முகப்புகோலிவுட்

‘சமூகத்தில் ஒடுக்குமுறை இருக்கக்கூடாது‘ மனம் திறக்கும் ஜி.வி.பிரகாஷ்

  | January 29, 2019 14:02 IST
Gv Prakash

துனுக்குகள்

  • இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்
  • இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருக்கிறார்
  • இந்த படத்தில் நெடுமுடி வேணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சர்வம் தாளமயம்‘.இப்படத்தை லதா மேனன் தயாரிக்க, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை வெளியிட்டிருக்கிறது.  இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். தரமான சம்பவங்களை பேச, வரும் 1ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.  இப்படத்தின் முன்னோட்டம் பார்த்ததும் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷை சந்தித்து இப்படத்தில் பணியாற்றி அனுபவம் குறித்து பேசினேன்.
 
‘சர்வம் தாளமயம்‘ கதைக்குள் நீங்கள் எப்படி…..

ஒரு சின்ன பையனாக இருக்க வேண்டும்.  அதே சமயம் இசையைப் பற்றி தெரிந்தவனாக இருக்க வேண்டும்.   உண்மையாகவே மிருதங்கம் வாசிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.  இப்படி அவர் நினைத்த பீட்டர் ஜான்சன் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அவர் நினைத்ததன் வெளிபாடுதான் நான் இந்த படத்தில் பீட்டர் ஜான்சனாக வந்ததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து….
இந்த படத்தில் ஒரு யதார்த்தமான கேரக்டர் தான் பீட்டர் ஜான்சன்.  இதற்காக நான் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்தேன்.  முறையாக மிருதங்கம் கற்றுக்கொண்டு  நம்பிக்கையோடு நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வரும் கடமையான உழைப்பு இந்த படத்திற்கு இருந்தது.  இந்த படத்திற்காக இந்தியா முழுவதும் நான் பயணித்திருக்கிறேன்.  இப்படி எல்லா விஷயமும் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தையே தந்திருக்கிறது. 
 
இந்த படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் என்ன…..

இந்த படத்தில் எல்லாமே சவாலான ஒன்றுதான்.   நான் ஒரு பியானிஸ்ட், நான்  மிருதங்கம் வாசித்தது கிடையாது. பியானோ வாசிக்க விரல்களை பயன்படுத்துவதற்கும், மிருதங்கம் வாசிக்க விரல்களை பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.  என்னை அதிலிருந்து உடைத்து மீண்டும் முதல் முறையாக இசையை  கற்றுக்கொள்ள வைத்தார் இயக்குநர். ஓர் ஆண்டு மிருதங்கம் கற்றுக்கொண்டேன்.

இந்த கதையை கேட்டதும் நீங்கள் என்ன நினைத்தீர்கள்….

முதல் முறை இந்தக் கதையை கேட்கும் போது எனக்கு உன்மையாகவே உணர்வு பூர்வமாக இருந்தது.  மிருதங்கம் தயார் செய்யக் கூடியவர்கள்   எந்த சமூகத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களால் அதை வாசிக்க முடியாது என்று ஒன்றும் இல்லை.  திறமைசாலிக்கு சமூகம் ஒரு பிரச்சனை இல்லை என்பதை இந்த படம் சொல்லும் அரசியலாக நான் பார்க்கிறேன்.

இந்த படத்தில் உங்களை பாதித்த காட்சி எது……….

இந்த படத்தில் நான் மிருதங்கம் கற்றுக்கொள்ள ஒரு மிருதங்க வித்வான் வீட்டிற்கு செல்லும் போது கேட்டிற்கு வெளியிலே தடுத்து நிறுத்தப்படுவேன்.   இந்த காட்சியில் நடித்தது,  அரசியலாகவும், உணர்வு பூர்வமாகவும் எனக்கு பிடித்திருந்தது. எல்லா இசையும் ஒன்றுதான் என்றாலும் கர்நாடக இசையை தூக்கிபிடிக்கும் சமூகம் தானே இது. 

அரசியல் இருக்கத்தானே செய்கிறது அதைப்பற்றி…

சில இடங்களில் அந்த மாதிரி இருக்கலாம்.அதை உடைத்து வெளியே வரவேண்டும் என்பதை சொல்வதற்குதான் இந்த கதை. கர்நாடக இசையை உயர்த்திப் பிடிக்கும் அரசியலை உடைப்பதைதான் இப்படம் பேசுகிறது.    எல்லா இசையும் எல்லோருக்கும் பொதுவானது என்பதுதான் என்னுடைய கருத்து.

மூத்த கலைஞர்களோடு வேலை பார்த்த அனுபவம் பற்றி...

நெடுமுடி சார்  நடிப்பதில் ஜாம்பவான், ஏ.ஆர்.ரகுமான் சார் இசையுலகில் ஜாம்பவனாக இருப்பவர். இவர்கள் இருவரோடும் பணி புரிந்தது எனக்கு  கிடைத்த நல்ல வாய்ப்பு. இருவரும் எனக்கு குருவாக இருந்து  வழி நடத்தினார்கள். உண்மையாகவே இரண்டு ஜாம்பவான்களோடு வேலை பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 
இந்த படத்தைப்பற்றி உங்கள் பார்வை…….

இசையை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வருவது மிகமிகக்குறைவு என்று நான் நினைக்கிறேன்.  குறிப்பாக இசைக் கலாச்சாரத்தை கொண்டாட வேண்டும்.  நம்முடைய தாய் மொழி எவ்வளவு நமக்கு முக்கியமோ அதே போல் இசையும் நமக்கு முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

கர்நாடக இசை தமிழ்க் கலாச்சாரத்தோடு சேர்ந்ததா……..

தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் இந்த இசையை மையமாக வைத்து இயங்குகிறது.  தெலுங்கில் இருந்து தியாகராஜர் கீர்த்தனைகள் வந்தாலும், தமிழிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள்.  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பிலிருந்து இந்த இசை இருக்கிறது.  அப்போது எல்லாம் ஒன்றாக தானே இருந்தது.  ஆகவே இந்த இசையும் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
உங்களுடைய அடுத்த படங்கள் குறித்து……

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ‘ஜெயில்‘ என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் மிகப்பெரிய அரசியலை பேச இருக்கிறோம். பெரும்பான்மையாக இருக்கும் அடிதட்டு மக்கள் சமூகத்தைப் பற்றி பேசும் படமாக இருக்கும். ஐங்கரனில் அங்கீகாரம் கிடைக்காத ஒரு விஞ்ஞானியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.  இப்படி தொடர்ந்து சமூகம் உரையாடக்கூடிய படங்களில் நடித்துவருகிறேன்.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்…..

நம்முடைய மொழிக்கான அதிகாரத்தை எந்த இடத்திலும் நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது.  தமிழை உரக்க பேச வேண்டும்.  சமூகத்தில் ஒடுக்குமுறை இருக்கக்கூடாது என்பதுதான்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்