முகப்புகோலிவுட்

சாதியும், அரசியலும் - உண்மைகள் சொன்ன 'உறியடி'!

  | May 25, 2018 13:04 IST
Uriyadi Movie

துனுக்குகள்

  • ‘உறியடி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிறது
  • இன்றும் ரசிகர்களால் ஒரு cult கிளாசிக் ஆக கருதப்பட்டு வருகிறது ‘உறியடி’
  • சாதிக் கட்சிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிய படம்
சமகால அரசியல் குறித்த தெளிவான புரிதல் கொண்ட திரைப்படங்களே மிக அரிதாக வரும் தமிழ் சினிமாவில், சாதிய அரசியல் பற்றிய திரைப்படங்கள் வந்ததே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வகையில், சாதிய அரசியல் பற்றியும் சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகளின் சுயநலங்கள் பற்றியும் பேசிய முதல் முழுநீள பொலிடிக்கல் த்ரில்லரான ‘உறியடி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிறது.

படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியை ருசிக்காவிடினும் கூட, ரசிகர்களிடமும் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிடமும் பாராட்டை பெற்ற திரைப்படம். இன்றும் ரசிகர்களால் ஒரு cult கிளாசிக் ஆக கருதப்பட்டு வருகிறது ‘உறியடி’.

படம் முடிந்து வெளியே வருகையில் இப்படத்தை தயாரித்து இயக்கி பின்னணி இசையும் அமைத்து (நடித்தும்) இருப்பவர் ஒரு 28 வயது இளைஞர் என்பதை நம்பவே முடியாத அளவிற்கு, சமகால அரசியல் சூழல் மற்றும் நம் சமுதாய கட்டமைப்பு குறித்த பல விஷயங்களை மிக துல்லியமாக காட்சிகளில் பதிவு செய்திருந்தார் இயக்குனர் விஜய் குமார். சாதிக் கட்சிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிய விதம்தான் படத்தின் பெரும்பலம்.
பார்வையாளர்களாகிய நம்மை படத்துடன் மிக எளிதில் ஒன்றிட செய்வது படத்தின் நம்பகத்தன்மையும், மேக்கிங்கில் சின்ன சின்ன விஷயங்களுக்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையுமே ஆகும். 1999இல் நடக்கும் கதை என்பதால் படத்தில் வரும் தாபா, கல்லூரி, ஹாஸ்டல் சுவரில் உள்ள போஸ்டர்கள் முதற்கொண்டு எல்லாவற்றிற்குமே மெனக்கெட்டிருக்கிறார்கள். பொதுவாக நம் சினிமாக்களில் நகரத்து பொறியியல் கல்லூரிகளையே பார்த்து பழகிப் போன நமக்கு, ஒரு டவுண் பகுதியை சேர்ந்த மூன்றாம் தர பொறியியல் கல்லூரியின் சூழலை அப்படியே கண்முன் காட்டியதே மிகவும் புதிதாக இருந்தது.

எந்நேரமும் அடிதடி, குடி போதை என இருந்தாலும் கீழ்சாதியை சேர்ந்த முதியவருக்காக குரல் கொடுக்கும் நாயகனும் அவனது மூன்று நண்பர்களின் கதை ஒரு புறமும்... தங்கள் சாதியினர் எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய துடிப்பது, சாதித் தலைவர் சிலையை வைத்து கலவரத்தை தூண்ட நினைப்பது, தங்கள் லாபத்திற்காக தங்கள் சாதியினரையே கொல்ல துணிவது என அரசியல்வாதிகளின் கதை இன்னொரு புறம் நகர... இந்த அழுக்கு சாதி அரசியல் விளையாட்டில் மாணவர்கள் சிக்கி கொள்வதை பற்றி பேசும் இந்த ஒன்றரை மணி நேர சினிமாவின் திரைக்கதை பரபரவென நகர்கிறது. குடித்துவிட்டு ரகளை செய்வது, பேருந்தில் வாந்தியெடுப்பது, கார்த்திகேயனின் அம்மா ஹாஸ்டலுக்கு வரும் காட்சி என சிரிப்பதற்கும் பல காட்சிகள் உண்டு.

கல்லூரி விடுதியின் குளியலறையில் நடக்கும் ஒரு தாக்குதல், அதை தொடர்ந்து வரும் பழிவாங்கல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் என படத்தின் கடைசி அரைமணி நேரம் சீட்டின் நுனியில் அமரவைக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சாதி சங்கத்தை சாதி கட்சியாக மாற்ற நடக்கும் விஷயங்கள், சாதி சங்க உதவியில் படிக்கும் மாணவர்களிடம் சாதி உணர்வு ஆழமாக விதைக்கப்படுவது போன்ற பல விஷயங்கள் படம் முழுக்க ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘பேண்ட், சட்டை, செருப்பு, சிகரெட்ன்னு எல்லாம் பண்றதுக்கு மட்டும் கீழ் சாதி மக்கள் வேணும்... ஆனா, ஓட்டலுக்குள்ள சாப்பிட விடமாட்டீங்களோ’ போன்ற சின்ன சின்ன வசனங்களும் கதையை சார்ந்ததாகவே இருந்தது.

படத்தில் வரும் பாதி நடிகர்களுக்கும் மேல் அறிமுக நடிகர்களாக இருந்தாலும், கிராமத்து / டவுண் மாணவர்களை மிகவும் யதாரத்தமாக பிரதிபலிக்கும் வகையில் நடித்திருந்த அவர்களது நடிப்பும் மிகப்பெரிய பிளஸ். ஒரு சில காட்சிகளில் வன்முறையும் ரத்தமும் சற்றே அதிகமாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சியும் படமாக்கப்பட்ட விதம் அட்டகாசம். தங்களை அடிக்க வந்த ரவுடிகளை மாணவர்கள் அடிக்கும் அந்த இடைவேளை சண்டைக்காட்சி அத்தனை நேர்த்தியாக இருக்கும். பின்னணியில் ஒலிக்கும் பாரதியின் ‘அக்கினி குஞ்சொன்று கண்டேன்’ பாடல் இன்னும் அதிக பலம் சேர்த்தது. ஒட்டுமொத்த படத்திலும் பெயருக்கு கூட போலீஸ் எங்குமே வராதது மட்டுமே லாஜிக் ரீதியாக ஒரு பெரும் குறை.

சாதிய அரசியல் கட்சிகளின் சுயநலங்கள் பற்றி தன் முதல் படத்திலேயே பேசி முத்திரை பதித்த விஜய் குமாரின் அடுத்தடுத்த படங்கள், இன்னும் பெரிய சமுதாய பிரச்சினைகள் குறித்து பேசும் அத்தியாவசிய சினிமாவாக இருக்குமென்கிற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது!

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்