முகப்புகோலிவுட்

லக்ஷ்மியும் மன்மதனும் | அறச்சீற்றத்தின் முரண் மூட்டைகள்

  | November 15, 2017 18:39 IST
Lakshmi Short Film

துனுக்குகள்

 • பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றது
 • பெண்களை கேலிப்பொருளாக பகடி செய்யும் சமுதாயம்
 • ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள உறவுமுறை சிக்கல்களை கூறும் குறும்படம்

2004ஆம் ஆண்டு நவம்பர் 4இல் மன்மதன் என்று ஒரு திரைப்படம் வெளியாகிறது, அதன் நாயகனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக 200 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி வெற்றி பெறுகிறது.
எந்த சலசலப்பும் இல்லை.

2017ஆம் ஆண்டு லக்ஷ்மி எனும் ஒரு குறும்படம் வெளியாகிறது (இணையத்தில்). இணைய வெளியில் அதன் கதையை முன் வைத்து அருவருப்பாக பகடி செய்யப்படுகிறது
.
தினமும் எரிந்து விழும் அக்கறையற்ற கணவன் தன்னை விட்டு பிறிதொரு பெண்ணிடம் தொடர்பு கொள்வதை அறியும் பெண் பிறிதொரு ஆடவனுடன் ஒரு நாள் எதிர்பாராவிதமாக உடலுறவு கொள்கிறாள்.

இதை கண்டித்து அந்த படத்தில் நடித்த பெண்ணை நேரடியாக அருவருப்பான முறையில் பகடி செய்யும் அளவிற்கு செல்கிறது, கலாச்சார சீர்கேடு, இது தான் பெண்ணியமா என ஆலோசனைகளுக்கும் குறைவில்லை.
இப்போது மன்மதனுக்கு வருவோம்.
 
simbu manmadhan


ஆணை ஏமாற்றி பிறருடன் உடலுறவு கொள்ளும் பெண்களை தேடித்தேடி நாயகன் கொல்வதே அப்படத்தின் கதை.

ஆனால் இவ்வளவு தூரம் யோசித்து கதை எழுதிய மகான்களுக்கு, உடலுறவு கொள்வதற்கு இருவர் தேவை எனும் அடிப்படை உண்மை தெரியவில்லை அல்லது தெரிந்தும் வசதியாக அதை மறந்துவிட்டனர்.

கள்ளக்காதல், நல்லக்காதல் என சொல்லப்படும் எந்த ஒரு உறவுக்கும் சம பங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கிறது. ஆனால் மன்மதன் படத்தில் ஆணை பற்றிய கேள்வியே இல்லாமல் இதற்கு முழுமையாகவே பெண் தான் காரணம் எனும் பிற்போக்குத்தனமான முன்முடிவில் எழுதப்பட்டிருந்தது.

இதில் ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் 2004க்கும் 2017க்கும் பதிமூன்று ஆண்டுகள் வித்தியாசம், ஆனால் 2004 ஆண்டிலேயே ஆண் பலருடன் உறவுகொள்வதை ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு சமூகத்தால் ஏன் 13 ஆண்டுகள் கழித்து வெளியாகும் ஒரு படத்தில் ஆணும் பெண்ணும் ஒரே விஷயத்தில் ஈடுபடும் போதும் பெண் செய்வது மட்டுமே குற்றமென ஏன் இத்தனை எல்லை மீறிய வசவுகள்.

சரியா தவறா எனும் இடத்திற்கே நாம் செல்லவேண்டாம், அது அவரவர் அந்தரங்கம் சமந்தப்பட்டது, ஆனால் 2004 ஆண்டில் இந்த கோபம் சற்றும் வராத இந்த சுரணையற்ற சமூகத்திற்கு இப்போது மட்டும் எங்கிருந்து கோபம் பொத்துக்கொண்டு வருகிறது ?

அதுவும் அந்த கோபம் அந்த பெண்ணை மட்டுமே சுற்றி கட்டமைக்கப்படுவதில் இருக்கும் உள்நோக்கமென்ன ?
தமிழ்நாடு முழுதும் திரையரங்கில் வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்ந்த படங்கள் இனித்த நிலையில், வலைதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் படத்தை தேடி எடுத்து பார்த்துவிட்டு நம் சமூகம் நசுக்க முயற்சிப்பது எதை ?

அதே குறும்படத்தில் ஆண் மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பதாக அறியும் போது உங்களுக்கு ஏற்படாத அதிர்வும் அதிர்ச்சியும் பெண் என்பதால் மட்டும் தோன்றுவது எந்த வகையான கேவலமான மனப்பிறழ்வு?

தன் மனைவிக்கு தெரியாமல் அவளை ஏமாற்றி பிறிதொரு பெண்ணிடம் ஒரு ஆண் உடலுறவு கொள்ளும்போது வராத ஆத்திரம் ஒரு பெண் செய்யும்போது மட்டும் வந்தால் பிரச்சனை யாரிடம், கலாச்சாரம் எனும் பெயரில் ஒரு வர்க்கம் செய்வதை ஆதரிப்பதும் அதே விஷயத்தை இன்னொரு வர்க்கம் செய்யும் போது குய்யோ முறையோ என குதிப்பதற்கு ஆங்கிலத்தில் fraud/ மோசடிக்காரர் என்று பெயர்.

ஒரு கலைப்படைப்பை கலையாக காணாமல் அதில் நடித்தவர்களை நேரடியாக தாக்கி பகடி எனும் பெயரில் அந்த கலைஞர்களை நசுக்குவது எத்தனை வன்மம் வாய்ந்த செயல்.
சரியோ தவறோ, அதை நிறுவும் முயற்சியில் ஒரு நேர்மை தேவைப்படுகிறது, ஒருவரை விமர்சிக்கும் போது கண்ணியம் தேவை.

மங்காத்தா படத்தில் விநாயக் சஞ்சனாவை காதலித்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு பெண்ணான சோனாவுடன் கலவி பயில்வதை ஒரு சிரிப்புடன் கடக்க முடிந்த நம்மால் இதை ஏன் கடக்க முடியவில்லை, ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படத்தில் இது போன்ற காட்சிகளை நம்மால் நகைச்சுவையாக கடந்திருக்க முடியுமா, கலாச்சாரம் கெட்டு விட்டது என அப்போது கூக்குரலிட்டிருப்போம் தானே.

இங்கு நாம் கோவப்படும் இடங்களை உற்று நோக்கினாலே, எப்படி ஆண் வர்க்கத்திற்கு மட்டும் வசதியான சாய்வாக இந்த கலாச்சாரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என அறியலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எதெல்லாம் தவறு என சமூகம் எண்ணியதோ அது இப்போது சரி, இன்று தவறு என நாம் கருதும் விஷயங்களின் நிலை ஐம்பது ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்று நமக்கு தெரியாது.
இதில் நியாயத்தை கண்டடைவது இருபுறமும் இருக்கும் மக்களின் மனம் திறந்த வன்மமற்ற உரையாடலின் மூலம் மட்டுமே சாத்தியம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com