முகப்புகோலிவுட்

உண்மை சம்பவங்களால் அதிரவைத்த ‘தீரன்’ – நிஜமும், படமும்!

  | November 19, 2017 22:26 IST
Theeran Adhigaaram Ondru Movie Review

துனுக்குகள்

  • எல்லா தரப்பு மக்களிடமும் ஊடகங்களிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது
  • ‘பவேரியா’ இனத்தைப் பற்றி காட்டிய விதத்தில் பெரிதும் ஈர்க்கிறார் இயக்குனர்
  • அவசியமான விஷயங்களை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார் H.வினோத்
இரண்டு நாட்களுக்கு முன் வெளியான நடிகர் கார்த்தியின் ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ திரைப்படம் எல்லா தரப்பு மக்களிடமும் ஊடகங்களிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காட்சிக்கு காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்த இத்திரைப்படம், உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டது.

1995ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை, தமிழகமெங்கும் நடந்த கொடூரமான கொலை கொள்ளை சம்பவங்களை செய்த வடநாட்டை சேர்ந்த ‘பவேரியா’ கூட்டத்தை தமிழக காவல்துறை அதிகாரிகள் எப்படி திட்டமிட்டு பிடித்தார்கள் என்பதை சொல்கிறது ‘தீரன் – அதிகாரம் ஒன்று’. பல மாநிலங்களில் இந்த குற்றவாளிகள் மீது வழக்குகள் இருந்தாலும் கூட, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உழைத்து அவர்களைப் பிடித்தது தமிழக காவல்துறையே!

தமிழக, கர்நாடக, ஆந்திர நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த வீடுகளில் இருந்த மக்களைக் கொன்று கொள்ளையடித்த கும்பல், ஜனவரி 2005இல் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ சுதர்சனத்தின் மரணத்திற்கு காரணமான பின் அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் அதிரடி நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிடப்பட்டது. இதே கும்பல் காங்கிரஸை சேர்ந்த தாளமுத்து நடராஜன் (சேலம்), தி.மு.க.வை சேர்ந்த கஜேந்திரன் ஆகியோரது மரணத்திற்கும் காரணமாக இருந்தனர். இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.ஆர்.ஜாங்கித் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு, உத்திர பிரதேச காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையின் உதவியோடு இந்தியா முழுவதும் அலைந்து ஓம் பிரகாஷ் பவேரியா உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளைப் பிடித்தனர்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இத்திரைப்படம், காவல் துறை மற்றும் காவல் அதிகாரிகள் குறித்த சில வாதங்களுக்கும் கூட வழிவகுத்துள்ளது. ‘இவ்ளோ நேர்மையான போலீஸ் அதிகாரிங்க எல்லாம் இருப்பாங்களா என்ன?’ என சந்தேகப்படுபவர்கள் கூட, ‘கடமை தவறாத காவல் அதிகாரிகள், இன்றும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்’ என்கிற ஆச்சர்யத்தோடு படம் முடிந்து வெளியேறுகிறார்கள். காவல் அதிகாரிகளின் இயல்பு வாழ்க்கையையும், அவர்கள் நேர்மையாக இருக்க முடியாமல் போவதற்கான காரணங்களையும், அவர்களை தங்கள் கடமைகளிலிருந்து தவற செய்யும் இந்த சிஸ்டத்தையும், அவர்கள் தரப்பு நியாயத்தையும் பேசிய திரைப்படங்களை எல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில், 'தீரன் - அதிகாரம் ஒன்று' சற்றே ஸ்பெஷல் ஆன ஒரு போலீஸ் திரைப்படம். இது ஒரு வழக்கமான கமர்ஷியல் போலீஸ் திரைப்படம் அல்ல என்பதே இத்திரைப்படத்தின் தனித்துவம். காவல் அதிகாரிகள் தங்கள் தினசரி வேலைகளில் சந்திக்கும் நடைமுறை பிரச்சினைகளையும், காவல்துறைக்குள்ளேயே இருக்கும் அரசியலைத் தாண்டி அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பதையும் காட்டிய விதமே மிகவும் புதிதாக இருந்தது.

‘பவேரியா’ இனத்தைப் பற்றி காட்டிய விதத்திலும் பெரிதும் ஈர்க்கிறார் இயக்குனர். ‘இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், அவர்களுக்கு ஆளத் தெரியாது’ என்கிற பிம்பத்தை உருவாக்க இருநூறுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்களை ‘குற்றப் பரம்பரை’ என பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கியதில் தொடங்கி, ராஜ்புட் போர்களில் ‘பவேரியா’ இன மக்களின் பங்களிப்பையும் அதன் பின்னர் அவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்கள் ஆக காரணமானது பற்றியும் மிக விரிவாக கூறியிருந்தார் இயக்குனர். கிட்டத்தட்ட ‘பவேரியா’ மக்களின் வரலாறையும், அவர்கள் ஒடுக்கப்பட்டதையுமே ஒரு முழுநீள சுவாரஸ்யமான படமாக எடுத்திருக்கக்கூடிய அளவிற்கு ஸ்கோப் இருந்தபோதிலும், தனது கதைக்கு அவசியமான விஷயங்களை மட்டுமே மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் H.வினோத். இவ்வளவு தகவல்கலையும் சேகரிக்கவே, அவருக்கு எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ தெரியவில்லை!

திரைக்கதையைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ஒரு திரைப்படமாக கொடுத்திருந்தார் இயக்குனர். சாதாரண காட்சிகளைக் கூட, கதை சொல்லிய விதத்தின் மூலம் ரொம்பவே புதிதாக காட்டியிருந்தார். பல காட்சிகளில், பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவந்துவிட்டார். குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளைப் பொறுத்தவரையில், ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளை கொண்டிருந்தது. தன் பாத்திரத்தின் தேவை என்ன என்பதையும், காட்சியின் தேவை என்ன என்பதையும் புரிந்து நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர் – நடிகர் கார்த்தி. ‘என்ன மாமா, சௌக்கியமா’ என இன்னமும் ‘பருத்திவீரன்’ ஹேங்-ஓவரிலேயே சில மசாலா படங்களில் நடித்து வந்தாலும் கூட, ‘மெட்ராஸ்’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ என அவர் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இயல்பாக நடித்த படங்களின் வரிசையில் ‘தீரன்’ உண்டு!

ஒரு உண்மை சம்பவத்தை எவ்வளவு இயல்பாக திரையில் கொண்டு வரவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே மிக முக்கியமான (மக்களாலும், அரசாலும் அதிகம் நினைவில் கொள்ளப்படாத) ஒரு வழக்கை காலத்தால் அழியாத ஒரு சினிமா பதிவாக கொடுத்த விதத்திலும் ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ ஒரு முக்கியமான திரைப்படமாக கொண்டாடப்படும்!
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்