முகப்புகோலிவுட்

இயக்குனர் ரஞ்சித் - பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

  | December 08, 2017 15:47 IST
Director Pa Ranjith Birthday

துனுக்குகள்

  • வெகு எதார்த்தமாக காட்சிகளைப் பதிவு செய்வதில் கைதேர்ந்த கலைஞன்
  • உயர்ந்து நிற்கும் சுவரை நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும்
  • ரஞ்சித்தின் சித்தாந்தங்களை தமிழ் திரையுலகம் கொண்டாட தயாராக உள்ளது
மெட்ராஸ் திரைப்படம். சதா திட்டிக்கொண்டும் முறைத்துக்கொண்டும் சிறிதுகூட கன்சிடர் செய்யாத கலையரசி திடீரென ஒரு அதிகாலை நேரத்தில் காளியிடம் பேசும் காட்சி. கலையரசி, காதலின் மீதும் காதலனின் மீதும் கொண்டுள்ள பார்வைகளை மற்றவர்களோடு கம்பேர் செய்து கோபித்துக்கொள்ளும்போது காளியின் பயமும் கேள்விகளும் அந்த அதிகாலை நேரத்தில் விடிய காத்துக்கொண்டிருக்கும் பகலின் மனநிலையை பிரதிபலிக்கும்.

தொடர்ந்து, அவள் அழத்தொடங்க 'ஏன் இப்போ அழற' என்று காளியின் குரல் உயர்ந்தவுடன் அதே அழுகையினூடே அதுநாள் வரை கட்டமைத்து வைத்திருந்த egoistic character முழுவதும் உடையும் விதமாக ஏக்கம் கலந்த கண்ணீரில் 'கல்யாணம் பண்ணிக்கிறியா' என்று அவளது வார்த்தைகள் கீழிறங்கி நீளும். விடுமுறையென தெரிந்தும் விடுமுறை தேதி தெரியாத பள்ளிச்சிறுவன் ஆசிரியையிடம் மகிழ்ச்சி கலந்த பயத்தில் கேட்பது போல 'எப்போ' என்று கேட்கும் காளியிடம் 'இப்போ. வா தாலி கட்டு ' என்று சொல்வாள் கலையரசி. அவள் சொல்லி முடித்ததும் அதுவரை கரையில் நின்று அலையை ரசித்த பதின்மவயது பெண் மெது மெதுவாக தனது கால்களை நனைத்து ஒரு பிடி அலையை எனது கடல் தானே என்று கையில் ஏந்துவது போல இன்ச்களில் நெருங்கி வந்து 'அப்போ ஒரு முத்தம் கொடு' என்று காதலுக்கே உரிய உரிமையில் கேட்பார் காளி.

காதலை வெளிப்படுத்த சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய ஐ லவ் யூக்கள் அத்தனை இயல்பாக அமைந்துவிடுவதில்லை. தனது காதலின் வெளிப்பாடு அதன் நோக்கமான திருமணத்தை மையப்படுத்தி மலரும்போது அதன் வாசம் மிகச்சுலபமாக விருப்பத்துக்குரியவரை தாக்குகிறது. Love Proposal என்று சுருக்கிவிடப்பட்ட காதலின் தொடக்கத்தை ஓர் இருளில் சில வசனங்களில் சில துளி கண்ணீரில் நேர்மையான உரிமையில் வெகு எதார்த்தமாக பதிவு செய்யப்பட்ட காட்சி இது. .
அடுத்தது கபாலி படம். மலேசியாவிலிருந்து சென்னை வரும் கபாலி, செட்டியார் பங்களா, பாண்டிச்சேரி பிரெஞ்ச் பெண்ணின் வீடு என ஒவ்வொரு அடியாக தேடி இறுதியில் ஆரோவிலில் இருப்பதாக தெரிந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகால பிரிவை ஒரு பேரிரவின் விடியல் தீர்த்து வைக்கப்போகும் ஆனந்த மனநிலையில் நொடிகளை உறங்காமல் இவ்வாறு நகர்த்திக்கொண்டிருப்பார்.

"இத்தன வருஷம் தூரமா இருந்தவ இப்போ எங்கேயோ பக்கத்துல இருக்கா.
என்ன நினைச்சுட்டு தூங்கிட்டு இருப்பா. என்ன பாத்த உடனே எப்டி ரியாக்ட் பண்ணுவா.
என்ன நினைப்பா. அதையெல்லாம் நினைக்கும்போது நெஞ்செல்லாம் திக்கு திக்குனு இருக்கு மா.
உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு"

"பாத்த உடனே எப்டி ரியாக்ட் பண்ணுவா" என்ற கபாலியின் கேள்விக்கு அவர்களின் சந்திப்பில் குமுதவல்லியின் ஆனந்த அழுகை பதில் சொல்லும். "என்ன நினைச்சுட்டு தூங்கிட்டு இருப்பா" என்ற கேள்விக்கு "ரெண்டு வருஷம் ரெண்டு மாசம் பதினெட்டு நாள். இந்த இருபத்தஞ்சு வருஷமும் அத மட்டும் தான் திரும்ப திரும்ப நினச்சு வாழ்ந்திட்ருந்தேன்" என்பது குமுதவல்லியின் பதில்.

தனிமையை மட்டுமே துணையாக கொண்டு வாழ்ந்த இவர்கள் "வாஞ்சை தரவா" என்று கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொள்ளும்பொழுது இருபத்தைந்து ஆண்டுகால பிரிவு ஓர் இரவில் உடைந்து போகும்.

இயக்குனர் பா.ரஞ்சித்.
இரண்டு காட்சிகளுக்கும் உயிரூட்டிய ரசிகன்.

தமிழ் சினிமாவில் ஒரு காட்சியின் காலத்தை அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைப்பதில் அந்த காட்சியின் வெற்றி இருக்கிறது. அப்படி காலநிலையும் காட்சியின் சூழ்நிலையும் ஒரே அலைவரிசையில் சந்தித்துக்கொள்ள வைத்தால் அந்த இயக்குனர் வெற்றி பெறுகிறார்.

பா.ரஞ்சித் ஒரு வெற்றிப்பெற்ற இயக்குனர். நேர்மையாகவும் நேர்த்தியாகவும் கதை சொல்வதில் பாராட்டுக்குரியவை ரஞ்சித்தின் கதாபாத்திரங்கள். கையில் பேப்பர் வைத்துகொண்டு பைத்தியமாக தெருக்களில் அலையும் ஒரு ஜீவனை அனைத்து தெருக்களிலும் சர்வசாதாரணமாய் பார்த்துவிட முடியும். அப்படி ஒரு கதாபாத்திர பின்னணியில் அதற்குள்ளும் ஒரு கதை சொல்லி ஜானியென பெயர்சூட்டி அசத்தியிருப்பார் ரஞ்சித். சும்மாக்கிடந்த கல்லை தான் நடிக்க வைத்தார் பாரதிராஜா, ஆனால் இவரோ உயர்ந்து நின்ற சுவரையே நடிக்க வைத்துவிட்டார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஞ்சித்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என்று வெவ்வேறு பரிமாணங்களில் படங்கள். விமர்சனங்களும் வசவுகளும் விட்டுவைக்காத கலைஞர்கள் இல்லை. ரஞ்சித்தும் விதிவிலக்கல்ல. எந்த சலசலப்பிற்கும் தலைசாய்க்காமல் அவரது பயணம் செல்கிறது.

இன்னும் பயணியுங்கள் ரஞ்சித். தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல படைப்புகளை, தேவையான சித்தாந்தங்களைக் கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.
நீங்கள் கொண்டாடப்படுகிறீர்கள்.
இன்னும் இன்னும் கொண்டாடப்படுவீர்கள்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்