முகப்புகோலிவுட்

“தணிக்கை சான்றிதழ் பெற கஷ்டப்பட்டேன்” சகா திரைப்பட இயக்குநர் முருகேஷ்

  | February 01, 2019 11:39 IST
Sagaa Movie Release Date

துனுக்குகள்

  • இப்படத்திற்கு சபீர் இசை அமைக்கிறார்
  • இந்த படத்தை செல்வக்குமார் & ராம் பிரசாத் இயக்குகிறார்
  • இப்படத்தை முருகேஷ் இயக்குகிறார்
செல்வக்குமார், ராம்பிரசாத் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கும் திரைப்படம் “சகா”.  இந்த படத்தின் பாடல் வெளியாகி சக்கை போடு போட்டது.  இதில் கடல் படத்தில் அறிமுகமான சரண், கோலிசோடா நாயகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.  இப்படத்திற்கு சபீர் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தைப்பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு மிக இயல்பாக பதிலளிக்கிறார் இயக்குநர் முருகேஷ்….
 
உங்களை பற்றி சொல்லுங்கள்…..
 
“சிறுவயதில் இருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். திரைத்துறைக்கு செல்ல வேண்டும் என்கிற கனவு பள்ளியில் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. நான் 6ம் வகுப்பு படிக்கும் போது “பம்பாய்”,”இந்தியன்” போன்ற படங்கள் என்னை அதிகம் பாதித்தது. அந்த படங்களில் ஏற்பட்ட தாக்கம்தான் என்னை சினிமா துறைக்கு இழுத்து வந்தது. உதவி இயக்குநராக இருந்தேன். படம் தொடங்குவதற்கான வாய்ப்பு அமைந்தது இந்த படத்தை இயக்கினேன். இதற்கு முன்பு இரண்டு படங்களை எழுதி வைத்திருந்தேன். ஆனால் அந்த படங்கள் பட்ஜெட் அதிகமாகும் என்பதையும் நான் அறிந்திருந்தேன்.  இது என்னுடைய மூன்றாவது ஸ்கிரிப்ட்.
 
“சகா”என்று  பெயர் வைத்ததற்கு காரணம்  
 
சகா என்றால் நட்பு.   நட்பை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது  என்பதை நாம் தொடர்ச்சியாக பார்க்க முடியும்.
அந்த பார்முலாவையே நானும் இந்த படத்தில் கையில் எடுத்திருக்கிறேன். அதற்காகவே தான் சகா என்கிற பெயரை நான் தேர்ந்தெடுத்தேன்.
 
இந்த கதைப்பற்றி.
 
இந்த கதை நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சில மனிதர்களிடம் பார்த்த விஷயங்கள்தான். குறிப்பாக 18 வயதில் இருந்து 23 வயதுவரை உள்ள குற்றவாளிகளைப் பற்றிய ஒரு கதை.
சிறைச்சாலையில் 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் சீர் திருத்த பள்ளியிலும், 18 வயதுக்கு மேற்பட்டவர் சிறைச்சாலையிலும் அடைக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் 18 வயது முதல் 23 வயது வரை உள்ள குற்றவாளிகளுக்கு மட்டும் இளம் குற்றவாளிகள் பிரிவு ஒன்று இருக்கிறது, அங்கிருந்துதான் என்னுடைய கதை தொடங்குகிறது. இந்த இளம் குற்றவாளிகளின் கனவு, வெற்றி, தோல்வி, நட்பு பற்றிய விஷயங்களை படம் சொல்லும். கோலிசோடா டீம் பசங்க எல்லாம் நடித்திருக்கிறார்கள்.
 
pgi04ef8

  
இந்த படத்தில் சந்தித்த சவால்கள்…..
 
நிறைய சவால்கள் இருந்தது. படத்திற்காக தேர்தெடுக்கப்பட்ட இடங்களில் இருந்தே சவால்கள் தொடங்கிவிட்டது.  குறிப்பாக தணிக்கை குழுவில் முன்னால் இருந்தவர்கள் படத்தின் 21 நிமிடம் காட்சிகளை நீக்கினால்தான் “ஏ” சான்றிதழ் கொடுக்கப்படும் என்றார்கள்.
 படப்பிடிப்பை விட படம் முடிந்த பிறகு சந்தித்த சவால்கள்தான் அதிகமாக இருந்தது. அத்தனையும் கடந்து நாளை இந்த படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். நிச்சயம் மக்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
 
உங்கள் படங்களோடு மூன்று படங்கள் வெளியாகிறதே
 
ஆமாம்! சர்வம் தாளமயம், பேரன்பு, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளியாகிறது. இந்த படங்களோடு என்னுடைய படமும் வெளியாவதில் எனக்கு மகிழ்ச்சிதான். மக்கள் எல்லா படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். மூன்று படங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் எங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆனாலும் பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டி போடுவது என்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். வேறு வழியும் இல்லாத சூழலில்தான் படத்தை வெளியிடுகிறோம். எல்லா வாரமும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவில் இயல்பாகி விட்டது. மாதத்தில் நான்கு வாரங்களில் கடைசி வாரத்தை சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.
 
 நாளை படம் வெளியாகிறது அதைப்பற்றி…
 
நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு என்னுடைய படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்கும், புதிதாக ஒரு கதைக்களத்தோடு மக்களை சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. நாங்களும் படத்தை திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம். இன்னும் பல படங்கள் எடுக்க வேண்டும். இந்த படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறேன்.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்