முகப்புகோலிவுட்

சூப்பர்ஹிட் பட தொடர்ச்சியில் நயன்தாராவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்..?

  | June 24, 2020 09:16 IST
Keerthy Suresh

தனது நடிப்பில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய கீர்த்தி சுரேஷ், ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சண்டகோழி 2 என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அதையடுத்து, 2018-ஆம் ஆண்டில் நடிகையர் திலகம் (மகாநடி) படத்தில் புகழ்பெற்ற நடிகை சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், இப்படத்துக்காக  சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார்.

கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து சமீபத்தில், பெரும் எதிர்பார்ப்புடன் அமேசானில்  வெளியான ‘பென்குயின்' திரைப்படம், சமநிலையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப்பெற்று வருகிறது. ஆனால், ஒரு தாயாக அவரது நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், கோபி நைனார் இயக்கவிருக்கும் ‘அறம்-2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளதால் இப்போது கோலிவுட்டில் ஒரு பரபரப்பான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் வெளியான ‘அறம்' ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு குழந்தையின் மீட்பு பணியில், நயன்தாரா கலெக்டராக சக்திவாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாமல் வணிக ரீதியான வெற்றியையும் பெற்றது.

‘அறம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நயன்தாராவும் இதன் தொடர்ச்சியாக நடிப்பார் என்று கூறப்பட்டது, ஆனால் பேச்சுக்கள் பலனளிக்கவில்லை. பின்னர் சமந்தாவை அணுகியதாக கூறப்பட்டுவந்த நிலையில், இப்போது கோபி கீர்த்தி சுரேஷுடன் புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அவர் தனது ஒப்புதலைக் கொடுப்பாரா என்பது வரும் நாட்களில் மட்டுமே அறியப்படும் என்றும் கூறப்படுகிறது.

தனது நடிப்பில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த', ரங் தே, குட் லக் சகி என கைவசம் மூண்று படங்களை வைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com