முகப்புகோலிவுட்

'ஜி.வி.எம் சார் காம்பினேஷன்ல ஒர்க் பண்ணனும்' - மனம் திறக்கும் சிபி சத்யராஜ் #Exclusive

  | May 18, 2020 15:43 IST
Sibi Sathyaraj

துனுக்குகள்

 • நிச்சயம் கதைக்களம் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்
 • ஆனால் அது உண்மை இல்லை. அப்பாவோட ரொமான்ஸ் வேற ஸ்டைலில் இருக்கும்
 • கௌதம் வாசுதேவ் மேனன் காம்பினேஷன்ல அவருடைய பாணியில் நிச்சயம் ஒரு படத்தில்

புகழ்பெற்ற உயரமான நடிகர் சத்யராஜின் மகன் தான் நடிகர் சிபி சத்ய ராஜ். சென்னை லயோலா கல்லூரியில் Commerce முடித்தார். ஆனால் தந்தையை போலவே நடிப்பில் ஆர்வம் கொண்டதால் இயக்குநர் செல்வா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'ஸ்டுடென்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது அவர் NDTV தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியை பின்வருமாறு காணலாம்..

பேட்டின்னு வந்தாலே இதான் முதல் கேள்வியா இருக்கும்.. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல.. So.. முதல் கேள்வி.. நடிக்க ஆர்வம் வந்தது எப்போது..? ஏன். (அப்பாவை தவிர)..?

சின்ன வயசுல இருந்து எனக்கு சினிமா பார்க்க பிடிக்கும், குறிப்பாக அப்பா படங்கள் வெளியான உடனே பார்த்து விடுவேன். ஆனா நான் basic-கா கொஞ்சம் shy type, கூச்ச சுபாவம் உள்ள பையன். அதனால் நீயும் அப்பாவை போல நடிக்கப் போகிறாயா ? என்றும் யாரும் கேட்டால் இல்லை என்று தான் பதில் சொல்வேன். ஆனால் அப்பா நடிக்கும் படங்களை பார்த்து நிறைய கருத்துக்கள் சொல்வேன். 
எப்போது ரசிகர்கள் கைதட்டினார்கள், எப்போது ரசிகர்கள் ரசிக்கவில்லை என்று எல்லாவற்றையும் அப்பாவுடன் பகிர்வேன் ("சினிமாவை ரசிக்கும் தன்மை எனக்குள் இருந்திருக்கிறது"). அதன் பிறகு நான் 11ம் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நிறைய கலைநிகழ்ச்சிகள் கலந்துகொள்வேன். அதுவே என்னை பிற்காலத்தில் சினிமாவில் இணைய வழிவகுத்தது.      

'லீ', நிச்சயம் உங்களுக்கு பிரேக் கொடுத்த ஒரு திரைப்படம். ஆதலால் இயக்குநர் பிரபு சாலமன் மற்றும் அந்த படம் குறித்து சில வரிகள்...    

நிச்சயமா.. லீ எனக்கு ஒரு முக்கியமான திரைப்படம். என்னோட முதல் படம் ஸ்டுடென்ட் நம்பர் ஒன் ஒரு தெலுங்கு படத்தோட ரிமேக் தான், அதுதான் ராஜமௌலி சார்ரோட முதல் படம். ஜூனியர் என்.டி.ஆர் நடிச்சுருப்பாங்க, அது தெலுங்குல பெரிய பிளாக் பஸ்டர். அதே சமயம் தமிழ்ல வெளியான ஸ்டுடென்ட் நம்பர் ஒன் அந்த சீசன்ல வெளியான படங்களில் Box office ஹிட் கொடுத்துச்சு. அதன் பிறகு மக்களிடையே கொஞ்சம் பரிட்சயம் பெறுவதற்காக அப்பாவோடு இணைந்து சில படங்கள் நடித்தேன். அதிலும் குறிப்பாக ஜோர் எனக்கு நல்ல ஒரு தளத்தை கொடுத்தது. 

அதன் பிறகு எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பிரேக் தேவைப்பட்டது, அதற்காக சொந்த தயாரிப்பில் உருவான படம் தான் 'லீ'. நிச்சயம் கதைக்களம் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நிறைய இயக்குநர்களை நான் தேடினேன். அந்த நேரத்தில் வெளியான படம் தான் கரண் நடிப்பில் பிரபு சாலமம் இயக்கிய கொக்கி. மிக குறைந்த பட்ஜெட்டில் ஒரு சிறந்த படமாக அதை பிரபு சாலமோன் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவரை தொடர்புகொண்டு பேசியபோது கிடைத்தது தான் லீ திரைப்படம்.

கதைக்களம் வித்தியாசமாக இருந்தது, நானும் அதற்கு முன்பு அப்பாவுடன் இணைந்து அவர் பாணியில் நக்கல், காமெடி போன்ற விஷயங்களை செய்துவந்த நிலையில் எனக்கென்று தனி பாணியை ஏற்படுத்த இந்த படம் வழிவகுத்தது. அதிலும் அந்த படம் வெளியானபோது தமிழக அளவில் பல திரையரங்குகளில் முதல் வாரம் முழுமையாக புக் செய்யப்பட்டு பெரிய அளவில் வெற்றி கண்டப் படமாக அமைந்தது. நிச்சயம் அந்த படத்தை கொடுத்ததற்காக நான் பிரபு சாலமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 
 
நாணயம் மற்றும் போக்கிரி ராஜா ஆகிய இரண்டுமே உங்களை பற்றி பெரிய அளவில் பேசவைத்த படம். ரெண்டுமே நெகடிவ் Shade உள்ள படம். உங்களுக்கு எது இயல்பாக வருகிறது ஹீரோயிசமா..? வில்லத்தனமா..?

of course நாணயம் அப்புறம் போக்கிரி ராஜா ரெண்டு படத்துலயும் நெகடிவ் ரோல் தான். எப்போவுமே எந்த ஹீரோவுக்கும் நெகடிவ் ரோல் நடிக்கிறப்ப நிறைய ஸ்கோப் கிடைக்கும். ஏன்னா ஹீரோவுக்கு சில லிமிடேஷன் இருக்கும், ஆனா அந்த லிமிடேஷன் நெகடிவ் ரோல் நடிக்கிறவங்களுக்கு ஸ்கிரிப்ட்ல இருக்காது. அதனால இயக்குநர் ஒத்துழைத்தால் நம்ம சுதந்திரமா நடிக்கலாம். அந்த சுதந்திரம் எனக்கு நாணயம் படத்தின் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் மற்றும் போக்கிரி ராஜா இயக்குநர் ராம்பிரகாஷ் ஆகிய இருவரிடமும் கிடைத்தது.  

இரண்டு படங்களும் box office வெற்றியை பெறவில்லை என்றாலும், நான் நடித்த 'பாரீட்' மற்றும் 'கூலிங் கிளாஸ் குணா' ஆகிய இரு கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த இரண்டு இயக்குநர்களுக்கும் எனது நன்றிகள். குறிப்பாக எனக்கு ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வெற்றிப்படமாகவும் come back படமாகவும் அமைந்தது நாய்கள் ஜாக்கிரதை. அந்த படம் எனக்கு கிடைக்க உதவியாக இருந்தது நாணயம் திரைப்படம் தான். ஏன் என்றால் அந்த படம் மூலம் தான் எனக்கு சக்தி சௌந்தராஜன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.
 
அதேபோல எனக்கு தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்கள் நடிக்க இப்போது விருப்பம் இல்லை. அதாவது வில்லனாக இல்லாமல், நெகடிவ் ஹீரோவாக நடிக்க விருப்பம் உள்ளது. அதேபோல இப்பொது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்க ஆர்வம் உண்டு. ஏன் என்றால் உலகமே இப்போது உலகமயமாக்களை நோக்கி செல்லும் நேரத்தில் நடிகர்களும் எல்லாம் மொழிகளிலும் நடிக்க வேண்டும். நானும் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் ஒரு பெரிய ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க தயாராக உள்ளேன். 

அப்பா கிட்ட இருக்கின்ற ஒரு குணம்.. ஆனால் அந்த குணம் எனக்கு வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம் என்ன..?

சிறு புன்னகையுடன்... அப்பாகிட்ட எல்லாமே நல்ல பழக்கங்கள் தான் இருக்கு, ஆனால் அப்பா எப்போதுமே வருவதை எடுத்துக்கொண்டு அது போகிற போக்கில் போகட்டும் என்றும் நினைப்பவர். அதாவது ஒரு goal செட் பண்ணி அத நோக்கி போகாம நமக்கு கிடைக்கிறத வச்சு சிறப்பாக வாழணும்னு சொல்வாங்க. அதனால அப்பாவோட அந்த மனநிலை எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். 

ஏன்னா எனக்கு வந்து இதுதான் வேணும்னு அப்படினு டார்கெட் Fix செஞ்சு செயல்படனும். of course வாய்ப்புகள் வரப்ப அத நோக்கியும் செயல்படும் இருந்தாலும் மனசுல ஒரு லட்சியம் அப்படினு Fix பண்ணி செயல்படணும்னு நான் நினைப்பேன், ஆனா அப்பா அதை நினைக்கமாட்டாரு. அப்பா மாதிரி easy going மனப்பக்குவம் எனக்கும் இருக்கு, ஆனா அவர் அளவுக்கு இல்லை...    
 
சத்யராஜ் சார் வில்லனா நடிச்ச ஒரு படத்தில் உங்களுக்கு ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைச்ச எந்த படத்துல நடிப்பீங்க..?

நிறைய படங்கள் இருக்கு, ஆனா கண்டிப்பா அதுல வில்லன கதாபாத்திரத்தை விட ஹீரோ கதாபாத்திரம் வலிமையாக இருக்கணும். அப்படி பார்த்தால் நான் 'நூறாவது நாள்' படம் தான் choose பண்ணுவேன். அந்த படத்தில் அப்பாவுக்கு சிறய வேடம் தான் என்றபோது அந்த படத்தில் அப்பாவுடைய கதாபாத்திரம், அவருடைய தோற்றம் மற்றும் அந்த சிவப்பு நிற Jacket எல்லாம் நன்றாக இருக்கும். அதுவும் அந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் போல இருக்கும். ஒரு கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருப்பார் மற்றொரு கதாபாத்திரத்தில் மோகன் சார் நடித்திருப்பார். ஆகையால் அந்த இரு வேடத்தில் எது கிடைத்தாலும் நடிக்கலாம். 

சினிமாவை பொறுத்தவரை, சத்யராஜ் சார் தனக்கு வரவே வராதுன்னு சொல்ற விஷயம் Romance, உங்களுக்கு எப்படி..? On Screenனில் உங்களுக்கு சிறப்பாக செட் ஆகுற ஹீரோயின் யாரு..?   

ஆமாம், அப்பா நிறைய பேட்டிகளில் தனக்கு ரொமான்ஸ் வராது என்று கூறியுள்ளார். ஆனால் அது உண்மை இல்லை. அப்பாவோட ரொமான்ஸ் வேற ஸ்டைலில் இருக்கும். பொதுவாக ஒரு ரோஜா பூ கொடுத்து காதலை சொன்னால் அதுதான் ரொமான்ஸ் என்று நாம் படங்களில் பார்த்து பழகி இருப்போம். ஆனால் அப்பா நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் எல்லாம் காதல் கதை தான் அதில் அப்பா சிறப்பாக நடித்திருப்பார்.

அதேபோல எனக்கு ஒரு முழுநீள காதல் கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. நான் நடிக்கும் படங்களில் காதல் இருக்கும் ஆனால் இதுவரை முழுநீள காதல் கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. கட்டாயம் நல்ல இயக்குநர்கள் அமையும் பட்சத்தில் நடிப்பேன். கௌதம் வாசுதேவ் மேனன் காம்பினேஷன்ல அவருடைய பாணியில் நிச்சயம் ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். 

எனக்கு... on screenல செட் ஆகுற கதாநாயகி யாருனு மக்கள் தான் சொல்லணும்...

SI சத்யா இப்போ ACP வால்டர்... நிச்சயம் வால்டர் உங்க கேரியர்ல நீங்க மறக்க முடியாத திரைப்படம். அந்த படத்தை பற்றி சில வரிகள்.. குறிப்பாக சமுத்திரக்கனி மற்றும் நட்டி பற்றி...

சமீபத்தில் வெளியான வால்டர் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு திரைப்படம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அப்பாவின் திரையுலக வரலாற்றல் அவருக்கு கிடைத்த பல வெற்றி படங்களில் மிகப்பெரிய வெற்றி படம் வால்டர் வெற்றிவேல். ஆதனால் அந்த படத்தின் தலைப்பில் ஒரு பகுதியை எனது படத்திற்கு வைக்கும்போது பெருமையாகும் அதே சமயத்தில் மிகப்பெரிய பொறுப்பாகவும் எனக்கு தெரிந்தது. 

வால்டர் படத்தின் கதையை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. எனக்கும் நடிப்பு ரீதியாக ஒரு சவாலாக இருந்தது. ஏன் என்றால் முழுமையாக ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நான் நடித்ததில்லை. நாய்கள் ஜாக்கிரதை மற்றும் ஜாக்சன் துரை போன்ற படங்களில் நான் SI வேடத்தில் நடித்திருந்தாலும் போலீஸ் உடையில் வரும் நேரம் குறைவாகவே இருந்தது. ஆனால் வால்டர் படம் முற்றிலும் வேறுபட்டது. அதே போல அந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் நட்டி ஆகியோருடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஏன் என்றால் கதைக்கு எப்போதும் பலம் சேர்ப்பது முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் தான். இருவருமே இப்போது ஹீரோவாக நடிக்கின்றனர். குறிப்பாக சதுரங்க வேட்டை படத்தில் அவர் நடித்த பிறகு, நான் நட்டி சார் விசிறி ஆகிவிட்டேன். அதே சமயம் வால்டர் படத்தை பொறுத்தவரை ஒரு சிறிய வருத்தம் என்ன என்றால் படம் வெளியான மூன்றாவது நாளே கொரோனா காரணமாக படம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த மூன்று நாளில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பெரிய அளவில் இருந்தது. இணைய வழியில் பலர் என்னை வெகுவாக பாராட்டினார்கள்.  

மேலும் இந்த படத்தில் ஒரு சில பகுதிகள் படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்டது. நிச்சயம் இந்த லாக் டவுன் காலம் முடிந்தது அந்த விடுபட்ட சில பகுதிகள் சேர்க்கப்பட்டு ரிலீஸ் ஆகா வாய்ப்புகள் உள்ளது.      
  
வால்டருக்கு பிறகு பலரும் எதிர்பார்க்கும் இரண்டு படங்கள் மாயோன் மற்றும் கபடதாரி, அந்த படங்கள் குறித்த சுவாரசிய அப்டேட் எங்களுக்காக... மேலும் இசைஞானியோடு உங்கள் பயணம் குறித்து சில வரிகள்..

வால்டர் படத்திற்கு பிறகு தற்போது நான் நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் ரங்கா, கபடதாரி, மாயோன், வட்டம் மற்றும் ரேஞ்சர். இந்த ஐந்து படங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத கதைக்களம் உள்ள படங்கள் எனது கதாபாத்திரமும் அப்படியே, முற்றிலும் மாறுபட்டு இருக்கும். நான் 3ம் வகுப்பு படித்தபோது அப்பாவின் பிரம்மா திரைப்படத்தின்போது இசைஞானி இளையராஜா அவர்களை சந்திக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. 

ஒரு நடிகனாக அவருடைய இசையில் நடிக்க வேண்டும் என்ற அந்த நீண்டகால ஆசை மாயோன் படத்தின் மூலன் நிறைவேறியுள்ளது. அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது.  

இது ஆர்வத்தின் மிகுதியில் முளைத்த கேள்வி.. நீங்க உயரமா..? இல்ல அப்பா உயரமா..? ரெண்டு பேருடைய Height என்ன சார்..?

உயரத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், அப்பா என்னை விட அரை இன்ச் உயரம் குறைவுதான்.. (சிறு புன்னகை).. நான் 6 அடி 2 இன்ச் அப்புறம் அப்பா 6 அடி 1.5இன்ச் தான்..

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com