முகப்புகோலிவுட்

"மண்ணுல விழுந்து புரண்டார், அந்த டெடிகேஷன்தான் அமிதாப் சார்!" - `ஷமிதாப்' அனுபவம் பற்றி தனுஷ்!

  | October 11, 2018 12:20 IST
Dhanush

துனுக்குகள்

 • இந்திய திரையுலகின் அதிமுக்கிய நடிகர் அமிதாப் பச்சன்
 • `உயர்ந்த மனிதன்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்
 • இன்று அவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்திய திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரம் அமிதாப் பச்சன். `உயர்ந்த மனிதன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். இவருடன் `ஷமிதாப்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் நடிகர் தனுஷ் பகிர்ந்த தகவல் இதோ,

"ஒரு வெளிநாட்டுக் காரரை நான் விமான பயணத்தின் போது சந்தித்தேன். அப்போ அவர் இந்திய அடையாளங்களா குறிப்பிட ஆரம்பிச்சதே தாஜ்மஹால், அமிதாப் பச்சன்....னுதான். அவர் அப்படி ஒரு இடத்தில் இருக்கக் கூடிய மனிதர். அவர் எவ்வளவு எளிமையானவர்னு சொல்ல ஒரு உதாரணம் சொல்றேன். நடிகர்கள் கேரவன்ல ரெடியாவோம். படத்தில் நிறைய பெரிய ஆர்டிஸ்ட் இருந்தா, யார் முதல்ல கேரவன்ல இருந்து வெளிய வர்றதுன்னு ஒரு பஞ்சாயத்து நடக்கும். அவங்க வந்ததுக்கு அப்பறம் நான் வர்றேன்னு சொல்ற ஆட்கள் நிறைய பேர நானே இங்க பார்த்திருக்கேன். எனக்கு இன்னிக்கி வரைக்கும் அது ஏன் நடக்குதுன்னே விஷயம் புரிஞ்சது இல்ல. யார் முதல்ல போனா என்ன, நம்ம போய் நம்ம வேலைய செய்யப் போறோம்.

`ஷமிதாப்'ல நடிக்கும் போது நான் அமிதாப் சார் வர்றதுக்கு முன்னால நாம போயிடனும், அவரைக் காக்க வைக்கக் கூடாதுன்னு ஒரு முடிவெடுத்திருந்தேன். ஆனா, ஒருநாள் எனக்கு மேக்கப்ல கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு. சரி சார் எப்படியும் மெதுவாதான வருவாரு, அதுக்குள்ள நம்ம மேக்கப் முடிச்சிட்டு அவருக்கு முன்னால போயிடலாம்னு இருந்தேன். போய் பார்த்தா அவர் எனக்கு முன்னாலேயே வந்து ரிலாக்ஸா ரிகர்சல் பண்ணிட்டுருந்தார். அது பெரிய விஷயம் இல்ல. ஆனா, அவ்வளவு பெரிய ஸ்டார்டம், புகழ், பேரு எல்லாத்தையும் வெச்சுகிட்டு, அவருக்குப் பின்னால நான் வர்றேன்ங்கறத ஒரு பொருட்டாவே எடுத்துக்காத குணம் என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்தியது. ரொம்ப கூல "வாங்க எப்படி இருக்கீங்க, சாப்டிங்களா? எங்க ஸ்டே எல்லாம் சௌகர்யமா இருக்கா?"னு அக்கறையா விசாரிச்சார்.
என்னைக்குமே நீ இதுதான் பண்ணனும், இதை பண்ணக்கூடாதுனு அவர் சொன்னதே இல்ல. பார்க்க மட்டும் இல்ல, அவர் நிஜமா இருக்க இடமும் அவ்வளவு உயரம். அவர் என்னோட திறமைய மதிச்சு எனக்கு ஒரு இடம் கொடுக்குறது எவ்வளவு பெரிய விஷயம். அது மட்டும் இல்ல அவ்வளவு டெடிகேஷன் உள்ள ஒரு ஆள் அமிதாப் சார். ஊட்டியில் ஒரு நாள் ஷூட் நடந்தது பயங்கர குளிர். அந்த சீன் படிஅவர் ஈரமா இருக்கணும். வழக்கமா அந்த மாதிரி சீன்னா எல்லாரும் ஸ்ப்ரே பண்ணிப்பாங்க. ஆனா, அவர் கொஞ்சமும் குளிர் பத்தி யோசிக்காம பக்கெட் தண்ணிய எடுத்து தலைல ஊத்திகிட்டார். இன்னொரு சீன்ல துணி அழுக்கா இருக்கணும்னு சொல்லி மேக்கப் மேன் மண்ண அள்ளி பூச வந்தார். அவர நிறுத்தீட்டு 'இப்படிப் பண்ணா துணிக்கும் மேக்கப் போட்ட மாதிரி ஆகிடும்'னு சொல்லி கீழ விழுந்து புரண்டு துணிய அழுக்காக்கிகிட்டார். இது எல்லாம்தான் அவரை அந்த உயரத்தில் கொண்டு போய் சேர்த்திருக்குனு நினைக்கிறேன்" என்றார் தனுஷ்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com