முகப்புகோலிவுட்

'பில்லா'வின் தசாப்தம் - இந்திய பட்ஜெட்டில் ஒரு இண்டர்நேஷனல் திரைப்படம்!

  | December 14, 2017 13:02 IST
10 Years Of Billa

துனுக்குகள்

 • 10 வருடங்கள் கடந்தும் இன்றுவரை ரசிகர்களின் ரிங் டோனை அலங்கரிக்கின்றது
 • படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தினை கொடுத்தது
 • இந்திய பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவான திரைப்படம் பில்லா
தமிழ் சினிமாவில் எந்தவொரு ஆதரவோ, பின்புலமோ இல்லாமல் தானாக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஸ்டார் நடிகர்களில் மிக முக்கியமான ஒருவர - 'தல' அஜித்! இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் எந்தளவிற்கு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறாரோ, அந்தளவிற்கு தோல்விகளையும் பார்த்திருக்கிறார். 2003 முதல் 2006 வரை 'வரலாறு' தவிர சிறந்த படம் என சொல்லிக்கொள்ளும்படி வேறு எந்த திரைப்படமுமே இல்லாத ஒரு மோசமான கட்டத்தை கடந்து கொண்டிருக்கையில், அஜித் அவர்களின் கேரியரில் வந்த முக்கியமான ஒரு வெற்றிப்படம் தான் 'பில்லா'. இந்த படம் வெளியாகி, இன்றோடு 10 வருடங்கள் ஆகிறது (டிசம்பர் 14). அதைப் பற்றிய ஒரு சிறப்பு பதிவே, இந்த கட்டுரை.

தமிழ் சினிமாவில் 'தல' அஜித் அவர்களின் வளர்ச்சியை, நான்கு நிலைகளாக பிரிக்கலாம்...
- 'காதல் கோட்டை'க்கு முன், 'காதல் கோட்டை'க்கு பின்
- 'வாலி' படத்திற்கு முன், 'வாலி' படத்திற்கு பின்
- 'பில்லா'விற்கு முன், 'பில்லா'விற்கு பின்
- 'மங்காத்தா'விற்கு முன், 'மங்காத்தா'விற்கு பின்

அந்த அளவிற்கு, அஜித் அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் சிறப்பு பங்கு வகிக்கும் திரைப்படம் 'பில்லா'. 'தல' அஜித்தின் வியாபார சந்தையின் வட்டத்தை பெரிதளவில் அதிகரித்தது மட்டுமின்றி, ரசிகர் கூட்டத்தையும் இரண்டு மடங்காக உயர்த்தியது இத்திரைப்படம். 'ப்ப்பா.. என்னா ஸ்டைலா இருக்காருப்பா' என எல்லா ரசிகர்களையுமே அசந்து போய் பார்க்க செய்த ஒரு படம் இது.
 
ajith 10 years of billa

பொதுவாக எப்பொழுதுமே நம் ரசிகர்களும் ஊடகங்களும் 'ஹாலிவுட் ஸ்டைல்ல ஒரு தமிழ் படம், ஹாலிவுட் ஸ்டைல்ல ஒரு தமிழ் படம்' என மிகைப்படுத்தி சொல்வார்கள் இல்லையா..? நிஜமாகவே, மேக்கிங்கில் ஆங்கில படங்களுக்கு இணையான ஒரு படமாக இருந்தது இத்திரைப்படம். முதல் காட்சியில் ஏரோடிராமில் Benz காரில் வந்து இறங்கி, James bond போல ஒரு Red Bull கேனை மேலே தூக்கிப் போட்டு எல்லாரையும் திசைத்திருப்பி காலி செய்யும் முதல் காட்சியில் தொடங்கி, கெத்தாக Holsterல் துப்பாக்கியை வைப்பது, அப்படியே காற்றிலேயே துப்பாக்கியை படு ஸ்டைலாக reload செய்வது என நமது சினிமாக்களில் இதற்கு முன் நாம் பார்த்திராத அளவிற்கு அட்டகாசமான பாணியில் ஒரு படத்தை கொடுத்திருந்தார்கள்.
ஆடைகள் வடிவமைப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என ஒவ்வொரு தொழில்நுட்ப துறையிலுமே உச்சக்கட்ட தரத்தை தந்திருந்தார்கள் ஒவ்வொருவருமே. படத்தில் அஜித், நயன்தார, நமீதா என எல்லா நடிகர்களும் அணிந்திருந்த ஆடைகளையெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியான பின், ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் எல்லா பெரிய இயக்குனர்களின் படங்களிலும் வேலை செய்யுமளவிற்கு பிஸி ஆகிட்டார்.

மேக்கிங்கை பொறுத்தவரை, 'பில்லா' ஒரு மிகப்பெரிய டிரெண்ட்செட்டர். இந்த படம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கத்தால், தமிழ் சினிமாவில் அடுத்த 2, 3 வருடங்கள் இதே பாணியில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பல திரைப்படங்கள் வெளியாக தொடங்குமளவிற்கு ஒரு பெரிய டிரெண்டை உருவாக்கிவிட்டது 'பில்லா'. அதே போல, டீசர் டிரைலர் என்கிற ஒரு விஷயத்தை பிரபலபடுத்திய பெருமையும் 'பில்லா' திரைப்படத்தையே சேரும்; டீசர் என்றொரு விஷயத்தை அறிமுகப்படுத்திய முதல் feature film இதுவே (2007ஆம் ஆண்டில், அதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த 'சுல்தான்' என்கிற animated feature film படத்திற்கு டீசர் வெளியாகியிருந்தது)

'பில்லா' திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் - தல அஜித்தின் அசத்தலான திரை ஆளுமை. அறிமுகக் காட்சி, காரில் பாம் வைத்துவிட்டு நடந்து வரும் காட்சி, அந்த பரபரப்பான கார் சேஸ் மற்றும் drifting காட்சி, வேலு பில்லாவாக மாற பயிற்சி எடுக்கும் காட்சிகள், ஏர் பிரிட்ஜில் இருந்து டூப் போடாமல் அஜித்தே குதித்த காட்சி என தல ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு ரீலிலும் ஒரு காட்சியாவது இருந்தது. அந்த கார் சேஸ் காட்சியில், அஜித்தின் கார் ஓட்டும் திறனை அற்புதமாக பயன்படுத்தியிருந்தார் விஷ்ணு. அதே போல, பில்லா வேலு என்கிற ரெண்டு கதாபாத்திரங்களுக்கு நடுவே நல்ல வித்தியாசம் காட்டியிருந்தார் அஜித். முதல் பாதியில் சந்தானம் மற்றும் பிரபு உடன் வரக்கூடிய காமெடி காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி அமைந்திருந்தது. பொதுவாகவே, அஜித் அவர்களின் பெரும்பாலான படங்களில் நகைச்சுவை காட்சிகள் இருக்காது (அல்லது ரசிக்கும்படி இருக்காது); ஆனால். 'பில்லா' திரைப்படத்தில் வேலு வருகிற காட்சிகள் எல்லாமே நன்றாக இருந்தது.
 
ajith nayanthara 10 years of billa


நடிகை நயன்தாராவின் திரைப்பட வாழ்க்கையில் 'பில்லா' ஒரு முக்கியமான திருப்புமுனை என்றே சொல்லலாம். 2007ஆம் ஆண்டு தன்னுடைய காதல் முறிவிற்கு பின், ஒரு நீண்ட இடைவேளையைத் தொடர்ந்து நயன்தாரா நடித்த இந்த படம் மூலமாக மீண்டும் 'நம்பர் 1' இடத்திற்கு வந்தார். இந்தளவிற்கு ஸ்டைலிஷான ஆக்ஷன் ரோலில் ஒரு ஹீரோயினை, தென்னிந்திய சினிமா அதற்கு முன் பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை. 'Tomb Raider' ஏஞ்சலினா ஜூலி ரேஞ்சுக்கு அசத்தியிருந்தார் நயன்தாரா. பில்லாவை எப்படியாவது பிடித்துவிட துடிக்கும் காவல் அதிகாரி ஜெயபிரகாஷ் ஆக பிரபுவும், ஒட்டுமொத்த உலகில் பில்லா நம்பும் ஒரே ஆளான ரஞ்சித் ஆக யோக் ஜேபியும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

ரஜினி நடித்த 'பில்லா'வுடன் ஒப்பிடுகையில், சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருந்தார் விஷ்ணு. கதைக்கு பெரிதாக தேவைப்படாத, படத்தை மெதுவாக்கிடும் 'தேங்காய் சீனிவாசன்' மாதிரியான கதாபாத்திரங்களை படத்திலிருந்து மொத்தமாகவே நீக்கிவிட்டார். 'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது' என பில்லாவின் வாழ்க்கையை பற்றியும் நடிகர் அஜித்தின் நிஜ வாழ்க்கையைப் பற்றியும் சொல்வது மாதிரியான வசனங்கள் அஜித் ரசிகர்களை தாண்டி எல்லோராலுமே ரசிக்கப்பட்டது. 'சுடப்போறீங்களா, DSP?' என பில்லா கேட்க காவல் அதிகாரி ஜெயபிரகாஷ் 'ஓடிதான் பாரேன்' என சொல்வது, 'ரொம்ப பேசுற' என ஜெயபிரகாஷ் சொல்கையில், 'ரொம்ப பார்த்துட்டேன்' என பில்லா பதிலளிப்பது என சின்ன சின்ன வசனங்களும் ரசிக்கும்படி இருந்தது.

படம் முழுக்கவே அதிக contrast, டான் பில்லாவுக்கு கருப்பு வெள்ளை டோன் (ஆடைகள், செட் என்ன எல்லாமே கருப்பு வெள்ளை மட்டுமே), ஜாலியான வேலு பாத்திரத்திற்கு ஒரு கலர் டோன் என பயன்படுத்தி, மலேசியாவின் அழகையும் கதைக்கேற்றார் போல சாமர்த்தியமாக பயன்படுத்தியிருந்த நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு தான் ஒரு ஆங்கில பட பாணியிலான உணர்வைத் தர பெரிதும் உதவியது. 'பில்லா' படத்தில் வரும் பல காட்சிகளில் நம்பமுடியாத அளவிற்கு தத்ரூபமான செட்களை அமைத்திருந்த கலை இயக்குனர் மிலனின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. 'மை நேம் இஸ் பில்லா' பாடலில் வரும் moving sets எல்லாம், படம் வந்த புதிதில் மிகப் பிரபலம். இப்பொழுது பார்த்தால் கூட, பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
 
ajith 10 years of billa


'பில்லா' திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையைப் பற்றி பேசாவிட்டால், இந்த பதிவே முழுமையடையாது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு, இந்த படத்தின் உயிர்நாடியை போல இருந்தது யுவனின் பின்னணி இசை. அறிமுகக் காட்சி, வேலு பில்லாவாக மாற பயிற்சி எடுக்கும் காட்சி, இடைவேளை காட்சியில் வரும் பின்னணி இசை எல்லாமே படத்தின் ஸ்டைலை வேறு தளத்தில் எடுத்து சென்றது. இந்த படத்தைப் பற்றி யோசித்தாலே, முதலில் நினைவுக்கு வரும் விஷயம் 'தல' அஜீத் அவர்களும் இந்த படத்தின் தீம் மியூசிக்கும் தான். இந்த படத்தின் அடையாளமே அந்த தீம் மியூசிக்தான் என்று கூட சொல்லலாம்.. படம் வெளிவந்து 3, 4 வருடங்கள் ஆன பின் கூட 'பில்லா தீம் மியூசிக்' தான் பலருடைய மொபைல் ரிங்டோனாக இருந்தது.

'பில்லா' படத்திலுள்ள பல நிறைகளைத் தாண்டி, குறிப்பிட்டு சொல்லும்படியான சில குறைகளும் உண்டு. அடிப்படையில் 'பில்லா' ஒரு star vehicle திரைப்படம் தான் என்பதால், கதையை விட கதையின் நாயகன் அஜித் மற்றும் மேக்கிங்கை மட்டுமே மிக அதிகமாக சார்ந்து நகரும் படமாக இருந்தது. படத்தின் இரண்டாம் பாதியில் பெரிய திருப்புமுனைகள் எதுவும் இல்லாததும், கிளைமாக்ஸ் ரொம்பவே சாதாரணமாக இருந்ததும் ரசிகர்களிடையே சின்ன ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. படத்தில் நிறைய ஸ்லோ-மோஷன் ஷாட்களும், அஜித் அவர்களை ஸ்டைலாக காட்டுவதற்கென்றே சில ஷாட்களும் உண்டு. ஆனால், சில இடங்களில் அதுவே தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் 'என்னடா இது, அஜித் நடந்துட்டே இருக்காரு' என மற்ற நடிகரின் ரசிகர்கள் கிண்டலடிக்கவும், SMS ஜோக்ஸ் அனுப்பவும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து போனது. அதே போல, 'அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்' 'He is Intelligent to the Intelligence' மாதிரியான சில சுமாரான பில்டப் வசனங்களும் ஆங்காங்கே இருந்தது.

ஆனால், இந்த குறைகள் எதுவுமே பெரிதாக உறுத்தாத வண்ணம் 'தென்னிந்திய சினிமாவிலேயே பார்க்காத அளவிலான ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் த்ரில்லர்' என்கிற பெருமையுடன் மிகப்பெரிய வெற்றியடைந்தது 'பில்லா'. மேக்கிங்கில் மிகப்பெரிய டிரெண்ட்செட்டர் ஆன இத்திரைப்படம், 'இந்தியன் பட்ஜெட்டில் உருவான ஒரு இண்டர்நேஷனல் திரைப்படம்' ஆகவே ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறது!

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com