முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி பிறந்தநாள்; ஒரு கத சொல்லட்டுமா சார்... #HBDVijaySethupathi

  | January 17, 2019 12:27 IST
Vijay Sethupathi

அவரது வாழ்க்கை முழுவதும் நல்ல படங்கள் தரவேண்டுமென்ற கோரிக்கையோடு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம். ஹாப்பி பர்த் டே விஜய் சேதுபதி சார்....

இது ஒரு நடிகனின் கதை. படித்து முடித்துவிட்டு ஒரு இளைஞன் துபாய்க்கு சம்பாதிக்க போகிறான். அங்கு போன கொஞ்ச நாள்ல அந்த வேலை, அவனுக்கான வேலை இல்லைன்னு உணர்கிறான். வேலைய விட்டுவிட்டு சென்னை திரும்புகிறான். வந்த இடத்துல சில வேலைகள் பார்க்க தொடங்குகிறான். ஆனால் அதுலயும் அவனுக்கு ஆர்வம் இல்லை. ஒரு நாள் தன்னோட வேலை விஷயமா கூத்துப்பட்டறைக்கு போறான். அங்க நடிகர்கள் நடிக்க பழகுறதையும், தங்கள தாங்களே தயார் படுத்திகிறதையும் பார்க்கிறான். நடிப்பு மேல ஆர்வம் வருது. அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு குடும்பம் இருந்துச்சு. கிட்டதட்ட முப்பது வயசுல யாரா இருந்தாலும் ஒரு நிரந்தர வருமானம் வர்ற ஒரு வேலைய தேர்ந்தெடுப்பாங்க. ஆனா அந்த இளைஞன் நடிப்ப தேர்ந்தெடுத்தான். முறையா பயிற்சி எடுத்து, வாய்ப்பு தேட ஆரம்பிச்சான். கிடைச்ச வாய்ப்ப ஒன்னுவிடாம பயன்படுத்தினான். டிவி சீரியல், நாடகம், ஜூனியர் ஆர்டிஸ்ட், குறும்படம்னு கிடைச்ச எல்லாத்துலையும் தன்னோட சிறப்பான நடிப்ப  கொடுத்தான். முகமும் வெளிய வரல, அடையாளமும் கிடைக்கல. நாளாக நாளாக முகம் வெளிய வந்துச்சு. முயற்சிய விடல. குறும்படம் மூலமா அடையாளமும் கிடைக்க ஆரம்பிக்குது. இருந்தாலும் தன்னோட நோக்கத்துக்காக போராட்டத்த விடல. பின் ஒருநாள், தன்னோட விடா முயற்சியால ஒரு படத்துல நாயகனா அறிமுகம் ஆனான். அது ஒரு சின்ன படம். பெருசா வரவேற்பு கிடைக்கல. இவ்வளவு நாள் உழைப்புக்கு அப்புறம் வந்த படத்த யாரும் பார்க்க வரலையேன்னு அவன் வருத்தபடல. முன்னவிட அதிகமா உழைக்க ஆரம்பிச்சான். சில படங்கள் அவன் கைக்கு வந்துச்சு. அதேநேரம் அவனோட முதல் படத்துக்கு தேசிய விருதும் கிடைச்சுது. மொத்த மக்களோட கண்ணும் அவன் மேல விழ ஆரம்பிக்குது. மக்கள் ஒவ்வொருவரும் அவனோட பேர தெரிஞ்சிக்க ஆரம்பிக்கிறாங்க. அந்த வருடமே அவன் நாயகனா நடிச்ச அடுத்த படம் வெளியாகுது. அவ்வளவு தான். தமிழ்நாடு முழுவதும், பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெயர் சென்று அடையுது. அந்த பெயர் " விஜய் சேதுபதி".. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேது சார்....

2010 ல் வந்த தென்மேற்கு பருவக்காற்று மூலம் நாயகனாக, நடிகனாக அறிமுகமான விஜய்சேதுபதி முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை முன்பதிவு செய்துகொண்டார். 2012 ல் வெளியான சுந்தரபாண்டியன் படத்திற்கு சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்டை வென்றார். அதே வருடம் வெளியான "பீட்சா" படம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று கொடுத்தது. அதுபோக பலரின் விமர்சனம் பெற்று அவருடைய திரை பயணத்தில் முக்கியமான வெற்றியாக ஆனது. அதே வருடம் வெளியான "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் "என்னாச்சு....” எனும் வசனத்தை தமிழ் நாட்டில் கொஞ்ச காலம் தாரக மந்திரமாக மாற்றினார். ஒரே வசனம் , ஒரே மாடுலேஷனாக இருந்தாலும் முழு படத்திலும் அந்த வசனத்திற்கு கைதட்டல் வாங்கியது விஜய்சேதுபதி எனும் நடிகனுக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. அது போக, சுந்தரபாண்டியனுக்கு 1, பீட்சா 2, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 3 என மொத்தம் 6 விருதுகளை 2012 ல் வென்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அடுத்த வருடம் சூது கவ்வும், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா வெளியாகி ஹிட்டடித்தது. விஜய் சேதுபதிக்காகவே படம் பார்க்கிறேன் எனும் அளவுக்கு ரசிகர் படையை உருவாக்கினார்.

வரிசையாக குறும்பட இயக்குநர்களின் படங்களில் நடித்த விஜய்சேதுபதி, 2014ல் குறும்படத்தில் இருந்து முழு நீள திரைப்படமான "பண்ணையாரும் பத்மினியும்" படத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார். 2015ல் S.P. ஜனநாதன் இயக்கத்தில் நடித்த "புறம்போக்கு" திரைப்படம் அவரது திரைபயணத்தில் முக்கியமான படமாக இடம் பிடித்தது. அதே வருடத்தில் வெளியான "ஆரஞ்சு மிட்டாய்" படத்தின் மூலம் தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரம் எடுத்து தன் திறமையை தனித்திறமையை நிரூபித்தார். அங்கிருந்து நானும் ரௌடி தான் , சேதுபதி, கககபோ, இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என டபூல் ஹாட்ரிக் அடித்தார்.
கடந்த 5 ஆண்டுகளாய் தமிழ் சினிமாவில் அதிக படம் நடித்த நாயகன் விஜய் சேதுபதி தான். தன்னை எந்த ஒரு வட்டத்துக்குள்ளும் அவர் அடைத்ததே இல்லை. கவண், விக்ரம் வேதா என மாஸ் ஹிட் அடித்த போதிலும் அவர் மாஸ் வட்டத்துக்குள் தன்னை அடைத்து கொள்ளவில்லை. ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் தான் விஜய் சேதுபதி. இடைவிடாமல், வித்தியாசமான கதைளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டே இருக்கிறார். சில படங்கள் தோற்கும் போதிலும் அவர் நடிப்பை அவர் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். தற்போது ஹேட்டர்ஸ்களே இல்லாத ஹீரோ என்றால் அது "மக்கள் செல்வன்" தான்.

மிகச்சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அதில் தனக்கான பங்கை சரியாக கொடுத்து வருகிறார். தயாரிப்பாளராக அவர் பேனரில் வெளியான "மேற்கு தொடர்ச்சிமலை" அவர் சினிமாவின் மேல் கொண்ட காதலை காட்டுகிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு முழு நீள காதல் படத்தில் நடித்து, அதை ரசிக்க வைப்பது ஒரு சவாலான விஷயம். அதையும் வெற்றிகரமாக "96” படத்தின் மூலம் நிகழ்த்தி காட்டினார். அதே நேரத்தில் வெளியான "சீதக்காதி"யில் "96” படத்திற்கு நேர்மாறான ஒரு இறுக்கமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் வாழ்ந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். "பேட்ட" படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து பல நடிகர்களின் கனவையும் தனதாக்கினார்.

தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் வெளிவர இருக்கும் "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் அவர் திருநங்கையாக நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்ததிலிருந்தே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. கூடவே "கடைசி விவசாயி" படமும் அவரது நடிப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்பது ரசிகர்களின் கருத்து. தற்போது இருக்கும் பெரிய, சிறிய நாயகர்களால் அடைய முடியாத இடத்தை ரசிகர்களிடம் பெற்றுவிட்டார் "விஜய் சேதுபதி". தமிழ் சினிமாவில் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் நடிகர்கள் உருவாகியுள்ளனர். சிவாஜி , கமல் போலவும், அதே நேரத்தில் தனக்கென தனி ரசிகர் கூட்டம் சேர்க்காமலும் தனிப்பாதையில் விஜய் சேதுபதி வெற்றி நடை கட்டிகொண்டிருக்கிறார். இதே போல் அவரது வாழ்க்கை முழுவதும் நல்ல படங்கள் தரவேண்டுமென்ற கோரிக்கையோடு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம். ஹாப்பி பர்த் டே விஜய் சேதுபதி சார்....

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்