முகப்புகோலிவுட்

"எல்லாருமே சூனா பாணா ஆயிட முடியுமா டா" வடிவேல் birthday special

  | October 10, 2017 18:23 IST
Vadivelu Comedy

துனுக்குகள்

 • நம்மை அறியாமலே வடிவேலாகவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
 • தற்போதைய மீம்ஸ் உலகின் மிகப்பெரிய ஆளுமை வடிவேலு
 • வாழ்க்கையின் சோகங்களை கூட மிக எளிமையாக கடந்து செல்ல கூடியவர் வடிவேலு
இன்றைய தேதியில் சமூக வலைத்தளங்களில் வடிவேலுவை கடக்காமல் உங்களால் ஒரு நாள் கூட தாண்ட முடியாது. மீம் உருவாக்குபவர்கள் பலரின் மானசீக தலைவரே வடிவேலுவாகத்தான் இருப்பார் என நினைக்க தூண்டும் அளவிற்கு நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வடிவேலுவின் பார்வையில் வைத்து நகைப்பூட்டும் விதமாக அதை சொல்வது மிகச்சாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது.

இத்தனை ஏன், நாம் தினம் தினம் பேசி பழகும் அலுவலக, கல்லூரி, பள்ளி நண்பர்களுடன் ஒரு நாள் கூட வடிவேலு பாணி வசனங்கள் பேசாமல் நகர்வதில்லை.

தோற்றத்தில் என்ன தான் நமக்கு பிடித்த கவர்ச்சியான நடிகர் நடிகைகள் போல நாமும் தோன்ற நாம் மெனக்கெட்டாலும் குணத்தில் நாம் நம்மை அறியாமலே வடிவேலுவை போல நடந்துகொள்ளும் அளவிற்கு பலமானதொரு தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார் வடிவேலு. அது தான் அவர் வெற்றி பெரும் இடமும் கூட.
வட்டார வழக்கை பேசுவது பாமரத்தனமாக பார்த்துக்கொண்டிருந்த சமூகத்தில், வட்டார வழக்கை ஒரு ஸ்டைலாக மாற்றி விட்டவர் வடிவேல். டப்ஸ்மாஷ் மீம்ஸ் என நகைச்சுவை ஏற்படுத்தும் எந்த வித ஊடகத்திலும் மிகப்பெரிய சக்தியாக, மிக அதிக அளவில் இமிட்டேட் செய்யப்பட்டவராகவும் இவர் தான் இருக்கிறார்.

தோல்விகள் நாம் வாங்கும் சின்னஞ்சிறிய மொக்கைகள் என அனைத்தையும் எளிமையாகக்கடக்க வடிவேலு பாணி வசனங்கள் ஒரு கையடக்க உளவியல் மருத்துவரை போல செயல்படுகிறது. திடீரென ஒலிக்கும் கைபேசியின் அழைப்பு ஒலியாக(ரிங்க்டோன்) வடிவேல் வசனங்கள் வரும்போது உச்ச கட்ட டென்ஷனில் நடக்கும் விவாதங்கள் கூட அதன் சுரத்தை இழந்து சிரிக்கும் படி மாறுகிறது.

வடிவேலு உண்மையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறார், தன்னை தானே கலாய்த்துக்கொள்ளும் சுய பகடியை இத்தனை பேர் ரசிக்க மிகப்பெரிய காரணம் அவர் என்றால் அது மிகையாகாது. பிறரை கலாய்க்கும் நகைச்சுவையில் நம்மை அறியாமல் நாம் பலரை காயப்படுத்தி விடுகிறோம், ஆனால் சுய பகடியில் அந்த பிரச்சனை அறவே கிடையாது.

வாழ்க்கையின் சோகங்களை கூட சிரிப்புடன் அணுகி நம்மை நாமே கிண்டல் செய்து கொள்வதற்கெல்லாம் மனதளவில் மாபெரும் முதிர்ச்சி தேவை.. அதை போகிற போக்கில் "கொஞ்சூண்டு சட்னி வேணா இருக்கு" போன்ற வசனங்களால் நம் மனதில் விதைத்தது வடிவேல் நமக்கு அளித்த மாபெரும் கொடை.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு
உங்களை எவ்வளவு கொண்டாடினாலும் தகும் ❤
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com