி கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். இங்கு யாராவது முஷ்டி முறுக்கியபடி வந்து "மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யா இருக்காங்களே சாரே?" எனக் கேட்கலாம். அங்கு ஒரு சிக்கல் உண்டு, "உங்க பணத்தால மஞ்சள் குங்குமம் வாங்க முடியுமா? பந்த, பாசத்தை வாங்க முடியுமா?" என ரஜினி சொன்னதும் தடுமாறும் அளவுக்கு வீக்கான பாத்திரமாக இருந்தது ஸ்ரீவித்யாவின் ரோல். ஆனால், நீலாம்பரி "நீங்க என்னோட கண்ணத் திறந்திட்டீங்க" என்று கதறுவதையோ, "என் உயிரையே காப்பாத்திட்டீயே" என சென்டிமென்ட் பிழிவதையோ செய்யவில்லை. அங்கு எல்லா வழக்கங்களையும் மீறி தனித்து நிற்பாள் நீலாம்பரி.
 
rajinikanth padayappa

ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் செய்திருந்து, கத்தி மேல் மார்ச் பாஸ்ட் செய்வது போன்ற ஒரு வேலையைத்தான். மறக்க முடியாதபடி ஒரு கதாபாத்திரம், அதுவும் ரஜினி என்ற சூப்பர்ஸ்டாரின் படத்தில், ஹீரோவை சவடாலாக டீல் செய்யும் ரோல். இந்த கதாபாத்திரத்துக்காக சிம்ரனும், மீனாவும் பரிசீலனையில் இருந்தார்கள் என்கிற தகவலும் உண்டு. "எனக்கு மட்டும் சாய்ஸ் கொடுத்திருந்தா நான் சௌந்தர்யா ரோல்லதான் நடிச்சிருப்பேன்" என ரம்யாவே சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் ரம்யா கிருஷ்ணனின் வாட்டர் ஷேப் பற்றி சொல்லவேண்டும். இதுதான், இது மாட்டேன் என அவர் ஸ்ட்ரிக்ட் காட்டிய மாதிரி தெரியவில்லை. "குழந்தாய் உனக்கு என்ன வேணும்" என வந்தால் தெய்வீகம், போட்டுத்தாக்கு என ஸ்டேப் வைத்தால் மரண ஆட்டம், "படையப்பாஆஆஆஆஆ" என்றால் நீலாம்பரி, "இதுவே என் கட்டளை" என்றால் சிவகாமி, "தகதகதக தங்கவேட்டை" என்றால் டிவி என எந்தக் குடுவையில் ஊற்றினாலும் கச்சிதமாய் நிறைந்து கொள்ளும் வாகு அவருக்கு இருந்தது... இருக்கிறது. அடுத்து `பார்ட்டி'யில் என்னக் காத்திருக்கிறது என பார்க்கவேண்டும்.

"படத்துடைய க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணும் போது அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாம் `மேடம் நீங்க படம் ரிலீஸ் ஆனதுக்குப் பின்னால ஒரு வாரம் ஊர்லையே இருக்காதீங்க'னுலாம் எச்சரிக்கை பண்ணினாங்க. சில இடங்கள்ல ஸ்க்ரீன் கிழிச்சாங்கனு கூட கேள்விப்பட்டேன். ஆனா, அந்த ரோல் எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுகிட்ட பின்னால ஆடியன்ஸ் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க" என தன் நீலாம்பரி அனுபவம் பற்றி சொல்லியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சரி எல்லாம் ஓகே இப்போ எதுக்கு நீலாம்பரிக்காக இவ்வளோ வரிஞ்சுகட்டிகிட்டு வர்றீங்க எனக் கேட்கலாம். ஒரு வகையில் ரம்யா கிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது, அடுத்து இது போன்ற சுவாரஸ்யமான பாத்திரங்களை எழுத மற்ற இயக்குநர்களுக்கு தைரியம் கொடுத்தது. மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
 
rajinikanth padayappa

அந்த விதத்தில் நீலாம்பரி ஒரு நல்ல துவக்கமாக இருந்தாள். கன்னத்தில் அறைந்ததும், அதுவரை முரட்டுத்தனமாக இருந்தவள் காதலின் கீதம் ஒன்று பாடும் ஹீரோயினாக மாறுவது, காதலன் படத்தில் பான்பராக் போட்டு பிரபுவை டார்ச்சர் செய்யும் போலீஸ், அம்மன் படத்தில் மருமகளை கொடுமை செய்யும் மாமியார் என பெண்களை வில்லியாக, என்றாலும் இந்த அளவுதான் பயன்படுத்த முடியும் என்ற ஸ்டீரியோக்களை உடைத்து, புது வடிவம் அமைத்துக் கொடுத்தது நீலாம்பரி. `பார்த்தேன் ரசித்தேன்' பானு, `திமிரு' ஈஸ்வரி, `பச்சைக்கிளி முத்துச்சரம்' கீதா, சமீபத்தில் பார்த்த `அதே கண்கள்' வசுந்தர என விதவிதமாக ஃபீமேல் ஆன்ட்டகானிஸ்ட் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போதாவது "படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு ரோலுங்க" என சொல்லும் வசதி இருக்கிறது. ஆனால், படையப்பா சமயத்தில் இத்தனை முரண்டு பண்ணும் ஒரு பாத்திரத்துக்கான ரெஃபரன்ஸ் இருக்கவில்லை. ஆனாலும், அந்த கதாபாத்திரம் எப்படி முறைக்கும், எப்படி நடக்கும், அதிகாரமாக சிரிக்கும் என நினைத்து அதை வெளிக்காட்டியதற்கு மறுபடி ரம்யாகிருஷ்ணனைப் பாராட்ட வேண்டும். சைகலாஜிகலாகவும் அந்தப் பாத்திரத்துக்கான வில்லத்தனம் அவ்வளவு திருத்தமாய் எழுதப்பட்டிருந்தது இன்னொரு ப்ளஸ். அதனால்தான் க்ளைமாக்ஸில் "நீ மனிஷனே இல்ல, தெய்வம்" என கண்ணீர் விட்டு நீலாம்பரி பேசும் போது சந்தேகமாகவே ஆடியன்ஸ் பார்த்தார்கள். மறுபடி துப்பாக்கி நீட்டும் போது "அதானே இது எங்க திருந்தப் போது" என தங்கள் கணிப்பிற்கு சபாஷ் போட்டுக் கொண்டார்கள். படத்தைப் பொறுத்தவரை என்னதான் தர்மம் இறுதியில் வென்றாலும் கடைசியில் ஜெயித்தது என்னவோ நீலாம்பரிதான். இப்போதும் அந்தப் படத்திலிருந்து எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருப்பது நீலாம்பரியின் தகிப்புதான். அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி, அதன் மூலம் படத்திற்கு கிடைத்த வெற்றி. எதற்காக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை மெனக்கெட்டு எழுத வேண்டும் என்பதற்கான பல உதாரணங்களில் நீலாம்பரியின் கதாபாத்திர வடிவமைப்பு முக்கியமான ஒன்று.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்