முகப்புகோலிவுட்

தர்பார் நஷ்டம் : ஏ.ஆர். முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

  | February 18, 2020 16:17 IST
Ar Murugadoss

தர்பார் திரைப்பட நஷ்டம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தர்பார் திரைப்பட நஷ்டம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தொடர்ந்த வழக்கிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வழங்கியது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு கிடைத்தது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல திரைப்பட விநியோகஸ்தர்கள், தர்பார் திரைப்படத்தினால் மொத்தமாக ரூ. 25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் ரஜினி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது, விநியோகிஸ்தர்கள் ஏ.ஆர் முருகதாஸின் வீடு தேடிச் சென்றிருந்த போது, அவர் காவல்துறை உதவியுடன் அவர்களை வெளியேற்றினார்.

அதையடுத்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், விநியோகஸ்தர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாஸ் தரப்பு வக்கீல் “காவல்துறை பதிவு செய்ததுள்ள வழக்கை மேற்கொண்டு நடத்த இயக்குநர் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள நீதிபதி “பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள், அது குறித்துப் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு காவல்துறையும் வழக்குப் பதிவு செய்யும், பிறகு எந்த நடவடிக்கையும் வேண்டாம், வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டால், நீதிமன்றம் மனுதாரரின் விருப்பப்படி செயல்பட வேண்டுமா??” என வழக்கை விசாரித்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்